Ramanathapuram Mangrove Forest: இயற்கை எழில் கொஞ்சும் காரங்காடு.. சூப்பரான சுற்றுலா தளம்…
Local Tour : இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் காரங்காடு சதுப்பு நிலக்காட்டில் இயற்கையோடு இயற்கையாக படகு சவாரி செய்யலாம். கடல் வாழ் உயிரினங்கள், வெளிநாட்டுப் பறவைகள் பார்த்து ரசிப்பதோடு முன்பதிவு செய்தால் கடல் உணவுகளையும் உண்டு கழிக்கலாம்.
இராமநாதபுரம் சதுப்பு நிலக்காடு: கடலோரமாக இருக்கும் சதுப்பு நிலங்களில் உள்ள உப்பு நீரில் வளரக்கூடிய அலையாத்தி மரங்கள் சூழ்ந்த பகுதிகள் சதுப்பு நிலக்காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் சுந்தர் பன் சதுப்பு நிலக் காடுகள் தான் உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிதம்பத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் தென் தமிழகத்தில் இருக்கும் ஒரு சதுப்பு நிலக்காடு பற்றி பலருக்கும் தெரியப்படாமல் இருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது இந்த காரங்காடு சதுப்பு நிலக்காடு. பலருக்கும் தெரியாத இந்த சதுப்பு நிலக்காட்டை இராமநாதபுரம் வன சரகம் மேம்படுத்தி வருகிறது. அடர்த்தியான சதுப்பு நில காடுகளுக்கு மத்தியில் கடல் வாழ் உயிரினங்கள், வெளிநாட்டு பறவைகள் என கண்டு கழித்தபடியே படகு சவாரி செய்ய அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இங்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சவாரி செய்யலாம். படகு சவாரி செய்வதற்கு பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.100, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு படகுக்கு குறைந்தது ஐந்து நபர்கள் இருந்தால் மட்டுமே படகுகள் இயக்கப்படும். சுமார் 2 கி.மீ தூரம் அமையும் இந்த பயணத்தில் 55 ஏக்கர் அளவு உள்ள இந்த சதுப்பு நிலக்காடுகளை முழுவதுமாக பார்க்கலாம். மேலும் ஆழ்கடல் நடுவே உள்ள சிறு மணல் திட்டுகளில் இறங்கி விளையாடலாம். அதுக்கு முறையான பாதுகாப்பு உடைகளும் வழங்கப்படுகிறது. வெள்ளை நாரை, சாம்பல் நாரை, செந்நாரை, கருங்குருவி, கிளுவை, கடல் பருந்து, கரண்டிவாயன், பெரிய கொக்கு, மித கொக்கு, ஓலைகிடா, ஆற்று உள்ளான், பிளமிங்கோ, கடல் புறா போன்ற அரிய வகை பறவைகள் படகு சவாரியின் போது காணப்படுகின்றன.
மேலும் பனானா ரைட் (Banana Ride), இரண்டு பேர் சவாரி செய்யக்கூடிய படகு, ஆழ் கடலுக்கு சென்று பவளப்பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பார்க்கக்கூடிய ஸ்கூபா டைவிங் (Scuba Diving) ஆகிய வசதிகளும் இருக்கிறது. இதற்கு தனித்தனியே கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. உணவுக்காக முன்பதிவு செய்தால் கடல் உணவுகளை இயற்கை எழிலோடு அமர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்து தரப்படும்.
Also Read: Travel Tips: போபாலைச் சுற்றியுள்ள இயற்கை அழகின் அதிசயங்கள்.. மறக்காமல் இந்த இடத்திற்கு செல்லுங்கள்!
கவனிக்கப்படாத காரங்காடு சதுப்பு நிலக்காடு:
பெரிதும் சுற்றுலா தளங்கள் இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஏற்பாடு அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது. எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு சூழல் சார்ந்த சுற்றுலாத்தலமாக வனத்துறை அறிவித்தது. 2018 ஆம் ஆண்டிலிருந்து தனியார் மூலமாக காரங்காடு சதுப்பு நிலக்காட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளை கடந்த போதிலும் காரங்காடு சதுப்பு நிலக்காடு பற்றி பெரிதாக யாரும் அறிந்திருக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. ஒரு படகுக்கு ஐந்து நபர்கள் தேவைப்படுவதால், எண்ணிக்கை 5 ஆகும் வரை முன்னே செல்வோர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காத்திருக்க முடியாதவர்கள் எண்ணிக்கையை பூர்த்தி செய்வதற்கு தேவையான தொகையை செலுத்திவிட்டு படகு சவாரி செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் நெடுஞ்சாலையில் இருந்து காரங்காடு கிராமத்திற்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை. சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால் சரியான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.
எப்படிச் செல்வது?
இராமநாதபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திலிருந்து இருந்து சுமார் 37 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 59 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இராமநாதபுரத்தில் இருந்து தொண்டி செல்லும் பேருந்துகளில் ஏறி உப்பூரில் இறங்க வேண்டும். பின்பு அங்கிருந்து ஷேர் ஆட்டோக்களின் மூலம் காரங்காடு சதுப்பு நிலக்காட்டை அடையலாம். இதைத்தவிர அருகில் ரயில் நிலையங்களோ மற்ற பேருந்து நிறுத்தங்களோ இல்லை.
அருகில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்:
காரங்காடு கிராமத்தில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது தேவிபட்டினம். இங்குதான் ராமர் வணங்கிய நவகிரக கற்கள் இருக்கிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய நவகிரக கோவில்களில் கடலுக்குள் இருக்கும் ஒரே நவகிரக கோவில் இதுதான்.
தேவிபட்டினம் நவபாஷாணம் கோயிலில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது சேதுபதி மன்னர்களின் அரண்மனை. இங்கு சேதுபதி மன்னர்களின் வாரிசுகள் ஒரு பகுதியில் வசிக்கிறார்கள். மறுப்பகுதியில் அரசு அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது.
சேதுபதி அரண்மனையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது விவேகானந்தர் நினைவுத்தூண். சுவாமி விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய பின்பு காலடிப்பட்ட இடத்தில் அன்றைய மன்னர் பாஸ்கர சேதுபதியால் இந்த நினைவுத்தூண் கட்டப்பட்டது.
Also Read: Bihar Tour: பீகாரில் இந்த அழகிய இடங்களை தவறவிடாதீர்கள்.. குடும்பத்துடன் இங்கு சென்று வாருங்கள்!