Food Recipe: நாக்கில் நடனமாடும் சுவை.. மதுரை கறி தோசை, கொத்துக்கறி சப்பாத்தி செய்வது எப்படி..?

Madurai Kari Dosai: மதுரை ஸ்டைலில் இன்று மட்டனை கொண்டு இரண்டு விதமான டிஷ்களை செய்ய போகிறோம். இது கூடுதல் சுவையை தருவது மட்டுமின்றி, உங்களுக்கு புதுவிதமான அனுபவத்தையும் தரும். அந்தவகையில், கறி தோசை மற்றும் கொத்துக்கறி சப்பாத்தி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Food Recipe: நாக்கில் நடனமாடும் சுவை.. மதுரை கறி தோசை, கொத்துக்கறி சப்பாத்தி செய்வது எப்படி..?

கறி தோசை - கொத்துக்கறி சப்பாத்தி (Image: freepik)

Published: 

21 Nov 2024 10:02 AM

மட்டன் விலையில் அதிகம் என்றாலும், அதன் சுவை நம் மனதை மயக்கும். மட்டனில் குழம்பு, கூட்டு, அவியல் என்று பல பல வகையான டிஷ்களை அவ்வபோது செய்து சாப்பிட்டு இருப்போம். இது நாளடைவில் உங்களுக்கு சலிப்பை கொடுத்துவிட்டது என்றால், இந்த ஸ்பெஷல் ரெசிபி குறிப்பு உங்களுக்கானது. மதுரை ஸ்டைலில் இன்று மட்டனை கொண்டு இரண்டு விதமான டிஷ்களை செய்ய போகிறோம். இது கூடுதல் சுவையை தருவது மட்டுமின்றி, உங்களுக்கு புதுவிதமான அனுபவத்தையும் தரும். அந்தவகையில், கறி தோசை மற்றும் கொத்துக்கறி சப்பாத்தி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipe: சளி, இருமலால் இரவில் தூக்கம் இல்லையா..? இந்த இஞ்சி ரசம் ரெசிபி சரி செய்யும்..!

கொத்துக்கறி சப்பாத்தி

கொத்துக்கறி சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்

  • மட்டன் கொத்துக்கறி – 1/4 கிலோ (கடையில் கொத்துக்கறி என்று கேட்டு வாங்குங்கள்)
  • தக்காளி – 2 (பொடி பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 2 (பொடி பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • சப்பாத்தி மாவை எப்போதும்போல் பிசைந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

கொத்துக்கறி சப்பாத்தி செய்வது எப்படி..?

  1. கடைகளில் வாங்கிவந்த மட்டன் கொத்துக்கறியை தண்ணீரில் ஒருமுறைக்கு இரண்டு முறை கழுவி நன்கு வேக வைக்கவும்.
  2. அடுத்ததாக, அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடி பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.
  3. தனியாக வேக வைத்து எடுத்துவைத்துள்ள மட்டன் கறியை இந்த மசாலா கலவையுடன் சேர்த்து, உங்களுக்கு தேவையான அளவில் உப்பு, மஞ்சள் தூள், தனி மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
  4. இதன்பின், கறி மசாலா சேர்த்ததும் சிறிதுநேரம் காத்திருங்கள். அடுத்ததாக இந்த கலவை நன்கு வெந்து டிரை ஆனதும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  5. இப்போது வழக்கம்போல், பிசைத்து வைத்துள்ள சப்பாத்தி மாவை வட்டமாக உருட்டி, அதற்கு நடுவில் கொத்துக்கறியை வைத்து மடித்து மீண்டும் ஒருமுறை சப்பாத்தி கட்டையால் தேய்க்கவும்.
  6. தோசைக்கல் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி சப்பாத்தியை போட்டு எடுத்தால் சப்பாத்தி கொத்துக்கறி ரெடி.
  7. இந்த சப்பாத்தி கொத்துக்கறியை சிலோன் பரோட்டா என்றும் சிலர் அழைப்பார்கள்.

மதுரை கறி தோசை

மதுரை கறி தோசை செய்ய தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2 (பொடி பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • தக்காளி – 2 (பொடி பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 2 (பொடி பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
  • மட்டன் கொத்துக்கறி – 1/2 கிலோ
  • மிளகு தூள் – சிறிதளவு
  • கரம் மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • முட்டை – 2
  • தோசை மாவு – போதுமானது
  • எண்ணெய் – போதுமான அளவு

ALSO READ: Food Recipe: சட்டென செய்யக்கூடிய ஃபுட் ரெசிபி! சுறா புட்டு, மீன் வடை செய்வது எப்படி..?

மதுரை ஸ்பெஷல் கறி தோசை செய்வது எப்படி..?

  1. முதலில் அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்
  2. எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை நன்கு வதக்கவும்.
  3. தொடர்ந்து, வெங்காயம் வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரத்தில் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  4. பச்சை வாசனை சிறிது போனதும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
  5. இதற்கு அடுத்து மசாலாக்களான தனி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து பச்சை வாசனை போய் மசாலா வாசனை வரும் வரை 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
  6. இதை தொடர்ந்து, மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவியபின் மசாலா கலவையின் போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும். பின்னர் கடாயை மூடி சிறிது நேரம் கொதிக்க விடுங்கள்.
    கடைசியாக, சிறிதளவு கரம் மசாலா கொத்தமல்லி தூவி இறக்கினால், கொத்துக்கறி மசாலா தயார்.
  7. இப்போது சிறிய பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
  8. அடுப்பை ஆன் செய்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தோசை மாவை ஊத்தப்பம் போல் ஊற்றவும்.
  9. அதன்மேல், அடித்து வைத்துள்ள முட்டைகளை ஊற்றி சிறிது கலக்கிவிட்டு, கொத்துக்கறி மசாலா போட்டு தோசை கரண்டியால் மசாலாவை அழுத்தி, திருப்பி போட்டு நன்றாக வேகவைக்கவும்.
  10. அவ்வளவுதான் சூப்பராக மதுரை கறி மசாலா தோசை ரெடி.
இரவு தூங்கும் முன் இந்த பழங்களை நிச்சயம் சாப்பிடக்கூடாது..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் தப்பி தவறி கூட பாதாம் சாப்பிடக்கூடாது..
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்..?