Sorimuthu Ayyanar: குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய சொரிமுத்து அய்யனார் கோயில்!

Temple Special: வெளியூரில் இருந்து பேருந்தில் செல்ல நினைப்பவர்கள் பாபநாசம் வரை சென்று உள்ளூர் பேருந்து அல்லது இன்ன பிற வாகனங்கள் மூலமாக கோயிலை சென்றடையலாம். ரயில் மூலமாக செல்ல நினைப்பவர்கள் திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக செல்லலாம்.

Sorimuthu Ayyanar: குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய சொரிமுத்து அய்யனார் கோயில்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

05 Aug 2024 15:43 PM

சொரிமுத்து அய்யனார் கோயில்: நம்முடைய வாழ்க்கையில் குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானது. அடிக்கடி இல்லாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிபாட்டை குடும்பத்துடன் மேற்கொள்ள வேண்டும். நம் வீட்டு பூஜையறையிலும் குலதெய்வத்தின் புகைப்படம் கட்டாயம் இடம் பெற வேண்டும். இப்படியான நிலையில் சிலருக்கு அவர்களுடைய குலதெய்வம் எதுவென்ற சூழல் கூட உள்ளது. ஜாதகம், முன்னோர்களின் அடிப்படை தகவலை கொண்டு உறுதி செய்தாலும் சரியாக சொல்ல முடியாது. அப்படிப்பட்டவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம் என்ற கேள்வி எழும். அவர்களுக்காகவே வீற்றிருக்கிறார் சொரிமுத்து அய்யனார். அந்த கோயிலின் சிறப்புகளைப் பற்றியும், அதன் பிற தகவல்களை பற்றியும் நாம் காணலாம்.

எங்கு உள்ளது?

சொரிமுத்து அய்யனார் கோயில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. வெளியூரில் இருந்து பேருந்தில் செல்ல நினைப்பவர்கள் பாபநாசம் வரை சென்று உள்ளூர் பேருந்து அல்லது இன்ன பிற வாகனங்கள் மூலமாக கோயிலை சென்றடையலாம். ரயில் மூலமாக செல்ல நினைப்பவர்கள் திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக செல்லலாம்.

Also Read: Garbharakshambigai Temple: குழந்தை வரம் அருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில்!

கோயிலின் சிறப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோயிலை சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசுகள் தற்போது நிர்வகித்து வருகின்றனர். தை மற்றும் ஆடி அமாவாசை, பங்குனி உத்திரம், சபரிமலை சீசன் ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி இக்கோயில் அய்யனாரை வழிபடுகின்றனர்.

முருகன், விநாயகருக்கு எப்படி அறுபடை வீடு இருக்கிறதோ அதேபோல ஐயப்பனுக்கு இருக்கிறது. அதாவது அச்சங்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை ஆகிய 5 வீடுகளை காட்டிலும் மிகவும் விசேஷமானது சொரிமுத்து அய்யனார் கோயில். இங்கு தான் சபரிமலைக்கு முன்னால் சாஸ்தா அமர்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த கோயிலில் இருக்கும் சாஸ்தா, இடதுகாலை மட்டும் குத்துகாலிட்டு உட்கார்ந்து, வலது காலை தொங்கவிட்டு சற்றே இடதுப்புறமாக திரும்பி இருக்கும்படி காட்சித்தருகிறார். மகாலிங்கம், சங்கிலி பூதத்தார், பட்டவராயர், பேச்சியம்மன், கரடி மாடசாமி, தூசி மாடன், தளவாய் மாடன், எண்ணெய் சாஸ்தா, மொட்டையர் என ஏராளமான காவல் தெய்வங்கள் உள்ளது.

Also Read:Aadi Amavasai: ஆடி அமாவாசை.. சமையலில் சேர்க்கக்கூடாத காய்கறிகள் என்னென்ன?

தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலம்

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டையடித்தும், விலங்குகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் கோயிலின் ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் சங்கிலிப்பூதத்தார் பின்னணியில் இருக்கும் மரத்தில் பிரார்த்தனைக்காக மணி கட்டும் வைபவமும் நடக்கிறது.ஆடி அமாவாசை நாளில் பூக்குழி இறங்கும் நிகழ்வும் வெகுவிமரிசையாக இருக்கும்.

தென்மாவட்ட மக்களிடையே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் சிலருக்கு குலதெய்வம் பற்றி தெரிந்திருக்காது. அப்படிப்பட்டவர்கள் சொரிமுத்து அய்யனாரை குலதெய்வமாக நினைத்து வழிபட்டால் தலைமுறைகள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் செழித்து வளரும். இந்த கோயிலுக்கு காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை செல்லலாம். செல்லும் வழியில் அகஸ்தியர் அருவி, பாபநாசம் மேலணை, கீழணை, சேர்வலாறு அணை, காணி குடியிருப்பு, வனப்பேச்சி அம்மன் கோயில் ஆகியவை காணலாம். மேலும் சொரிமுத்து அய்யனார் கோயிலை தாண்டி காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி ஆகியவையும் உண்டு. இத்தகைய பாணதீர்த்தம் அருவி மேல் இருக்கும் சுனையில் இருந்து தான் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்