New Chief Minister Atishi: டெல்லியின் புதிய முதல்வர்.. யார் இந்த அதிஷி மெர்லினா.? அரசியலில் கடந்து வந்த பாதை என்ன? - Tamil News | who is Atishi Marlena set to replace Arvind Kejriwal as new chief minister of delhi | TV9 Tamil

New Chief Minister Atishi: டெல்லியின் புதிய முதல்வர்.. யார் இந்த அதிஷி மெர்லினா.? அரசியலில் கடந்து வந்த பாதை என்ன?

Updated On: 

17 Sep 2024 14:55 PM

அதிஷி மர்லினா: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்க உள்ளார். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரு மாநிலத்தை வழிநடத்தும் இரண்டாவது பெண் முதல்வரும் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

New Chief Minister Atishi: டெல்லியின் புதிய முதல்வர்.. யார் இந்த அதிஷி மெர்லினா.? அரசியலில் கடந்து வந்த பாதை என்ன?

டெல்லி முதல்வர் அதிஷி (Photo Credit: PTI)

Follow Us On

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவை முன்னிட்டு நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், அவர் முதல்வர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்திருக்கிறது. இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவித்தார். அதன்படி, இன்று மாலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதற்கு முன்னதாக அடுத்த முதல்வர் தேர்ந்தெடுப்பது குறித்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த அதிஷி?

அதிஷி டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். டெல்லியில் முதல் பெண் முதல்வரான ஷ்மா ஸ்வராஜ், இரண்டாவதாக ஷீலா தீட்சித் இருந்த நிலையில், மூன்றாவது பெண் முதல்வராக அதிஷி உள்ளார். அதிஷி டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வர் மட்டுமல்ல, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரு மாநிலத்தை வழிநடத்தும் இரண்டாவது பெண்மணியும் ஆவார். இந்த நிலையில், இவர் கடந்து வந்த பாதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரிய நபராக உள்ளார்.

Also Read: பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள்.. தலைவர்கள் வாழ்த்து!

1981ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி பிறந்தார். அவரது பெற்றோர்களான விஜய் சிங் மற்றும் த்ரிப்தா சிங் இருவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்கள். டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் தனது பள்ளியை முடித்த அதிஷி, டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.2003ஆம் ஆண்டு செவனிங் ஸ்காலர்ஷிப் மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை:

பின்னர் 2005ல், ஆக்ஸ்போர்டில் உள்ள மாக்டலன் கல்லூரியில் கல்வி ஆராய்ச்சிக்காகச் சென்றார். அதிஷிக்கும் கல்வியில் அனுபவம் உண்டு. அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, ஆந்திராவில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆசிரியராக பணியாற்றினார். 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் அதிஷி இணைந்தார். ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களில் அதிஷியும் ஒருவர். ஆம் ஆத்மியின் ஆரம்பகால கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய குரலாக மாறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினரான அவர், 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை மணீஷ் சிசோடியாவிற்கு கல்வித்துறை தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் ஆலோசராக இருந்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லியில் போட்டியிட்ட இவர், பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீரிடம் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து, 2020 சட்டப்பேரவை தேர்தலில் தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றார் அதிஷி.

2023ஆம் ஆண்டு கல்வி, பொதுப்பணித்துறை, கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மதுபான கொள்கை வழக்கில் அப்போது துணை முதலமைச்சராக இருந்து மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் அமைச்சரானார்.  கெஜ்ரிவால் சிறையில் சென்ற பிறகு செய்திகளில் அதிகம் இடம்பெற்றவர். கெஜ்ரிவால் சிறையில் இருக்கும்போது பல்வேறு பொறுப்புகளை கவனித்து வந்தார்.

Also Read: மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்ற மம்தா.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் சிறையில் இருந்தபோது கட்சி பணிகளை கவனித்தார். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின நிகழ்வில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கான பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அதிஷி எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பது புரிந்து கொள்ள முடியும்.  இவரை தான் தற்போது கட்சி மேலிடம் டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version