Travel Tips: காஞ்சிபுரத்தில் காண வேண்டிய சுற்றுலாத் தலங்கள்..!
Kancheepuram Travel Tips: தமிழகத்தின் தலைநகரம் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது காஞ்சிபுரம். மிகவும் பழமை வாய்ந்த நகரமான காஞ்சிபுரத்தை சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முன்பு தொண்டைமான் ஆட்சி செய்து இருக்கிறார். ஐம்பெருங்காப்பியமான மணிமேகலை இந்நகர் பற்றிய குறிப்பு இருக்கிறது. பாலாற்றின் துணை நதியான வேகவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்த நகரம். பட்டுக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் என்னென்ன?
தமிழகத்தின் தலைநகரம் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது காஞ்சிபுரம். தமிழ்நாட்டின் புனித யாத்திரை ஸ்தலமாக இந்த காஞ்சிபுரம் விளங்குகிறது. இந்த மாவட்டம் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்று. இங்கு இருக்கும் கோயில்கள் அனைத்தும் பிரம்மாண்டமாகவும் கட்டட கலைக்கு பெயர் பெற்றதாகவும் விளங்குகிறது. பல்லவ வம்சத்தின் தலைநகராக விளங்கியது இந்த மாவட்டம். இங்கிருக்கும் பெரும்பாலான கோயில்கள் பல்லவ காலத்தில் கட்டப்பட்டதாகும். 3 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை காஞ்சி பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது.
இத்தகைய சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் என்னென்ன சுற்றுலா தளங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முதலியார் குப்பம் படகு குழாம்:
கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த படகு குழாம் காஞ்சிபுரம் மழைத்துளி படகு இல்லம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் படகு சவாரி, கயாக்கிங், வாட்டர் ஸ்கூட்டிங், வேக படகு சவாரி என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. ஒடியூர் ஏரியில் அமைந்துள்ள கடற்கரை தீவிற்கு மோட்டார் படகு மூலமாக பயணம் மேற்கொள்ளலாம்.
இங்கு நூற்றுக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகளை காணலாம். மேலும் ஹெரான், டெர்ன் போன்ற பல்வேறு வெளிநாட்டு பறவைகளையும் காணலாம். இது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 89 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 77 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.
அரசு அருங்காட்சியகம்:
தென்னிந்திய பழங்கால எச்சங்களை ஆய்வு செய்வதற்கான சிறந்த இடம் காஞ்சிபுரம். வைணவம், சைவம், பௌத்தம் மற்றும் சமண மதம் இங்கு தலைதோங்கி இருந்ததை அதன் நினைவு சின்னங்கள் மூலம் கண்டறிய முடிகிறது. எனவே இந்த அருங்காட்சியத்தில் தொல்பொருள், மானுடவியல், புவியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் நாணவியல் சார்ந்த பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு காஞ்சிபுரத்தின் வரலாறு மற்றும் கலாச்சார அம்சங்களை தெளிவாக அறிந்து கொள்ளலாம். இது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அறிஞர் அண்ணா நினைவு இல்லம்:
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான அண்ணாதுரை வாழ்ந்த இல்லம் அவரது மறைவுக்குப் பின்னர் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு அவரது புகைப்படங்கள், சிலை மேலும் அவர் பயன்படுத்திய பொருள்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள இந்த நினைவு இல்லம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Also Read: Travel Tips: கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!
ஓரிக்கை மண்டபம்:
காஞ்சி சங்கர மடத்தின் 68 வது மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி நினைவாக கட்டப்பட்ட கருங்கல் மண்டபம். இங்கு இவரின் கருவறை அமைந்துள்ளது. முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட 12 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட இந்த மண்டபம் நூறு அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய கல் தூண்களை கொண்டது. இந்த மண்டபத்தில் 50 டன் எடையில் ஒரே கல்லாலான நந்தி சிலை உள்ளது.
இந்த மண்டபத்தின் முகப்பில் உள்ள ராஜகோபுரமும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
காஞ்சி குடில்:
நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை இந்த இல்லத்தில் அழகாக காட்சி படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்க முலாம் பூசிய ஓவியங்கள், ரவி வர்மாவின் ஓவியங்கள், ஆதிகாலத்து பொருட்கள், வெண்கல சிலைகள், வெள்ளி சிலைகள், கடிதங்கள், சொப்பு சாமான்கள், மர பொம்மைகள், ஓலைப் பொருட்கள், பழைய காலத்து சமையல் பாத்திரங்கள், பிராமி எழுத்துக்கள் போன்ற பொருள்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.
இது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கோயில்கள்:
இங்கு காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தேவராஜ சுவாமி கோயில், கைலாசநாதர் கோயில், காஞ்சி காமாட்சி பீடம், ஏகாம்பரநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், தென்னங்கூர் பாண்டு கோயில், கச்சபேஸ்வரர் கோயில், உலகநாத பெருமாள் கோயில், பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயில், விஜயராகவ பெருமாள் கோயில் ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய முக்கிய திருக்கோவில்கள் ஆகும்.
Read Also: புதுக்கோட்டை சுற்றியுள்ள டூர் ஸ்பாட்கள்.. இந்த இடமெல்லாம் போய் இருக்கீங்களா?