5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

செங்கல்பட்டு சுற்றுவட்டார மினி டூர்.. இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

Chengapattu Travel: சென்னையின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் செங்கல்பட்டு முன்பு விஜயநகர மன்னனின் தலைநகராக இருந்தது. விஜயநகர மன்னர்கள், ஆங்கிலேயர்கள், நவாப்கள், பிரெஞ்சுக்காரர்கள் டச்சுகாரர்கள் என பல்வேறு ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு சுற்றுவட்டார மினி டூர்.. இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!
மகாபலிபுரம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Updated On: 06 Nov 2024 11:21 AM

பாலாற்றின் கரையில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல்பட்டு பகுதி கிபி 600 முதல் கிபி 900 வரை பல்லவர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதி கலை, கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலையில் மேம்பட்டு இருந்திருக்கிறது. மேலும் பல்லவர் காலத்தில் கோயில் சிற்பக்கலை உச்சம் பெற்று இருந்திருக்கிறது. இது சென்னையின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மகாபலிபுரம்:

தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் மகாபலிபுரம் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இங்கு குடவரைக் கோயில்கள், ஒரே கல்லால் செதுக்கப்பட்ட ஒற்றை கல் கோயில், புடைப்புச் சிற்பங்கள் மற்றும் பல்வேறு வகையான சிலைகள் என பல வரலாற்று சிறப்புமிக்க சுவடுகள் இங்கே இருக்கிறது. மகாபலிபுரம் நினைவு சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.

மேலும் இங்கு கடற்கரை கோயில், குகை கோயில், இந்திய கடல் சங்கு அருங்காட்சியம், கலங்கரை விளக்கம், மாமல்லபுரம் கடற்கரை என பல இடங்களில் இங்கு பார்க்கலாம். இது செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

முட்டுக்காடு படகு குழாம்:

கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு பகுதியில் உள்ள ஒரு நீர் விளையாட்டு மையம். படகு ஒட்டுதல், நீர் சறுக்கு விளையாட்டு போன்ற நீர் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கே உள்ளன. இங்கு மூங்கிலால் செய்யப்பட்ட படகு இல்லமும் பார்வையாளர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியின் செய்யப்பட்டுள்ளது. இங்கு உணகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இது செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா:

சுமார் 1500 ஏக்கரில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்கா ‌ இந்தியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக விளங்குகிறது. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பெரியவர்களுக்கு ரூ.200 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.50 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

நடக்க இயலாதவர்கள் வண்டியில் சுற்றி பார்க்க ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.150 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இது செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: Travel Tips: காஞ்சிபுரத்தில் காண வேண்டிய சுற்றுலாத் தலங்கள்..!

சட்ராஸ் டச் கோட்டை:

17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் வணிக நோக்கத்திற்காக கட்டப்பட்ட இந்த கோட்டையில் மிகப்பெரிய தானிய கிடங்குகள், குதிரை கொட்டகைகள், யானை கட்டும் இடங்கள் ஆகியவை அமைந்திருக்கிறது. ஆனால் 1818 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கைப்பற்றினர். வரலாற்று சுவடுகளை சுமந்து நிற்கும் இந்த டச் கோட்டை செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஆலம்பரைக் கோட்டை:

இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டில் முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பின்பு 1750 ஆம் ஆண்டில் இந்த கோட்டை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பூகம்பத்தினால் இந்த கோட்டை சிதலம் அடைந்தது. இந்தக் கோட்டைக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். இது செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து 74 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்:

தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற பறவையினங்கள் சரணாலயம் இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. மார்ச் முதல் அக்டோபர் வரை ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

இங்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவை வந்து சென்றுள்ளன. சுமார் 77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

முதலை காப்பகம்:

1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முதலை காப்பகம் சுமார் 9 ஏக்கரில் அமைந்துள்ளது. இது உலகில் இருக்கக்கூடிய ஊர்வன விலங்கியல் பூங்காவில் மிகப்பெரியது. இங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அழிவு நிலையில் இருக்கும் முதலில் உட்பட 15 இனங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பெரியவர்களுக்கு ரூ.100 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: புதுக்கோட்டை சுற்றியுள்ள டூர் ஸ்பாட்கள்.. இந்த இடமெல்லாம் போய் இருக்கீங்களா?

Latest News