Healthy Tips: வைட்டமின் ‘டி’ குறைபாட்டால் இத்தனை ஆபத்தா? அதிகரிக்கச் செய்ய வழிகள் என்ன?
Vitamin D: இந்தியாவில் 76% நபர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைந்துள்ளார்கள். மனித உடம்பில் விட்டமின் டி குறைந்தால் எலும்பு தேய்மானம், மூட்டு வலி, மனச்சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை, சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் கோளாறு, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும். நமது உடம்பிற்கு தேவையான வைட்டமின் டி பெறுவதற்கு என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு சிறந்த வழிமுறைகள்.
வைட்டமின் டி அதிகரிக்க வழிகள்: மனித உடல் சீராக இயங்குவதற்கு எல்லா விதமான வைட்டமின்கள், புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள், நல்ல கொழுப்புகள் என அனைத்தும் சரியான அளவில் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறைந்தால் கூட உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். வைட்டமின் டி மனித உடலில் இருப்பதினால் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து சத்துக்களாக சேமித்து வைக்கிறது. நம் உடலில் வைட்டமின் டி குறைந்தால் நம்முடைய மனநிலை அடிக்கடி மாறுபடும். அதாவது அதிக அளவில் கோபம், பதற்றம் ஆகியவை ஏற்படும். அப்படி உடலில் வைட்டமின் டி குறைந்தால் என்னென்ன உபாதைகள் ஏற்படுத்தும்? அதை அதிகரிக்கும் வழி என்ன? என்பதை பார்க்கலாம்.
முக்கியமாக வைட்டமின் டி எலும்புகளின் உறுதி தன்மைக்கு தேவைப்படுகிறது. வைட்டமின் டி உடம்பில் குறைவதால் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. மேலும் தசை பிடிப்பு, தசைகளில் வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அதிக சோர்வு, திடீர் முதுகு வலி, திடீர் எலும்பு வலி போன்றவை ஏற்பட்டால் வைட்டமின் டி குறைபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தைகளுக்கு வயிறு வீங்கி பெரிதாகும். மேலும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைந்தால் எலும்புகளில் மாறுபாடு ஏற்படும், குழந்தைகள் வளைந்த தன்மையுடன் இருப்பார்கள் மேலும் முன் தலை அல்லது பின் தலை பெரியதாக இருக்கும். பெரியவர்களுக்கு இந்த வைட்டமின் டி குறையும் பொழுது இரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த பிரச்சனைகள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றது.
அலர்ஜி, மனச்சோர்வு, மன அழுத்தம், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளும் வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படலாம். சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் கோளாறு, உடம்பில் சத்துகள் சரியாக உறிஞ்சப்படாமல் இருப்பது, குடல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் செரிமான பிரச்சனை, மூட்டு வலிகள் மற்றும் அதிகமாக வேர்வை வருதல் ஆகியவையும் வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படலாம்.
Also Read: Kitchen Tips: பால் புளித்து விட்டதா? அதை வைத்து என்னென்ன செய்யலாம்?
வைட்டமின் டி குறைபாடு உள்ள 76% இந்தியர்கள்:
மனித இரத்தத்தில் 30 நானோ கிராமிற்கு கீழ் வைட்டமின் டி இருந்தால் அது வைட்டமின் டி குறைபாடாக கருதப்படும். ஒரு மில்லி இரத்தத்தில் 12 நானோ கிராமுக்கு கீழ் வைட்டமின் டி இருந்தால் அது வைட்டமின் டி மிக கடுமையான குறைபாடாக கருதப்படுகிறது. இந்தியாவில் 49 கோடி பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடல் பருமன் கொண்டவர்களில் 80 சதவீத பேருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளது.
எப்படி விட்டமின் டி யை சீராக வைத்துக் கொள்வது?
இத்தனை உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய வைட்டமின் டி யை நமது உணவு மூலமாகவே சரி செய்யலாம். மேலும் சூரிய ஒளி உடம்பில் படுவது மூலமாக வைட்டமின் டி உடம்பில் உற்பத்தி ஆகிறது. விட்டமின் டி அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மூலமாகவும் நமது உடம்பில் விட்டமின் டி உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் சூரிய ஒளி உடம்பில் படுவது மூலமாக வைட்டமின் டி உடம்பில் உற்பத்தி ஆகிறது. இந்த இரண்டு வழி மூலமாக பெறப்படும் விட்டமின் டி நமது சிறுநீரகத்திற்கு சென்று அங்கிருந்து நமது உடம்பிற்கு தேவையான வைட்டமின் டி யாக பிரிந்து செல்கிறது. அதேபோல் நமது கல்லீரலில் இருந்தும் இரத்தத்தில் பயணிக்க கூடிய வைட்டமின் டி கிடைக்கிறது.
யாருக்கெல்லாம் இந்த குறைபாடு வரலாம்?
அதிகமாக வெயிலில் தன் உடலை காட்டாதவர்கள், அதிகளவில் சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துபவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏசியில் அதிக நேரம் இருப்பவர்கள் குறிப்பாக மதிய நேரம் முழுவதும் ஏசியில் இருப்பவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுப் பொருள்கள்:
மீன்கள், மீன் எண்ணெய்கள் (மீன் மாத்திரைகள்), சிப்பிகள், காளான், சோயா பால், முட்டையின் மஞ்சள் கரு, ஆரஞ்சு பழச்சாறு, கீரைகள், வெண்டைக்காய், ஓட்ஸ், சீஸ் வகைகள், தயிர், அசைவ உணவுகள், பாதாம் மற்றும் பால் ஆகிய உணவுகளில் வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. பெரும்பாலான அசைவ உணவுகளில் நிறைய ஆரோக்கியமான வைட்டமின் டி சத்துகள் இருக்கிறது. தினமும் ஒரு குவளை பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்கள் 20 சதவீதம் வரை கிடைக்கும்.
அசைவம் சாப்பிடாதவர்கள் பால் குடிப்பது மிக அவசியமாகும். இந்த உணவுகளை சரியாக எடுத்து கொண்டால் உடம்பிற்கு வைட்டமின் டி சரியான அளவில் கிடைக்கும். ஆனால் வைட்டமின் டி குறைபாடு மிகப்பெரிய அளவில் இருந்தால் நிச்சயமாக மருத்துவரை ஆலோசித்து அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கால்கள் வளைந்து இருந்தாலோ அல்லது வயிறு மட்டும் பெரியதாக தெரிந்தாலோ உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
Also Read: Green Beans Benefits: மார்பக புற்றுநோயைத் தடுக்கும் பீன்ஸ்.. இதய ஆரோக்கியத்திற்கும் தரும் நன்மை..!