5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Travel Tips: மலைகளின் இளவரசி.. கொடைக்கானலில் ஒரே நாளில் என்னவெல்லாம் பார்க்கலாம்?

Kodaikanal Trip: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7300 அடியில் அமைந்திருக்கிறது. இயற்கை கொடுத்த கொடைகளில் ஒன்று தான் இந்த கொடைக்கானல். அங்கு நிலவும் ரம்யமான வானிலையும் இயற்கை சூழலும் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும். எழில் கொஞ்சும் கொடைக்கானலில் ஒரு நாளில் அனைத்து சுற்றுலா தளங்களையும் பார்த்து விடலாம்.

Travel Tips: மலைகளின் இளவரசி.. கொடைக்கானலில் ஒரே நாளில் என்னவெல்லாம் பார்க்கலாம்?
பில்லர் ராக்ஸ் (Photo Credit: Mohamed Muzammil)
Follow Us
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Updated On: 18 Sep 2024 19:07 PM

காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் எங்கே செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இயற்கை கொடுத்த கொடை, மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஒரு விசிட் அடியுங்கள். திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல். இது கடல் மட்டத்திலிருந்து 7300 அடியில் அமைந்திருக்கிறது. அங்கு நிலவும் ரம்யமான வானிலையும் இயற்கைச் சூழலும் நெஞ்சத்தை கொள்ளை கொள்ள செய்கிறது. எழில் கொஞ்சும் கொடைக்கானலில் என்னென்ன சுற்றுலா தளங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:

கொடைக்கானல் மலை ஏறும் பொழுது முதல் சுற்றுலா தளமாக அமைந்திருக்கிறது டம் டம் பாறை வியூ பாயிண்ட். இது கொடைக்கானல் நகரத்திற்கு சுமார் 38 கிலோமீட்டர் முன்பாக அமைந்திருக்கிறது. இங்கிருந்து கொடைக்கானல் பள்ளத்தாக்குகளை பார்க்க முடியும். மேலும் மஞ்சளாறு மற்றும் தலையார் நீர்வீழ்ச்சிகளின் அற்புதமான காட்சிகளை இங்கிருந்து காண முடியும். இதன் அருகே சாலை மிகவும் வளைவாக இருப்பதால் மிக கவனமுடன் செல்ல வேண்டும். இதற்கான நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. அங்கிருந்து சுமார் 33 கி.மீ பயணித்தால் ஆர்ப்பரிக்கும் சில்வர் நீர்வீழ்ச்சி நம்மை வரவேற்கும். இது 180 அடிக்கு மேல் உயரம் கொண்ட கம்பீரமான அருவி.

பயணத்தின் போது சோர்வடைந்த பயணிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை வழங்குகிறது. நுரை கலந்த வெள்ளை நீர் பாறைகள் மீது மோதும் காட்சி நம்மை வசீகரிக்கும். இங்கு நுழைவு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.

நீர்வீழ்ச்சியின் மடியில் சற்று இளைப்பாரி விட்டு அங்கிருந்து சுமார் 9 கி.மீட்டர் பயணித்தால் கொடைக்கானல் ஏரியை அடையலாம். அங்கு படகு சவாரி செய்வதற்கு இரண்டு நபர்களுக்கு ₹200, நான்கு நபர்கள் சவாரி செய்வதற்கு ₹300 மற்றும் 6 நபர்கள் சவாரி செய்வதற்கு ₹400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 30 நிமிடங்கள் மட்டுமே படகு சவாரி செய்ய முடியும். அதற்கு மேல் எடுத்துக் கொண்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

படகு சவாரியின் போது பொழியும் சிறு சாரல் மனதுக்கு இதமாய் அமையும். இதை முடித்துவிட்டு வெளியே வந்தால் குதிரை சவாரி செய்வதற்கு விருப்பம் உடையவர்களுக்கு குதிரைகள் தயாராக நின்று கொண்டிருக்கும். தூரத்தின் அடிப்படையில் இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்பு அங்கிருந்து சுமார் 500 மீட்டர் நடந்து சென்றால் பிரையண்ட் பூங்காவை அடையலாம்.

சுமார் 20 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்த பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு ₹25 மற்றும் பெரியோர்களுக்கு ₹50 வசூலிக்கப்படுகிறது. பல வண்ண மலர்கள் உங்கள் மனதை புத்துணர்ச்சி அடைய செய்யும். குழந்தைகள் ஓடி ஆடி விளையாட ஒரு சிறந்த இடம். இங்கு மலர் கண்காட்சி ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். பின்பு அங்கிருந்து 600 மீட்டர் நடந்தால் கோக்கர்ஸ் வால்க் இன்னும் இடத்தை அடையலாம்.

மலைகளின் செங்குத்தான சருகுகளில் செதுக்கப்பட்ட நடைபாதை. இந்த நடைபாதையில் நடந்து கொண்டு ரம்மியமான இயற்கை காட்சிகளை கண்டு களிக்கலாம். இதற்கு நுழைவு கட்டணமாக ₹20 வசூலிக்கப்படுகிறது.

பிறகு அங்கிருந்து 2.5 கி.மீ பயணித்தால் அப்பர் லேக் வியூ பாயிண்ட் என்னுமிடத்தை அடையலாம். இங்கிருந்து நட்சத்திர வடிவிலான ஏரியை காணலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

பிறகு அங்கிருந்து 3 கி.மீ பயணித்தால் அரசு ரோஜாத் தோட்டத்தை காணலாம். 12 ஏக்கர் அமைந்திருக்கும் இந்த பூங்காவில் பல்லாயிரக்கணக்கான ரோஜாக்களை காணலாம். இதற்கு நுழைவு கட்டணமாக ₹50 வசூலிக்கப்படுகிறது.

Also Read: Ramanathapuram Mangrove Forest: இயற்கை எழில் கொஞ்சும் காரங்காடு.. சூப்பரான சுற்றுலா தளம்

பிறகு ரோஜா தோட்டத்திலிருந்து சுமார் 5 கி.மீ பயணித்தால் பில்லர் ராக் சாலையை அடையலாம். இந்தச் சாலை ஒரு வழி பாதை ஆகும். 5 சுற்றுலா தளங்களைக் கொண்ட இந்தச் சாலை மாலை 4 மணிக்கு மூடப்படும். எனவே அதற்கு முன்பாக இந்த இடத்தை அடைய வேண்டும். இந்த சாலையில் முதலாவதாக பார்க்க வேண்டியது மோயர் பாயிண்ட்.

இது பேரிஜம் ஏரி சாலை மற்றும் கொடைக்கானல் சாலையை இணைக்கிறது. இந்த இடத்தில் இயற்கை எழில் சூழ்ந்த அருமையான பள்ளத்தாக்கினை காணலாம். இது காட்டுப்பகுதியின் தொடக்கமாக இருக்கிறது. இதற்கு நுழைவு கட்டணமாக ₹10 வசூலிக்கப்படுகிறது.

அங்கிருந்து 1.5 கி.மீ பயணித்தால் பைன் மரக்காடுகளை அடையலாம். ஓங்கி வளர்ந்த பைன் மரங்களும் பறவைகளின் சிணுங்குதல்களும்‌ நம்மை இயற்கையோடு கட்டி போட செய்கிறது. இதற்கு நுழைவு கட்டணமாக ₹10 வசூலிக்கப்படுகிறது. இங்கிருந்து 1.3 கி.மீ பயணித்தால் குணா குகை என்று அறியப்படும் சாத்தானின் சமையலறையை அடையலாம்.

இது மிகவும் புகழ்மிக்க சுற்றுலா தலமாகும். குகைக்குள் செல்ல அனுமதி இல்லை. வெளியே நின்றபடி ரசிக்கலாம். இதற்கு நுழைவு கட்டணமாக ₹10 வசூலிக்கப்படுகிறது.
அங்கிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது பில்லர் ராக்ஸ் (Pillar Rocks). இதற்கு இரண்டு பாறைகளுக்கு உள்ள இடைவெளி தான் குணா குகை எனப்படுகிறது.

இதற்கு நுழைவு கட்டணமாக ₹10 வசூலிக்கப்படுகிறது. இங்கிருந்து 800 மீட்டர் பயணித்தால் சூசைட் பாயிண்ட் (Suicide Point) என்று அறியப்படும் பசுமை பள்ளத்தாக்கை அடையாளம். இங்கு அழகிய பசுமையான பள்ளத்தாக்கினை கண்டு ரசிக்கலாம். இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

இது தவிர அருங்காட்சியகம், சூரிய வான் ஆய்வகம், பேரிஜம் ஏரி, குறிஞ்சி ஆண்டவர் கோயில் என பலவற்றையும் கண்டு களிக்கலாம்.

Also Read: Travel Tips: அதிசயங்கள் நிறைந்த ஆந்திராவிற்கு டூர் பிளானா? இதுதான் சுற்றி பார்க்க சிறந்த இடங்கள்!

Latest News