Wagamon: 125 நாட்களுக்குப் பின்பு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த வாகமன் கண்ணாடி பாலம்!
Wagamon Glass Bridge: பாதுகாப்பு காரணங்களை காட்டி சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட வாகமன் கண்ணாடி பாலம் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டுமான பொறியியல் துறை தெரிவித்த இடைக்கால அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகளையும் பின்பற்ற அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த பாலம் மீண்டும் திறக்க அனுமதி கிடைத்துள்ளது.
வாகமன் கண்ணாடி பாலம்: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பிரபலமான மலை வாசஸ்தலமான வாகமனுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. இங்கு இருக்கும் கண்ணாடி பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வந்தது. சில பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பாலம் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அறிவுறுத்திய பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்த பின்னர் மீண்டும் அந்தப் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பாலம் இந்தியாவின் மிக நீளமான கான்டிலீவர் கண்ணாடி பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பிரமிப்பூட்டும் பாலம்:
இந்தப் பாலத்தின் நடப்பது மூலம் கொக்கையார் மற்றும் முண்டக்காயம் போன்ற தொலைதூர இடங்களை இங்கிருந்து பார்க்க இது ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இங்கிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது உண்மையில் கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு கேரளா பயணிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
கொக்கையார், குட்டிக்கல் மற்றும் முண்டக்காயம் போன்ற தொலைதூர பகுதிகளில் இருக்கும் அழகிய காட்சிகளை ஹோலாஹலமேட்டில் அமைந்திருக்கும் இந்த 3600 அடி உயர பாலத்தில் இருந்து ரசிக்க முடியும். மேலும் அருகில் உள்ள பூங்காவில் ஸ்கை விங், ஸ்கை சைக்கிள், ராட்சத ஊஞ்சல், ஸ்கை ரோலர் மற்றும் ராக்கெட் இன்ஜெக்டர் வசதிகள் உடன் சுற்றுலா பயணிகளுக்கு சாகசத்தின் அனுபவத்தை வழங்குகிறது.
மீண்டும் திறக்கப்படுகிறது:
கட்டுமான பொறியியல் துறையால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுவதால் இங்கு நிறுவப்பட்டுள்ள வசதிகள் 100% பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனவே 40 மீட்டர் பாலத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் வரை நடக்க முடியும். மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட அந்த பாலத்தை ஒரே நாளில் சுமார் 600 சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.
இங்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை:
ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் அதிகபட்சமாக இங்கு ஆறு நிமிடங்கள் வரை செலவிடலாம். இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.250 வசூலிக்கப்படுகிறது. இங்கு பார்வையாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். சீரற்ற வானிலை ஏற்பட்டால் நிலைமைகள் சரியாகும் வரை பாலத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்படும். கைக்குழந்தைகளை சுமந்து செல்ல முடியாததால் அவர்களுக்கு பாலத்தில் அனுமதி இல்லை. ஆனால் வயதை பொருட்படுத்தாமல் சுதந்திரமாக நடக்கக்கூடிய குழந்தைகளுக்கு நுழைவு வழங்கப்படுகிறது. பாலத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கைக்குழந்தைகளை அனுமதிக்கப்படுவதில்லை. பாலத்தில் நுழைந்த பிறகு குழந்தைகளை கையில் தூக்கிக் கொள்ள அனுமதி இல்லை.
பாலத்தில் ஓடவோ விளையாடவோ அனுமதி இல்லை. மேலும் பாலத்தில் உலா வருபவர்கள் நடக்கும் போது பக்கவாட்டு கம்பிகளை பிடித்துக் கொள்ள வேண்டும். விடுமுறை நாட்கள் போன்ற பிசியான நாட்களில் சுற்றுலா பயணிகள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் காத்திருக்கும் நேரத்தை அனுபவிக்க நேரிடும். அந்த நேரத்தில் அவர்கள் சாகச பூங்கா அம்சங்களை விளையாடி மகிழலாம். நீங்கள் டிக்கெட்டை வாங்கும்போது பாலத்தில் நுழைவதற்கான நேர இடைவெளி வழங்கப்படும். அந்த நேரத்தில் நீங்கள் அங்கிருந்தால் போதுமானது. பொதுவாக விடுமுறை நாட்களில் இது போன்று சற்று நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படும். இந்தப் பாலம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மற்ற சுற்றுலா தலங்களைப் போலவே இங்கும் அதிக கூட்ட நெரிசல் இருக்கும். அதேபோல் வழியில் கடுமையான போக்குவரத்தும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த அம்சங்களை வைத்துக்கொண்டு உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள்.