Travel Tips: அரியலூரில் அசர வைக்கும் சுற்றுலா தளங்கள்… இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!
Ariyalur Travel: ஆசியாவிலேயே அதிகம் சிமெண்ட் தயாரிக்கும் இடம் என்ற பெருமையை பெற்றது அரியலூர் மாவட்டம். இங்குள்ள கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாகவும் விளங்கியது. இத்தகைய சிறப்பு மிக்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
அரியலூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: பெரம்பலூரில் இருந்து பிரிக்கப்பட்டு 31-வது மாவட்டமாக 2007 ஆம் ஆண்டில் இருந்து அரியலூர் தனி மாவட்டமாக செயல்பட்டு ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் பகுதியான அரியலூரில் பல வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்து இருக்கிறது. இங்கு டைனோசர் முட்டைகள், முதுகெலும்பில்லாத உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி சோழனின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. திருச்சிக்கு அருகில் இருக்கும் இந்த மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் ஏராளம் உண்டு. அங்கு என்னென்ன சுற்றுலா தலங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கங்கைகொண்ட சோழபுரம்:
காலத்தால் அழியாத மூன்று சோழர் கோயில்களில் ஒன்றான கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் இந்த மாவட்டத்தின் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்கால சோழப் பேரரசின் தலைநகரமாகவும் விளங்கியுள்ளது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக இந்த நகரத்தை நிறுவி அங்கு கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலை முதலாம் ராஜேந்திர சோழன் கட்டினார்.
560 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட இந்த கோயிலில் சிவன் மூலவராக இருக்கிறார். 2004 ஆம் ஆண்டு இந்த கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இது அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கரை வெட்டி பறவைகள் சரணாலயம்:
தமிழகத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயமான கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கரை வெட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இன்பச் சரணாலயத்திற்கு திபெத், லடாக், மத்திய ஆசியா, வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வருகிறது.
கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், நாமக் கோழி, வண்ண நாரை, முக்குளிப்பான் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நீர் பறவைகளும் 37 வகையான நிலப் பறவைகளும் வந்து செல்கின்றன. அது போக மைனா, புறா, பருந்து, சிட்டு, மயில், ஆள்காட்டி குருவி போன்ற உள்ளூர் பறவைகளும் வந்து செல்கின்றன. இது அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Also Read: புதுக்கோட்டை சுற்றியுள்ள டூர் ஸ்பாட்கள்.. இந்த இடமெல்லாம் போய் இருக்கீங்களா?
அரியலூர் புதைப்படிவ அருங்காட்சியகம்:
அரியலூர் மாவட்டத்தில் கிடைக்கும் தொல்லியல் படிவங்களை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அருங்காட்சியம் அமைந்துள்ள இந்தக் கலர் நிலப் பகுதி 12.5 கோடி ஆண்டிற்கும் 6.5 கோடி ஆண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் தோன்றியதாகும். 2 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த தனித்துவமான புதைப்படிவ அருங்காட்சியகம் அரியலூர் பகுதியில் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் மற்றும் பிற ஊர்வன இருந்ததற்கான ஆதாரத்தை வழங்கும் இயற்கையான பாறை அமைப்புகளை கொண்டிருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் கேம்பிரினுக்கு முந்தைய ஜுராசிக் மற்றும் கிரெடேசியஸ் கால புதைப்படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 9.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
அணைக்கரை அணைக்கட்டு:
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஒரு அணை பாலம் ஆகும். இது கீழனை கீழ் அணைக்கட்டு என்றும் அழைக்கப்படுகிறது. நீர்ப்பாசனத்திற்காக ஆங்கிலேய அரசால் 1902 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து கொள்ளிடம், மண்ணியாறு மற்றும் உப்பணாறு ஆறுகளாக பிரிகிறது. இது அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 56.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பெலாந்துறை அணை:
வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூன்று அணைகளில் பெலாந்துறை அணை ஒரு அருமையான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.இது அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து 51 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
விக்கிரமங்கலம் புத்த விகாரங்கள்:
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் 1025 ஆம் ஆண்டு சோழர்களின் தலைநகராக உருவான அதே சமயத்தில் அங்கு பௌத்தமும் பரவியிருந்தது. இங்குள்ள விக்கிரமங்கலத்தில் பழமையான இரண்டு புத்தர் சிலைகள் உள்ளது. மேலும் சுத்தமல்லியில் கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த புத்தர் சிலை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Also Read: Travel Tips: கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!