5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரும்புச்சத்து குறைபாடு.. சரி செய்வது எப்படி?

Iron Nutrient : எல்லாவிதமான சத்துக்களும் உடம்பில் சரியான அளவு இருந்தால் நமது உடம்பு சரியாக இயங்கும். நாம் பெரிதும் கண்டுகொள்ளாத சிறு சிறு சத்துக்களும் நமக்கு பெரிய விளைவை ஏற்படுத்தும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இரும்பு சத்து குறைபாட்டால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்திய உணவுகளில் அதிக இரும்பு சத்துக்கள் இல்லாத காரணத்தினாலேயே இந்த பாதிப்பு அதிகம் இருக்கிறது. எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தெந்த உணவில் அதிக இரும்பு சத்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரும்புச்சத்து குறைபாடு.. சரி செய்வது எப்படி?
கோப்புப் படம் (Photo Credit: fcafotodigital/E+/Getty Images)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 13 Sep 2024 21:42 PM

இரும்புச் சத்துக்களின் தேவை: மனித உடல் சரியாக இயங்குவதற்கு உடலில் எல்லா விதமான சத்துக்களும் இன்றியமையாது. ஆனால் உணவின் மாறுபாடுகளால் உடம்பிற்கு தேவைப்படுகிற சத்துக்கள் சரியாக கிடைப்பதில்லை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இரும்புச் சத்து என்பது மனிதர்களுக்கு மிகவும் குறைவாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் வளரக்கூடிய குழந்தைகள் இரும்பு சத்து குறைபாடுடன் வளர்கிறார்கள். குழந்தைகள் வேகமாக வளர்வதற்கு இந்த இரும்பு சத்துகள் தேவைப்படுகிறது. இந்திய உணவுகளில் அதிக இரும்புச்சத்து இல்லாத காரணத்தினால் குழந்தைகள் இரும்புச் சத்து குறைபாடுடன் வளர்கிறார்கள். பொதுவாக பிறந்த குழந்தை ஐந்து வயதை கடக்கும் வரை இந்த குழந்தைகளுக்கு அதிகளவில் இரும்பு சத்து தேவைப்படுகிறது. பெண்கள் பூப்பெய்தும் நேரங்களில் இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது.

இரும்புச்சத்து குறைப்பாடை எப்படி கண்டுபிடிப்பது?

பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் சுறுசுறுப்பின்மை, உடல் அதிகமாக சோர்வடைதல், பசியின்மை, முடி உதிர்தல், தேவையான வளர்ச்சியின்மை, பதற்றம், தோல் வெளுப்பாக மாறுதல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் மூலம் போதிய இரும்புச்சத்து இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். உடம்பில் ஹீமோகுளோபின் அளவு 11 க்கும் கீழ் இருந்தால் அது இரும்புச்சத்து குறைபாடு இரத்தசோகை ஆகும்.

Also Read: Benefits of Sprouts: முளைக்கட்டிய தானியங்களால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இதை எப்படி சரி செய்வது?

மருத்துவரின் அறிவுரைப்படி இரும்பு சத்து நிறைந்த டானிக் எடுக்கலாம். இரும்புச்சத்து குறைபாடு வராமல் இருப்பதற்கு இரும்பு சத்து அதிகம் உள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை அதிக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குடலில் பூச்சிகள் இருந்தால் இந்த இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். எனவே குடலில் பூச்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எந்தெந்த உணவுகளில் அதிக இரும்பு சத்துக்கள் உள்ளது:

இரும்புச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய முக்கிய உணவுகளில் ஒன்று ஈரல். ஆட்டு ஈரல் அல்லது கோழி ஈரல் எது கிடைத்தாலும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக கல்லீரலை விட மண்ணீரலில் இரும்பு சத்து ரொம்பவே அதிகமாக இருக்கிறது. இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் வாரத்தில் ஒரு முறையாவது 50 கிராம் முதல் 100 கிராம் வரை ஈரல்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆட்டு இறைச்சி, கோழிக்கறி, மீன்கள் போன்ற அசைவ உணவுகளில் அதிக இரும்பு சத்துகள் இருக்கிறது. அதைப்போல் கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக வாரம் இரு முறை கேழ்வரகு, கம்பு, திணை, சாமை போன்ற தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

கொள்ளு, சோயா பீன்ஸ் போன்ற பயிர் வகைகளில் இரும்பு சத்துகள் இருக்கிறது. கருப்பு உளுந்து, கருப்பு சுண்டல், ராஜ்மா போன்ற பயிறு வகைகளிலும் இரும்பு சத்து அதிகமாக கிடைக்கிறது. இதுபோன்ற பயிர் வகைகளை நேரடியாக சாப்பிடுவதை விட முளைகட்டி சாப்பிட்டால் இரட்டிப்பான சத்துகள் கிடைக்கும். பொதுவாக எல்லாக் கீரைகளிலும் இரும்பு சத்து அதிகமாக இருக்கும். ஆனால் குறிப்பாக அகத்திக்கீரை, முருங்கைக் கீரைகளில் அதிக அளவு இரும்புச்சத்து கிடைக்கிறது. பாதாம், முந்திரி, பிஸ்தா, பூசணி விதை, சூரியகாந்தி விதை போன்றவற்றிலும் இரும்பு சத்து அதிகமாக கிடைக்கும்.

கருப்பு எள்ளு, கருஞ்சீரகம், கடுகு, மஞ்சள் போன்று அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களிலும் அதிக அளவில் இரும்பு சத்து இருக்கிறது. அடுத்ததாக பழங்கள் காய்கறிகளில் இரும்பு சத்து இருக்கிறது. ஆனால் அதை பழச்சாராக அருந்தக்கூடாது. பழங்களை சாராக மாற்றும்பொழுது அதில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், தாதுப்புக்கள், நார்ச்சத்துக்களின் அளவு குறைந்து விடும். எனவே பழங்களிலிருந்து கிடைக்கக்கூடிய சத்து முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அதை நேரடியாக தான் சாப்பிட வேண்டும். அதைப்போல் கருப்பு பேரீச்சம் பழம், கருப்பு உலர் திராட்சை போன்றவற்றில் அதிக அளவில் இரும்பு சத்துகள் நிறைந்து கிடக்கின்றன. நாம் எடுத்துக் கொள்ளும் இரும்புச் சத்துக்கள் நம் உடம்பில் சேர வேண்டும் என்றால் அதிக அளவில் வைட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த உணவை தவிர்க்க வேண்டும்:

தேனீர், காபி, கோக் போன்ற கஃபைன் (Caffine) நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்ட பின் தேநீர் போன்ற பானங்களை அருந்துவதால் உடம்பிற்கு கிடைக்க வேண்டிய இரும்பு சத்துக்களை கிடைக்க விடாமல் செய்கிறது. அதேபோல் கால்சியமும் உடலில் உறிஞ்சப்படும் இரும்பு சத்துகளை தடுக்கிறது. எனவே எப்பொழுது இரும்புச் சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொண்டாலும் கால்சியம் மாத்திரையோ அல்லது கால்சியம் நிறைந்த உணவுகளையோ எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உணவு சமைக்கும் போது சாதாரண பாத்திரங்களில் சமைப்பதை விட இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் இயற்கையாகவே இரும்பு சத்துகள் நிறைய கிடைக்கும்.

Also Read: Drumstick Benefits: முருங்கை ஆரோக்கியத்திற்கு ஒரு அற்புத மருந்து.. இதன் பலன்களை அறிந்தால் அசந்து போவீர்கள்!

Latest News