One Nation One Election: மத்திய அமைச்சரவை கிரீன் சிக்னல்.. நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா விரைவில் தாக்கல்!
Election 2024: கடந்த 2019ம் ஆண்டு 73வது சுதந்திர தினத்தையொட்டி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை பிரதமர் மோடி முதல்முதலாக முன்வைத்தார். தொடர்ந்து, 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தின்போதும் பிரதமர் மோடி இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ( டிசம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடருக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் முக்கிய கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து இனி நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம்.
ALSO READ: Supreme Court: தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சணை சட்டம்.. உச்சநீதிமன்றம் வருத்தம்!
ஒரே நாடு ஒரே தேர்தல்:
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலக்கட்டத்தில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மசோதா சட்டமான பிறகு, இந்தியாவில் ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் சிராக் பாஸ்வான் போன்ற கட்சிகள் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
ஆரம்பத்திலிருந்தே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை இந்தியாவில் சட்டமாக இயற்றப்பட வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜக உறுதியுடன் இருந்து வருகிறது. இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்தால் தற்போதுள்ள தேர்தல் அமைப்பை மாற்றுவது என்பது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதற்கு நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதும் மிக முக்கியம். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய சுமார் 6 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட வேண்டும். இவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ம் ஆண்டு 73வது சுதந்திர தினத்தையொட்டி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை பிரதமர் மோடி முதல்முதலாக முன்வைத்தார். தொடர்ந்து, 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தின்போதும் பிரதமர் மோடி இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். இதை தொடர்ந்து, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான கோவிந்த் கமிட்டி அறிக்கை மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் 18ம் தேதி ஒப்புதல் அளித்தது.
கோவிந்த் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் செலவும், அதன்பின் நடந்த சட்டசபை தேர்தல்களின் செலவும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. அதேநேரத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், இந்த செலவானது 50:50 என்ற விகிதத்தில் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.
பணமும், நேரமும் மிச்சம்:
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசும் பாஜக கூறுவதாவது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பணமும், நேரமும் மிச்சமாகும். நிர்வாக அமைப்பு நடைமுறையை கையாளும் என்பதால், பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிக நேரம் கிடைப்பதால், மேலும் மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்ய முடியும். அதேநேரத்தில், தேர்தல் பணி காரணமாக அரசு பணிகளிலும் சிக்கல் ஏற்படாது என்று கூறுகிறது.
முன்னதாக, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நேற்று ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. பிரதமரின் தலைமையில் புகழ்பெற்ற, வளமான மற்றும் சக்திவாய்ந்த இந்தியா கட்டமைக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையூறாக ஒன்று இருக்கிறது, அது அடிக்கடி தேர்தல். நாட்டில் வேறு ஏதாவது நடக்கிறதோ இல்லையோ, தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு ஐந்தாண்டுகளுக்கும் தொடர்கின்றன.
ALSO READ: 3D Brain Maps: உலகிலேயே முதன்முறை.. மனித மூளையின் 3D படங்களை வெளியிட்ட ஐஐடி மெட்ராஸ்!
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு சட்டசபை தேர்தல் வரும். ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்போது டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை முன்னெடுத்து, மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது.” என தெரிவித்தார்.