Wayanand Landslide: வயநாடு நிலச்சரிவு.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்.. பிரதமர் மோடி அறிவிப்பு!
Wayanad Rain Landslide: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முன்னதாக, கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து தொலைப்பேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது மீட்பு பணிகளுக்கு மத்திய அசு முழு உதவியை வழங்கும் என்றும் உறுதி அளித்தார்.
வயநாடு நிலச்சரிவு: கேரளாவின் வயநாடு மலைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேம்பாடு மற்றும் சூரல்மலை அருகே அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முதலில் அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர், அதிகாலை 4.10 மணியளவில், மாவட்டத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேம்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த 500 குடும்பங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்பு படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை விமான தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
Also Read: ஜார்க்கண்டில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகளின் நிலை என்ன?
மத்திய மற்றும் வடக்கு கேரளாவில் குறைந்தது 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்றடைவதில் சிக்கல் நிலவுகிறது. தற்போது புல்டோசர்கள் மூலம் சரிந்து கிடக்கும் மண்ணை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. வயநாடு மாவட்டத்துக்கு 5 அமைச்சர்களை முதல்வர் பினராயி விஜயன் அனுப்பி வைத்துள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ், பழங்குடியின மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஓ.ஆர்.கேலு, வனத்துறை அமைச்சர் கே.சசீந்திரன், துறைமுகத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் வயநாட்டுக்கு விரைந்துள்ளனர்.
நிவாரணம் அறிவிப்பு:
நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்ததோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து தொலைப்பேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
அப்போது மீட்பு பணிகளுக்கு மத்திய அசு முழு உதவியை வழங்கும் என்றும் உறுதி அளித்தார். மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Also Read: காலையிலேயே அதிர்ச்சி.. வயநாடு பகுதிகளில் நிலச்சரிவு… 19 பேர் உயிரிழப்பு!
மேலும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மீட்புப் பணிகள் குறித்து பேசினேன். அனைத்து ஏஜென்சிகளுடனும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். மத்திய அமைச்சர்களிடம் பேசி வயநாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.