5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dindigul Tourist Places: அதியங்கள் நிறைந்த திண்டுக்கல்.. சூப்பரா சுற்றுலா போய்ட்டு வாங்க!

Travel Tips: திண்டுக்கல் பிரியாணி என்று அழைக்கப்படும் இங்குள்ள பிரியாணி அதன் தனி சுவையால் மக்களால் விரும்பப்படுகிறது. ஒருபுறம், திண்டுக்கல் பழனி முருகன் கோவிலுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. தென்னிந்தியாவின் மலைவாசஸ்தலங்களின் இளவரசி கொடைக்கானல் முதல் குட்டி கொடைக்கானல் சிறுமலை வரை இங்கு ஏகப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. குடும்பத்துடன் எங்கெங்கு செல்லலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Dindigul Tourist Places: அதியங்கள் நிறைந்த திண்டுக்கல்.. சூப்பரா சுற்றுலா போய்ட்டு வாங்க!
திண்டுக்கல் (Image source: tamilnadu tourism)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 08 Aug 2024 16:58 PM

திண்டுக்கல் டூர்: தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் வணிக, தொழில்துறை மற்றும் அழகிய சுற்றுலாத் தலங்கள் என அனைத்தையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது திண்டுக்கல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாருக்கு அடுத்தபடியாக இரும்பு பூட்டு தயாரிக்கும் பாரம்பரியம் திண்டுக்கலில் உள்ளது. இது தவிர இங்குள்ள தோல் தொழில் மற்றும் கைத்தறி தொழில் பொருளாதார ரீதியாகவும், உணவுக்கு பிரியாணியும் இங்கு மிகவும் பிரபலம். திண்டுக்கல் பிரியாணி என்று அழைக்கப்படும் இங்குள்ள பிரியாணி அதன் தனி சுவையால் மக்களால் விரும்பப்படுகிறது. ஒருபுறம், திண்டுக்கல் பழனி முருகன் கோவிலுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. தென்னிந்தியாவின் மலைவாசஸ்தலங்களின் இளவரசி கொடைக்கானல் முதல் குட்டி கொடைக்கானல் சிறுமலை வரை இங்கு ஏகப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. குடும்பத்துடன் எங்கெங்கு செல்லலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலை பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு கொடைக்கானல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். “மலைகளின் இளவரசி” என்று குறிப்பிடப்படும் கொடைக்கானல், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் மிகவும் விரும்பப்படும் மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், 1845 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளாலும், கிறிஸ்தவ மிஷனரிகளாலும் ஒரு தலமாக நிறுவப்பட்டது. கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் ஏரி, வெள்ளி நீர் வீழ்ச்சி, க்ளென் நீர் வீழ்ச்சி, தூண் பாறை உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலரும் இப்பகுதியின் மற்றுமொரு கண்கவர் காட்சியாக காட்சியளிக்கிறது. அழகிய காட்சிகளை விரும்புவோர் கொடைக்கானலுக்கு சென்று வாருங்கள்.

திண்டுக்கல் மலைக்கோட்டை:

திண்டுக்கல் மலையின் உச்சியில் அமைந்துள்ள திண்டுக்கல் பாறைக் கோட்டை 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ண நாயக்கரால் கட்டப்பட்டது. திண்டுக்கல் நகரின் தொன்மையைப் பிரதிபலிக்கும் அடையாளச் சின்னமாக இந்தக் கோட்டை விளங்குகிறது. 280 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை முழு நகரத்தின் கண்கொள்ளா காட்சியை வழங்குகிறது. அதன்பிறகு, ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிக்க திப்பு சுல்தானுக்கு இங்குதான் ஒழிந்து இருந்ததாக வரலாறு கூறுகிறது. வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பழங்கால கட்டிடக்கலை அதிசயத்தை காண ஆர்வமுள்ளவர்கள் திண்டுக்கல்லில் உள்ள புகழ்பெற்ற இடங்களுள் ஒன்றான இந்த இடத்துக்கு தவறாமல் சென்று பாருங்கள்.

பேகம்பூர் பாடி மசூதி:

இது மைசூர் சுல்தான் ஹைதர் அலியால் கட்டப்பட்ட பெரிய ஜமா மஸ்ஜித் ஆகும், இது பேகம்பூர் பாடி மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வரலாற்று மசூதி 300 ஆண்டுகள் பழமையானது. மைசூர் சுல்தான் ஹைதர் அலி தனது தங்கையான பேகம் அமிருன்னிசாவின் நினைவாக இந்த மசூதியை அவரது கல்லறைக்கு அருகில் கட்டினார். இந்த மசூதிக்கு பேகம் அமிருன்னிசா பெயரால் பேகம்பூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. சுல்தான் ஹைதர் அலியின் சகோதரியின் கல்லறை மசூதிக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.

தாடிக்கொம்பு பெருமாள் கோயில்:

திண்டுக்கல் நகரிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் தாடிக்கொம்பு பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் அழகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அழகர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அழகருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

அபிராமி அம்மன் கோயில்:

பார்வதி தேவியின் அவதாரமான அபிராமி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அபிராமி அம்மன் கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. பார்வதி தேவியுடன், சிவபெருமானின் சிலையும் கோயிலில் உள்ளது. ஆயுத பூஜை காலத்தில் கோயிலில் நவராத்திரி கொலு வைக்கப்படும் போது தொலைதூர இடங்களிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சிறுமலை:

கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிறுமலை மலைத்தொடர்கள், பசுமை மற்றும் அழகால் நிறைந்தவை. இங்கு புனித தலங்களான அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் மற்றும் வெள்ளிமலை முருகன் கோயில்கள் உள்ளது. சிறுமலை மலை வாழைப்பழம் என்று அழைக்கப்படும் வாழை வகை மலை உச்சியில் பயிரிடப்படுகிறது. இங்கிருந்து கொண்டு வரப்படும் வாழைப்பழத்தில்தான் பழனியில் உள்ள முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. காட்டுப்பன்றி, சோம்பல் கரடி, குள்ளநரி மற்றும் சிறுத்தை போன்ற மற்ற காட்டு விலங்குகளும் இந்த இடத்தில் வசிக்கின்றன. மலை உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது, நீங்கள் மலையேற்றம் செல்லலாம்.

திண்டுக்கல் செல்லும் பாதை

சாலை வழியாக:

திண்டுக்கல் மதுரையிலிருந்து 65 கிமீ தொலைவிலும், கோயம்புத்தூரில் இருந்து 155 கிமீ தொலைவிலும், கொச்சியிலிருந்து 260 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. NH 45A சென்னை-கன்னியாகுமரி, NH-209 பெங்களூரு-திண்டுக்கல்லில் அமைந்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு நேரடி பேருந்து சேவைகள் உள்ளன.

ரயில் பாதை:

திண்டுக்கல் ரயில் நிலையம் ஒரு சந்திப்பு நிலையமாகும், இங்கிருந்து மதுரை, சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில்கள் உள்ளன.

விமானம் மூலம்:

திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள விமான நிலையம் திண்டுக்கல்லில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள மதுரை விமான நிலையம் ஆகும். திண்டுக்கல் நகருக்குள் வர வண்டி அல்லது டாக்ஸி மூலமாகவும் 2 மணி நேரத்திற்குள் கடக்க முடியும்.

Latest News