குளிர்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!
Food For Winter Season: குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் பல நோய்கள் எளிதில் தாக்கும். சளி, இருமல், தலைவலி என இந்த குளிர் காலத்தில் எல்லாவிதமான நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடலை குளிர்ச்சியில் இருந்து பாதுகாப்பதற்கு சில உணவு முறைகளை பின்பற்றுங்கள்.
குளிர்காலத்தில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். பருவகால நோய்களும் விரைவில் தாக்கும் வாய்ப்புள்ளது. இந்த பருவத்தில் உடலுக்கு ஆற்றல் மிகவும் அவசியம். குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் வெப்பநிலையும் குறைகிறது. இது கடுமையான குளிர், தசை வலி மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே குறிப்பிட்ட வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் உடலை ஆரோக்கியமாகவும், சூடாகவும் வைத்துக் கொள்ள என்ன வகையான உணவுகளை உட்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
முட்டை – கோழி:
இந்த பருவத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை உடம்பை சூடாக்கும் உணவுகள். உடலில் வெப்பநிலையை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான கொழுப்புகளும் இதில் உள்ளன. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சோர்வு மற்றும் சோம்பலை நீக்குகிறது. இந்த உணவுகள் நிச்சயமாக உடலை சூடாக வைத்திருக்க உதவும். எனவே இந்த சீசனில் முட்டை மற்றும் கோழிக்கறி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி:
இந்த சீசனில் இஞ்சியை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி சளியை குறைத்து உடலில் சூட்டை அதிகரிக்கும். தினமும் இஞ்சி டீ குடிப்பதும், இஞ்சியில் செய்த உணவுகளை சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Also Read: Winter Season: குளிர்காலத்தில் அதிகமாக தூங்குவது ஏன்..? இந்த இயற்கை மாற்றங்களே காரணம்!
மஞ்சள்:
மஞ்சளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த காலகட்டத்தில் மஞ்சளை சற்று அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. மஞ்சளில் வெப்பமூட்டும் தன்மையும் உள்ளது. இதன் மருத்துவ குணங்கள் உடலை சூடாக வைத்து தொற்று மற்றும் நோய்கள் வராமல் தடுக்கிறது.
உலர் பழங்கள்:
உலர் பழங்கள் சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மற்ற பருவங்களை விட இந்த பருவத்தில் அதிக சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இதன் மூலம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியைப் பெறுகிறது.
சூப்கள்:
இந்த பருவத்தில் சூப்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். சூப்களில் காரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சூடான சூப்களை குடிப்பதால் உடல் சூடாகும். இதனால் சளி குறையும்.உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, நெய், மிளகு, காய்கறிகள் மற்றும் முழு தானியங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கம்பு:
கம்பு பயன்படுத்தி தோசை, கம்மங்கூழ், கிச்சடி, லட்டு போன்றவை செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் டி மற்றும் தசைகளை உருவாக்கக்கூடிய திறனும் இருக்கிறது. இது கூந்தல் வளர்ச்சிக்கும் உதவி செய்கிறது. எனவே குளிர்காலத்தில் கம்பு அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலமாக உடல் குளிர்ச்சியை குறைத்து உடல் சூட்டை அதிகரிக்கும்.
கேப்பை கூல்:
கேப்பைக் கூழ் குடிப்பது மூலமாக உடல் குளிர்ச்சியை தணித்து உடலை சூடாக வைத்திருக்க முடியும். எந்த வகையான உணவை சாப்பிட்டாலும் அதை சூடு பிடித்து சாப்பிடுவது நல்லது.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான சாச்சுரேட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்பு செல்களாக சேராமல் உடைக்கப்பட்டு எனர்ஜிகளாக மாற்றப்படுகிறது. மேலும் இதில் ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி வைரஸ் தன்மை இருப்பதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும்.
Also Read: Carrot Juice: குளிர்காலத்தில் கேரட் ஜூஸ் குடிக்கலாமா? இதுல இவ்வளவு இருக்கா?
கைக்குத்தல் அரிசி:
கைக்குத்தல் அரிசி உண்பது மூலமாக உடல் வெப்பநிலையை அதிகரிக்கலாம். மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். மேலும் இந்த கைக்குத்தல் அரிசி உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் Tamil TV9 பொறுப்பேற்காது.)