மாதம் ரூ.7,000 சம்பளம், எல்.ஐ.சி.யில் பணி.. முழு விவரம்
LIC Bima Sakhi Yojana: எல்.ஐ.சி பீமா சகி யோஜனா திட்டத்தில் மகளிருக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வரை மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணைவது எப்படி? மாதச் சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
எல்.ஐ.சி பீமா சகி யோஜனா விண்ணப்பம்: பிரதமர் நரேந்திர மோடியால் பீமா சகி யோஜனா என்ற திட்டம் திங்கள்கிழமை (டிச.9, 2024) தொடங்கப்பட்டது. இது பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) லட்சியத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்தத் திட்டத்தில், ஒரு ஆண்டுக்குள் 1,00,000 பீமா சகியை சேர்ப்பதே திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இந்தத் திட்டம், கிராமப்புற பெண்கள் காப்பீட்டு முகவர்களாக ஆவதற்கும், வாழ்வாதாரம் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது. மேலும், எல்ஐசி பீமா சகி யோஜனா நாட்டில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் காப்பீட்டு பெறுவதை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
எல்.ஐ.சி.யின் இந்த முயற்சியானது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நிதி பாதுகாப்பு தொடர்பான பரந்த இலக்குகளுக்கும் பங்களிக்கிறது.
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு படித்த 18 முதல் 70 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். எல்.ஐ.சி.யின் முதன்மை நோக்கம் ஒரு லட்சம் பீமா சகிகளை (தோழி) உருவாக்கி பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது ஆகும். மேலும், இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக 3 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் இணையவுள்ளனர்.
சம்பளம் எவ்வளவு?
இந்தத் திட்டத்தில், பங்கேற்கும் மகளிருக்கு பாலிசி விற்பனையில் இருந்து உரிய கமிஷன்கள் வழங்கப்படும். அத்துடன், முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு நிலையான உதவித்தொகையும் வழங்கப்படும்.
இந்த நிதி உதவித் தொகை முதல் ஆண்டு ரூ.7 ஆயிரமும், இரண்டாம் ஆண்டு ரூ.6 ஆயிரம் ஆகவும், 3ஆம் ஆண்டு ரூ.5 ஆயிரமாகவும் இருக்கும்.
இதையும் படிங்க : வீடு கட்டப் போறீங்களா? லோன் வேணுமா? இந்த 10 வங்கியை நோட் பண்ணுங்க!
கல்வி மற்றும் வயது தகுதி
எல்.ஐ.சி பீமா சகி திட்டத்தில் விண்ணப்பிக்க 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதே நேரம் 50 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மேலும், 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி ஆகும்.
கிராமப்புற பெண்களுக்கு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கனவே உள்ள முகவர்கள் மற்றும் ஊழியர்களின் உறவினர்களும் இந்தத் திட்டத்தில் பயன் பெற தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தத் திட்டத்தின் விண்ணப்பம் தொடர்பான முழுமையான தகவல்கள் எல்.ஐ.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு அருகில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தை அணுகவும்.
இதையும் படிங்க : ரூ.1,751 கோடி.. பி.எம் விஸ்வகர்மா யோஜனா.. யாருக்கு கடன் கிடைக்கும்?