Christmas chicken Recipes: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. சிக்கனை வைத்து இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க!
Recipes For Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகையில் இனிப்புகளுக்கு இடையே காரசாரமான உணவுகளை செய்து அசத்துங்கள். ஒரே முறையில் சிக்கனை செய்யாமல் இந்த முறை வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள். வீட்டிலேயே எளிமையாக சிக்கன் சிந்தாமணி, பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பொதுவாக நிறைய இனிப்புகள் தயாரிக்கப்படும். இனிப்புகளுக்கு மத்தியில் காரசாரமான உணவுகளை பண்டிகையின் போது போது உண்டு மகிழுங்கள். ஒரே முறையில் சிக்கனை சமைத்து போர் அடித்து விட்டதா? இந்த முறை சுவை மிகுந்த சிக்கன் சிந்தாமணி, பள்ளிபாளையம் சிக்கனை முயற்சி செய்து பாருங்களேன்…
தேவையான பொருள்கள் – பள்ளிபாளையம் சிக்கன்:
எண்ணெய் – ஐந்து டேபிள் ஸ்பூன், அரை டீஸ்பூன் கடுகு, 250 கிராம் சின்ன வெங்காயம், சிறிதளவு இஞ்சி, எட்டு பூண்டு பல் , 15 காய்ந்த சிவப்பு மிளகாய், இரண்டு கருவேப்பிலை, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை கிலோ சிக்கன், தேவையான அளவு உப்பு, கால் கப் தண்ணீர், சிறிதளவு கொத்தமல்லி, கால் தேங்காய் துண்டுகள்
செய்யும் முறை:
ஒரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் எடுத்து வைத்திருக்கும் கடுகை சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு உடைந்ததும் 250 கிராம் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் அதிகமாக இருந்தால் சுவையும் அதிகமாக இருக்கும். எடுத்து வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை அரைத்து சேர்ப்பதை விட இடித்து சேர்ப்பது சுவையை அதிகப்படுத்தும். அடுத்ததாக 15 காய்ந்த மிளகாய்களை வெட்டி அதிலிருந்து விதையை நீக்கி விட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் ஒரு நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
Also Read: Christmas Recipes: வீட்டிலேயே சுவையான பிரவுனி, மால்புவா செய்வது எப்படி?
பின்னர் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு எடுத்து வைத்திருக்கும் அரை கிலோ சிக்கன் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிக்கன் பெரிய அளவில் இல்லாமல் சிறு சிறு துண்டுகளாக இருக்க வேண்டும். சிக்கனை சேர்த்து விட்டு தேவையான உப்பை தூவிக்கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு ஐந்து நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.
இப்பொழுது சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் விட்டிருக்கும். இந்த நிலையில் சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் கால் கப் தேங்காயை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக கிளறிவிட்டு பத்து நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைத்து வேக விட வேண்டும். பத்து நிமிடங்களுக்கு பிறகு மூடியை எடுத்துவிட்டு நன்றாக கிளறி மீண்டும் 5 நிமிடம் மூடி போடாமல் வேக வைக்க வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மிகவும் ருசியான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.
தேவையான பொருட்கள் – சிக்கன் சிந்தாமணி:
3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், 15 காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயம், அரை கிலோ சிக்கன், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு
செய்யும் முறை:
ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் எண்ணெய் நன்றாக காய்ந்த பின் விதை நீக்கிய 15 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரம் குறைவாக வேண்டுமென்றால் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம். சேர்த்த மிளகாயை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அரை கிலோ சிக்கனை சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக கிளறி விட வேண்டும்.
Also Read: Christmas: வந்துவிட்டது கிறிஸ்துமஸ்! இம்முறை சுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்யுங்கள்…
பிறகு அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு மூடியை போட்டு மூடி கோழியை நன்றாக வேக விட வேண்டும். இடையில் அடிக்கடி கிளறி விட வேண்டும். பின்னர் சிக்கனிலிருந்து தண்ணீர் விட தொடங்கியதும் மூடியை எடுத்துவிட்டு திறந்த நிலையில் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் சூடான சுவையான சிக்கன் சிந்தாமணி தயார்