சொந்த கட்சி எம்.பியை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர்? முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?
ஆம் ஆத்மி கட்சி பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பியை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர்?
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் சுவாதி மலிவால். தற்போது டெல்லி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் தன்னை தாக்கியதாக சுவாதி மலிவால் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசாரின் கூற்றுப்படி, முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து இரண்டு அழைப்புகள் வந்துள்ளன. காலை 9.30 மணிக்கு வந்த அழைப்பில், ஆம் ஆத்மி கட்சி பெண் ஸ்வாதி மலிவால் என்று கூறிக் கொண்டு, காவல்துறைக்கு அங்கிருந்த முதல்வரின் அவசர அழைப்பில் இருந்து போன் செய்துள்ளார். அப்போது, முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மலிவால் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். உடனே முதல்வரின் வீட்டிற்கு வந்த டெல்லி போலீசார் ஸ்வாதி மலிவால் அங்கு இல்லை என்று தெரிவித்தனர்.
Also Read : CBSE 12th Result: சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 87.98% மாணவர்கள் தேர்ச்சி!
என்ன நடந்தது?
இதுகுறித்து டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதலமைச்சரின் வீட்டில் தான் தாக்கப்பட்டதாக ஒரு பெண் எம்பியிடம் இருந்து சிவில் லைன்ஸில் காலை 9:34 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. தன்னை முதல்வரின் உதவியாளர் தாக்கியதாக கூறினார். காவல்துறைக்கு வந்த முதல் அழைப்பில் முதல்வர் இல்லத்தில் இருப்பதாகவும், அங்கு முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார் என்னை தாக்கியதாக கூறினர்” என்று தெரிவித்தனர். முதல்வரின் வீட்டில் இருந்து வந்த அழைப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எழுத்துப்பூர்வ புகார் எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாஜக தரப்பில் கூறுகையில், “ஆம் ஆத்மி பெண் எம்பி ஸ்வாதி மலிவாலை முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் தாக்கியதாக செய்திகள் வெளிவந்தன. இது வெட்கக்கேடானது. அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் நடந்த சம்பவத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது” என்று தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளராக பிபவ் குமார் இருந்தார். அரசு பணிக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில் கடந்த மாதம் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 2007ல் அரசு அதிகாரியை வேலை செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாகவும் பிபவ் குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : வாக்குப்பதிவின்போது அரங்கேறிய அசம்பாவிதங்கள்.. ஆந்திராவில் பரபரப்பு!