Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. பாதுஷா, ஜாங்கிரி செய்வது எப்படி..?
Deepavali: நல்ல ஆரோக்கியத்துடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் இனிப்புகளை வீட்டிலேயே தயாரிப்பதுதான் நல்லது. அந்தவகையில், இந்த தீபாவளிக்கு புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், பாதுஷா, ஜாங்கிரி மற்றும் மடக்கு பூரி எப்படி செய்வது என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாளான இந்நாளில் வீடுகளுக்கு வெளியே பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் சாப்பிட்டு குடும்பத்தினர் கொண்டாடுவார்கள். இனிப்புகள் இல்லாமல் தீபாவளி பண்டிகை முழுமையடையாது என்றே சொல்லலாம். கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் எப்போது, எப்படி தயாரிக்கப்பட்டது என்பது தெரியாது. இது ஒருவேளை பழையதாக இருந்தால் தீபாவளி அன்று சாப்பிடும்போது, உங்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.
எனவே, நல்ல ஆரோக்கியத்துடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் இனிப்புகளை வீட்டிலேயே தயாரிப்பதுதான் நல்லது. அந்தவகையில், இந்த தீபாவளிக்கு புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், பாதுஷா, ஜாங்கிரி மற்றும் மடக்கு பூரி எப்படி செய்வது என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ: Running Tips: ஓடிய பிறகு இந்த தவறை செய்ய மறக்காதீர்கள்.. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு..!
பாதுஷா
பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்:
- மைதா – 200 கி
- சர்க்கரை – 300 கி
- உப்பு – சிறிதளவு
- சமையல் சோடா உப்பு – ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் – சிறிதளவு
- நெய் – தேவையான அளவு
- பால் – அரை லிட்டர்
- ரோஸ் எசன்ஸ் – சில டிராப்ஸ்
பாதுஷா செய்வது எப்படி..?
- முதலில் எடுத்து வைத்துள்ள 200 கிராம் மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- அதன்பிறகு, சமையல் சோடா உப்பு, உப்பு, சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்,
- இந்த உப்பு கலவையையும் மேலே பிசைந்து வைத்துள்ள மாவுடன் கலந்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசையவும். இதை தனியாக இப்போது எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்போது, அந்த மாவு கலவையில் இருந்து எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி ஒரு தட்டில் வரிசையாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- தொடர்ந்து, ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடு ஆனதும், தட்டி வைத்துள்ள உருண்டைகளை பொரித்து எடுத்து கொள்ளவும்.
- மற்றொரு கடாயில் சர்க்கரையை கொட்டி, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும்.
- பாகு ரெடியானதும் அதில் எசன்ஸ் சேர்த்து தனியாக இறக்கி வைத்து கொள்ளவும்
- தொடர்ந்து, பொரித்து வைத்துள்ள பாதுஷாகளை, சர்க்கரை பாகில் நன்றாக முக்கி எடுத்து முந்திரியை சீவி தூவினால் சுவையான பாதுஷா ரெடி.
ஜாங்கிரி
ஜாங்கிரி செய்ய தேவையான பொருட்கள்:
- முழு உளுந்து – 200 கி
- அரிசி – சிறிதளவு
- சர்க்கரை – 300 கி
- சிவப்பு அல்லது மஞ்சள் ஃபுட் கலர் – சிறிதளவு
- ரோஸ் எசன்ஸ் – சில டிராப்ஸ்
- முந்திரி – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
ஜாங்கிரி செய்வது எப்படி..?
- முதலில் எடுத்து வைத்துள்ள முழு உளுந்து பருப்பை அலசி அரிசியுடன் கலந்து அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைக்கவும்.
- இப்போது கிரைண்டரில் நன்றாகவும், கெட்டியாகவும் அரைத்து கொள்ளவும்
- அந்த மாவு கலவை நன்றாக தயார் ஆனதும் சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்து கொள்ளவும்.
- வழக்கம்போல் சர்க்கரையில் தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சி எடுத்து கொள்ளவும்
- இப்போது, ஒரு பெரிய பாத்திரம் அல்லது தாம்பள தட்டில் சர்க்கரை பாகு ஊற்றி ரோஸ் எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்.
- அதனை தொடர்ந்து, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், துணி அல்லது பால் கவரில் தேவையான அளவில் துளையிட்டு மாவு நிரப்பி, ஜாங்கிரி வடிவத்தில் பொரித்து எடுக்கவும்.
- பொரித்த பிறகு ஜாங்கிரியை சர்க்கரைப் பாகில் சேர்த்து ஊற வைக்கவும்.
- ஜாங்கிரி நன்றாக 10 நிமிடம் ஊறிய பின் எடுத்து, அதில் முந்திரியை சீவி தூவினால் சுவையான ஜாங்கிரி ரெடி.
ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. ரசகுல்லா, ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி?
மடக்கு பூரி
மடக்கு பூரி செய்ய தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 2 கப்
- தேங்காய் துருவல்
- சர்க்கரை – 1 கப்
- நெய் – சிறிதளவு
- முந்திரி – ஒரு கையளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – சிறிதளவு
மடக்கு பூரி செய்வது எப்படி..?
- முதலில் எடுத்து வைத்துள்ள 2 கப் கோதுமை மாவு, சிறிதளவு நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- அதனுடன் சூடான தண்ணீரை கலந்து சப்பாத்தி தட்டும் பதத்திற்கு மாவை உருட்டி கொள்ளவும்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், 1 கப் சர்க்கரை, நொறுக்கப்பட்ட முந்திரி பருப்புகள் ஆகியவற்றை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- மடக்கு பூரி செய்முறை கிட்டத்தட்ட தயார்.
- சப்பாத்தி பதத்திற்கு உருட்டிய மாவு கலவையை தேவையான அளவு வெட்டி உருட்டி எடுத்து கொள்ளவும்.
- இப்போது, தயாரித்து வைத்துள்ள ஸ்வீட் கலவையை மாவு கலவைக்குள் வைத்து மடித்து ஓரங்களை மடிக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி பூரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- அவ்வளவுதான், சுவையான மடக்கு பூரி ரெடி.