Thiruvarppu: பசியால் மெலியும் கிருஷ்ணர் சிலை.. கேரளாவில் இப்படி ஒரு கோயிலா?

Thiruvarpu: சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது கூட இந்த கோவிலின் கதவுகள் மூடப்படுவதில்லை என்பது சிறப்பான சம்பவமாகும். ஒருமுறை கிரகணத்தின் போது கோவில் கதவு மூடப்பட்டதாகவும்,  பின்னர் கிரகணம் முடிந்து கோவில் கதவுகளை திறந்து பார்த்தபோது, ​​கிருஷ்ணர் சிலை மெலிந்து அவர் இடுப்பில் இருந்த உடை நழுவி விழுந்து கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Thiruvarppu: பசியால் மெலியும் கிருஷ்ணர் சிலை.. கேரளாவில் இப்படி ஒரு கோயிலா?

கோப்பு புகைப்படம்

Published: 

06 Aug 2024 15:41 PM

திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில்: இந்தியாவில் பல்வேறு விதமான மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் திரும்பும் திசையெங்கும் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் பல தலங்களுக்கு விசித்திரமான, வித்தியாசமான, மர்மமான வரலாறுகளும் உண்டு. அந்த வகையில் கேரளாவில் காணப்படும் கோயில் ஒன்றை பற்றி நாம் பார்க்கலாம். இங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் நாள் ஒன்றுக்கு 10 முறை பகவானுக்கு உணவு பிரசாதம் வைக்கப்படுகிறது. நேரம் தவறினால் கிருஷ்ண பகவான் பசியால் வாடி மெலிந்து விடுவார் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது.

திருவாரப்புவில் கிருஷ்ணர் கோவில் என்றும், திருவார்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் என்று சுற்று வட்டார மக்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் இரண்டாவது சிறப்பு என்னவென்றால், 24 மணி நேரத்தில் 2 நிமிடம் மட்டுமே இந்த கோவிலின் கதவுகள் மூடப்படும்.

கோயிலின் வரலாறு

 

இந்த கோயிலுக்கு என பல வரலாறு கதையாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்று கேரளாவைச் சேர்ந்த வில்வமங்கலம் சுவாமியார் என்ற முனிவர் ஒருமுறை படகில் ஏரியில் சென்று கொண்டிருந்தார். ​​அவரது படகு ஓரிடத்தில் சிக்கியது. எவ்வளவோ முயற்சி செய்தும் படகு முன்னோக்கி நகர முடியாமல் போனதால், தன் படகு முன்னோக்கி நகராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி அவர் மனதில் எழ ஆரம்பித்தது.

இதைத்தொடர்ந்துதண்ணீரில் நீந்திச்சென்று பார்த்தால் அங்கு சிலை கிடந்ததைக் கண்டார். அந்த சிலையை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து தனது படகில் வைத்திருந்தார். அதன் பிறகு ஒரு மரத்தடியில்  சிலையை  வைத்திருந்து ஓய்வெடுக்க முடிவெடுத்தார். சில மணி நேரத்தில் கிளம்ப முடிவு செய்து சிலையை தூக்க முயன்றார். ஆனால் அது அப்படியே ஒட்டிக்கொண்டு வராமல் இருந்துள்ளது. இதையடுத்து அங்கு சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையிலுள்ள கிருஷ்ணரின் மனநிலை, கம்சனைக் கொன்றபோது அவர் மிகவும் பசியுடன் இருந்த காலகட்டமாக கூறப்படுகிறது. இதனால் கோயிலில் கிருஷ்ணருக்கு எப்போதும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

10 முறை பிரசாதம் வழங்குதல்

 

இக்கோயிலில் வீற்றிருக்கும் கிருஷ்ணர் பசியைத் தாங்கமாட்டார் என்ற நம்பிக்கை இக்கோயிலில் உள்ளது என்பதை பார்த்தோம். இதன் காரணமாக அவரின் பசியைப் போக்க சிறப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளது. அதன்படி கிருஷ்ணருக்கு ஒரு நாளைக்கு 10 முறை பிரசாதம் கொடுக்கப்படுகிறது. அப்படி பிரசாதம் கொடுக்கவில்லை என்றால் கிருஷ்ணரின் உடல் மெலிந்து விடும் என நம்பப்படுகிறது. அதேசமயம் கொடுக்கப்படும் பிரசாதம் தட்டில் இருந்து சிறிது சிறிதாக மறைந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. கிருஷ்ணர் தனக்கு வழங்கப்படும் பிரசாதத்தை உண்பதாக நம்பப்படுகிறது.

கிரகணத்தின் போது கதவுகள் திறக்கப்படும்

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது கூட இந்த கோவிலின் கதவுகள் மூடப்படுவதில்லை என்பது சிறப்பான சம்பவமாகும். ஒருமுறை கிரகணத்தின் போது கோவில் கதவு மூடப்பட்டதாகவும்,  பின்னர் கிரகணம் முடிந்து கோவில் கதவுகளை திறந்து பார்த்தபோது, ​​கிருஷ்ணர் சிலை மெலிந்து அவர் இடுப்பில் இருந்த உடை நழுவி விழுந்து கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கிரகண காலத்திலும் கோவிலை திறந்து வைத்து, குறித்த நேரத்தில் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த கோயிலில் 24 மணி நேரத்தில் 2 நிமிடம் மட்டுமே இந்த கோவில் மூடப்படுகிறது. கோயில் இரவு 11.58க்கு மூடப்படும். 2 நிமிடம் கழித்து சரியாக 12 மணிக்கு திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!