5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Christmas Candies: குழந்தைகள் விரும்பும் மார்ஷ்மெல்லோ, ஜெல்லி.. வீட்டிலேயே செய்வது எப்படி?

Homemade Christmas Candies: கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு வித விதமான கேக்குகளையும், ஸ்வீட்களையும் வீட்டிலேயே செய்யலாம். அதுவும் குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட்டை வீட்டில் ஈசியாக செய்யலாம். அதன்படி மார்ஷ்மெல்லோ மற்றும் ஜெல்லியை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

Christmas Candies: குழந்தைகள் விரும்பும் மார்ஷ்மெல்லோ, ஜெல்லி.. வீட்டிலேயே செய்வது எப்படி?
மார்ஷ்மெல்லோ, ஜெல்லி (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 16 Dec 2024 10:51 AM

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த பண்டிகைக்கு விதவிதமான சமையல் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த வேலையில் குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மார்ஷ்மெல்லோ மற்றும் ஜெல்லியை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டு குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இவற்றை  வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் – மார்ஷ்மெல்லோ:

சர்க்கரை, சோள மாவு, எண்ணெய், ஜெலட்டின் பவுடர், வெந்நீர், வெண்ணிலா எசன்ஸ்

செய்முறை:

முதலில் 100 கிராம் சர்க்கரை மற்றும் 100 கிராம் சோள மாவினை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும். இதில் சில கட்டிகள் இருந்தால் அதை சலித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் நன்றாக எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். எத்தனை வண்ணங்களில் நீங்கள் செய்ய நினைக்கிறீர்களோ அத்தனை கிண்ணங்களை எடுத்து அதில் எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டும். இந்த கிண்ணத்தின் மீது அரைத்து வைத்திருக்கும் சர்க்கரை மற்றும் சோள மாவு பொடி தூவ வேண்டும். இந்த பொடி எல்லாப் பகுதிகளிலும் படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கிண்ணம் முழுவதும் தூவிய பொடி பரவியதும் மீதமாக இருப்பதை வெளியில் எடுத்து விட வேண்டும்.

அடுத்ததாக வேறு ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஜெலட்டின் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அரை கப் அளவில் சுடு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். மீண்டும் மற்றொரு கிண்ணத்தில் அரைக்கப் அளவு சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். பின் இதில் 250 மில்லி அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். சர்க்கரை நன்றாக பாகு பதத்திற்கு வந்த பின் ஊற வைத்திருக்கும் ஜெலட்டினை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். சேர்த்த பின் இரண்டு நிமிடங்களுக்கு குறைந்த நெருப்பில் இதை வேக வைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு ஆற வைக்க வேண்டும்.

Also Read: Christmas chicken Recipes: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. சிக்கனை வைத்து இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க!

அதன் பிறகு இதை எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளை நிறத்தில் கிரீம் போன்று வரும் வரை இதை அடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளை நிறத்தில் கிரீம் பதத்திற்கு வந்த பின் அதில் அதில் ஒரு டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் மீண்டும் நன்றாக அடிக்க வேண்டும். பிறகு உங்களுக்கு எத்தனை நிறத்தில் மார்ஷ்மெல்லோ செய்ய வேண்டுமோ அத்தனை கிண்ணத்தில் இந்த மாவினை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உங்களுக்கு தேவையான வண்ணத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மாவில் சேர்க்கப்பட்ட வண்ணம் நன்றாக படும்படி ஒருமுறை பீட் செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கிண்ணத்தில் இந்த கலவையை ஊற்ற வேண்டும். பிறகு இதை ஐந்து மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். 5 மணி நேரத்திற்கு பிறகு ஆரம்பத்தில் தயார் செய்து வைத்த சர்க்கரை சோள மாவு பொடியினை இதன் மீது தடவ வேண்டும். இப்பொழுது தயாராக இருக்கும் மார்ஷ்மெல்லோவை கிண்ணத்திலிருந்து எடுத்து நமக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள் – ஜெல்லி மிட்டாய்:

ஜெலட்டின் அல்லது அகர் அகர், சர்க்கரை, தண்ணீர், உணவு நிறங்கள்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஜெலட்டின் பவுடர் அல்லது அகர் அகர் பவுடர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். சரியான பாகு பதத்திற்கு வந்த பிறகு நெருப்பை குறைந்த அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் ஜெலட்டினை இதில் சேர்க்க வேண்டும்.‌ பிறகு நன்றாக கலந்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலை வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இப்பொழுது சில்வர் ஃபாயில் கப்பில் பாதி அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். இது இல்லாதவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பாத்திரத்திலேயே ஊற்றி வைத்துக் கொள்ளலாம். பின்பு தேவையான வண்ணங்களை அதில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றை இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

Also Read: Christmas Recipes: வீட்டிலேயே சுவையான பிரவுனி, மால்புவா செய்வது எப்படி?

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பாத்திரத்தில் இருந்து ஜெல்லியை வெளிய எடுக்க வேண்டும். நமக்கு விருப்பமான வடிவங்களில் இதை வெட்டிக் கொள்ளலாம். எளிதாக வெட்டுவதற்கு கத்தியை சுடு தண்ணீரில் நனைத்து வெட்ட வேண்டும். வெட்டிய ஜல்லி மிட்டாய்களை சர்க்கரையில் போட்டு எடுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது குழந்தைகள் விரும்பும் ஜெல்லி மிட்டாய் தயார்.

Latest News