மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்க.. அமித் ஷாவிடம் வலியுறுத்திய திருமாவளவன்!
Chambal Mosque survey: உத்தரப் பிரேதசத்தில் உள்ள மசூதி ஆய்வை உடனே நிறுத்த வேண்டும் என வி.சி.க எம்.பி தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமித் ஷாவிடம் தொல். திருமாவளவன் எம்.பி கடிதம் அளித்துள்ளார்.
உத்தரப் பிரேதசத்தில் உள்ள மசூதி ஆய்வை உடனே நிறுத்த வேண்டும் என வி.சி.க எம்.பி தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமித் ஷாவிடம் தொல். திருமாவளவன் எம்.பி கடிதம் அளித்துள்ளார். அந்தக் கடிதத்தில், “வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் சம்பல் ஜாமா மஸ்ஜித்தில் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள மசூதி ஆய்வின் போது நடந்த வன்முறை சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். சம்பந்தப்பட்ட பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதித்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
திருமா அளித்த கடிதத்தில் இருப்பது என்ன?
மேலும் கடிதத்தில், “சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
நவம்பர் 24 சம்பவங்கள், குறிப்பாக போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையின் தவறான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் தேசத்தின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : சம்பல் வன்முறை.. 4 பேர் மரணம்.. மசூதி ஆய்வில் நடந்தது என்ன?
சம்பல் வன்முறை
உத்தப் பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பலில் ஷாகி ஜமா மஜ்ஜித் என பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த மஜ்ஜித்-ஐ ஆய்வு செய்ய இஸ்லாமியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக நடந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
16ஆம் நூற்றாண்டு மசூதி
முன்னதாக, நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அதிகாரிகள் மஜ்ஜித்-ஐ ஆய்வு செய்ய அங்கு சென்றனர். அப்போது, 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி மஜ்ஜித்-ஐ ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்தக் குழப்பங்களுக்கு இடையே போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த வன்முறை தொடர்பான வழக்கில் சமாஜ்வாதி எம்.பி ஒருவர் மீதும் உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர வன்முறையில் ஈடுபட்டதாக 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பலில் உள்ள மசூதி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : உத்தர பிரதேசத்தில் பதற்றம்.. அதிகாரிகள் மீது கல்வீச்சு.. மசூதியில் ஆய்வுக்கு சென்றபோது மோதல்!