5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadi Amavasai: ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறந்த நேரம் எது?

Aadi Masam: மற்ற மாதங்களை விட தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை என்பது மிக மிக முக்கியம். அதாவது ஆடி மாதம் தான் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும். அதன்படி பித்ரு உலகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள் தங்கள் தலைமுறையை பார்ப்பதற்காக புறப்படும் மாதமாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.

Aadi Amavasai: ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறந்த நேரம் எது?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Aug 2024 15:44 PM

ஆடி அமாவாசை: ஆடி மாதம் என்றாலே அது பக்தி நிகழ்வுகளுக்கான மாதம் என முன்னோர்கள் கணித்துள்ளார். அதனால் தான் இந்த மாதத்தில் எந்தவொரு சுபகாரியங்களும் நடைபெறாமல் முழுக்க முழுக்க ஆன்மீக விழாக்கள் மட்டுமே நடைபெறும். குறிப்பாக மற்ற மாதங்களை விட தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை என்பது மிக மிக முக்கியம். அதாவது ஆடி மாதம் தான் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும். அதன்படி பித்ரு உலகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள் தங்கள் தலைமுறையை பார்ப்பதற்காக புறப்படும் மாதமாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

ஆனால் அமாவாசைக்கான திதி ஆகஸ்ட் 3 ஆம் தேதி சனிக்கிழமை மாலையே தொடங்குகிறது. இந்து சாஸ்திரத்தில் சூரியன் உதயத்தை கணக்கில் கொண்டு திதி கணக்கிடப்படும் என்பதால் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தான் ஆடி அமாவாசையாக கருதப்படுகிறது. அந்த நாளில் நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை எமகண்டம் நேரமாகும். அதனால் முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் 1.30 மணிக்கு மேல் படையல் போட்டு வழிபடலாம். சாப்பிடுவதற்கு முன் காகத்திற்கு சாதம் வைப்பதும் பிற்பகல் 1.30க்கு பின்னரே செய்ய வேண்டும்.

ஆடி அமாவாசை நாளில் அதிகாலையில் எழுந்து நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி நம் முன்னோர்களுக்கும், இழந்த பெற்றோர்களுக்கும் பிள்ளைகள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கடல் அல்லது ஆறு போன்று ஓடும் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி முன்னோர்களின் ஆசியுடன் கூடிய புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். இதேநாளில் சிலர் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்வர். குறிப்பாக குலதெய்வ கோயிலுக்கு செல்வது மிகுந்த சிறப்பை தரும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய கடல் பகுதிகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், திருச்சி காவிரி நதிக்கரை ஆகியவற்றிலும் தர்ப்பணம் கொடுக்கலாம். கடல், ஆறு இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கோயில் தெப்பக்குளத்தில் தர்ப்பணம் செய்யலாம். குலதெய்வ வழிபாடு எப்படி முக்கியமோ, அதேபோல் பித்ருக்கள் வழிபாடும் மிக முக்கியம் தான். ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் முன்னோர்களுக்கு விரதம் இருக்க  முடியாதவர்கள் ஆடி, தை, புரட்டாசி அமாவாசையில் விரதம் இருக்கலாம்.

மேலும் ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் தர்ப்பணம் கொடுக்க நினைப்பவர்கள் அதிகாலை சூரிய உதயம் தொடங்கி முற்பகல் 11.45 மணிக்குள் கொடுக்க வேண்டும். 12 மணிக்கு மேல் தர்ப்பணம் கொடுக்க வேண்டாம். மாலையில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று முன்னோர்களை நினைத்து விளக்கேற்றி வழிபடலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News