World Year Ender 2024: நிபா முதல் ஜிகா வரை.. உலகை உலுக்கிய டாப் 5 கொடிய நோய்கள்!
Most Dangerous Disease in 2024: 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு பலரும் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கலாம். இந்த நிலையில் இந்த ஆண்டு உலகையும் உலுக்கிய டாப் 5 கொடிய நோய்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வரை கொரோனாவால் ஏகப்பட்ட பேரழிவை இந்த உலகம் முழுவதும் சந்தித்தது. 2024 இல் இருந்து அந்த கொடிய நோயிலிருந்து மீண்டாலும் வேறு சில நோய்கள் மனித இனத்தை தாக்கியது. இந்த நோய்களின் தாக்குதல் அதிகமாகவே இருந்தது. அதிலும் 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த நோய்களின் தாக்குதல் மில்லியன் கணக்கான மக்களை உயிரிழக்கச் செய்தது. இது உலகளாவிய சுகாதார அமைப்புகள் மீது ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்த 2024 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய டாப் 5 கொடிய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நிபா வைரஸ்:
பழந்தின்னி வௌவால் மூலமாக பரவும் இந்த நிபா வைரஸ் 2024 ஆம் ஆண்டு கேரளாவை மிகவும் அச்சுறுத்தி வந்தது. இந்த வைரஸ் தொற்று வேகமாக மாநில முழுவதும் பரவியதோடு அண்டை மாநிலத்திலும் பரவத் தொடங்கியது. இந்தத் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக வேகமாக பரவி விடும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி ஆகியவை ஏற்படுவதோடு மூன்று முதல் 14 நாட்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாக தீவிரமான நிலைக்கு தள்ளப்பட்டால் மூளை வீக்கம் அல்லது மூளை அழற்சி ஏற்படலாம்.
இந்த கொடிய நோயை கட்டுப்படுத்துவதற்கு கேரள மாநில அரசு மற்றும் அண்டை மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டின் சுற்றுப்புறத்தை பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வௌவால்கள் சுற்றுப்புறங்களில் இருந்தால் அப்பகுதியில் இருப்பவர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
Also Read: Year In Search 2024: 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெயர் யாருடையது தெரியுமா? முதலிடத்தில் இவரா..?
டெங்கு:
ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. எனினும் மற்ற ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. குறிப்பாக ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா போன்ற போன்ற பகுதிகளில் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி 2024 ஆம் ஆண்டில் சுமார் 3000 நபர்கள் இந்த டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
கடுமையான முன் தலைவலி, அதிக காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, பசியின்மை, வாந்தி மற்றும் குமட்டல், மூக்கு மற்றும் ஈறுகளில் இரத்த கசிவு, சரும வெடிப்பு, அதிகளவிலான தூக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்
டெங்குவை தடுக்க வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டைச் சுற்றியும் நீர் தொட்டிகளிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தொட்டிகளை அடிக்கடி தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கொசுக்களில் இருந்தும் தப்பிப்பதற்காக கொசு வலைகளை கட்டி உறங்க வேண்டும். மேலும் கொசுக்கள் வராமல் இருப்பதற்காக கொசு மருந்துகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
குரங்கு அம்மை நோய்:
இந்த நோய் ஆப்பிரிக்காவில் உருவாகி காங்கோ, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. 2024 ஆம் ஆண்டு பரவிய முக்கியமான கொடிய நோய்களில் இதுவும் ஒன்று. 2024 ஜூன் மாத நிலவரப்படி உலகம் முழுவதும் 97,281 நபர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் 208 நபர்கள் இந்த நோயினால் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இந்த நோயானது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது.
இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை கடுமையான அரிப்பு, காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, பலவீனம், நிணநீர் கணுக்களில் வீக்கம் போன்றவை குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள்.
ஜிகா வைரஸ்:
இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் காணப்பட்ட இந்த வைரஸ் தொற்றானது 2024 ஆம் ஆண்டு பரவிய மிகக் கொடிய நோய்களில் ஒன்றாகும். இந்த நோய் ஏடிஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் ஏற்படக்கூடியது.
டெங்கு, சிக்கன் குனியா போன்றே காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, சிவந்த கண்கள், கடுமையான சரும அரிப்பு என அறிகுறிகள் இருக்கும்.
Also Read: இந்தியர்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வெளிநாடுகளின் பட்டியல்.. லிஸ்ட் இதோ!
கோவிட்-19 XBB மாறுபாடு:
கொரோனாவின் உருமாற்றமடைந்த கோவிட் 19 XBB மாறுபாடு 2024 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொடிய நோய்களில் ஒன்றாகும். இந்த நோய் முக்கியமாக குழந்தைகளையும் வயதானவர்களையும் அதிகமாக பாதித்தது.
இந்த நோயின் அறிகுறிகளாக இருமல் வயிற்றுப்போக்கு, சோர்வு, தலைவலி, காய்ச்சல் மற்றும் குளிர், சுவை மற்றும் வாசனை இழப்பு தசை வலி ஆகியவை ஆகும்.