5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vallalar Temple: உலக மக்களின் பசியைப் போக்கும் வடலூர் வள்ளலார் கோயில்!

தினமும் அடியார் ஒருவருக்கு அன்னமிட்ட பிறகு சாப்பிடுவது தான் சின்னம்மையின் வழக்கமாக இருந்துள்ளது. தாயின் இந்த குணம் தான் பிற்காலத்தில் ஏழைகளுக்கு உணவிட்டு சேவை செய்யும் தரும சாலை இராமலிங்க அடிகள் அமைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் வள்ளலார் எனும் பெயரால் அறியப்படும் இராமலிங்க அடிகள் தமிழ் ஞானிகள் வரிசையில் அதிக ஞானம் உடையவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

Vallalar Temple: உலக மக்களின் பசியைப் போக்கும் வடலூர் வள்ளலார் கோயில்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Oct 2024 15:00 PM

வடலூர் வள்ளலார் கோயில்: “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என சொன்ன வள்ளலார் அவதரித்த தினமான இன்று கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் கோயில் பற்றி காணலாம். வள்ளலார் பற்றி பெரும்பான்மையானவர்கள் பாட புத்தகத்தில் படித்திருக்கலாம். இராமலிங்க அடிகள் என இயற்பெயர் கொண்ட அருட்பிரகாச வள்ளலார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் ராமையா – சின்னம்மை தம்பதியினர் ஆவர். தினமும் அடியார் ஒருவருக்கு அன்னமிட்ட பிறகு சாப்பிடுவது தான் சின்னம்மையின் வழக்கமாக இருந்துள்ளது. தாயின் இந்த குணம் தான் பிற்காலத்தில் ஏழைகளுக்கு உணவிட்டு சேவை செய்யும் தரும சாலை இராமலிங்க அடிகள் அமைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் வள்ளலார் எனும் பெயரால் அறியப்படும் இராமலிங்க அடிகள் தமிழ் ஞானிகள் வரிசையில் அதிக ஞானம் உடையவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆன்மிகச் சொற்பொழிவாளர், நூலாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, பதிப்பாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர் என பன்முகங்களை கொண்டவர்.

வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவியவர். உலகில் உள்ள எல்லா தீமைகளுக்கும் காரணம் பசி தான் என்பதை வள்ளலார் உணர்ந்தார். 1867 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி வடலூரில் தருமசாலை அமைத்து அன்னதானம் துவங்கினார். அதற்காக அன்றைய நாள் அவர் பற்ற வைத்த நெருப்பு தற்போது வரை அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த அடுப்பு 21 அடி நீளம் 2.5 அடி அகலம் கொண்டது. அடுப்பு அணைக்கவே கூடாது என்பதற்காக இந்த தரும சாலையில் தீப்பெட்டி கூட வாங்கப்படாமல் வழக்கத்தில் இருந்து வருகிறது. சமையல் செய்யாத இரவு வேளைகளில் கூட நெருப்பு அணையாமல் இருக்க பணியாளர் ஒருவர் விறகுகளை வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

Also Read: Chakrapani Swami Temple: திருமண தடையால் அவதியா? – தீர்வு வழங்கும் சக்கரபாணி பெருமாள்!

கிட்டத்தட்ட 157 வருடங்களாக இங்கு பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு தயாரிக்க தேவையான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளூர்,வெளியூர் பக்தர்கள் மூலமாக தருமசாலைக்கு கொடுக்கப்படுகிறது. தினமும் காலை 6 மணி, 8 மணி நண்பகல் 12 மணி,  மாலை 5 மணி மற்றும் இரவு 8 மணி ஆகிய ஐந்து வேளைகளில் அன்னதானம் நடைபெறுகிறது. விசேஷ நாட்களில் இங்கு நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறும்.

இன்றளவும் வடலூர் மற்றும் உலகின் இன்ன பிற பகுதிகளிலும் வள்ளலார் பெயரால் ஏழை மக்களுக்கு தொடர்ந்து பசியாற்றப்பட்டு வருகிறது.1873 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சமரச சன்மார்க்க சங்கத்தின் கொடியேற்றி அடியார்களுக்கு உபதேசம் வழங்கிய வள்ளலார் சில நாட்களுக்குப் பின்பு இறைவனை ஜோதியாக வழிபடும்படி அறிவுறுத்தி அங்குள்ள சித்தி வளாகத்தில் தீபம் ஒன்றை வைத்தார். 1874 ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் தேதி (ஜனவரி 30) சித்தி வளாகம் இருக்கும் அறைக்குள் சென்றவர் இறைவனுடன் அருட்பெருஞ்ஜோதியாக இரண்டற கலந்தார்.

Also Read: கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?

கடலூர் மாவட்டம் வடலூரில் 1872 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி சத்ய ஞான சபையை நிறுவினார். இந்த ஞான சபை அனைத்து மதத்தினரும் வந்து வணங்கக் கூடிய ஒரு பொதுவான ஆலயமாக திகழ்கிறது. அது மட்டுமல்லாமல் மது, மாமிசம் தவிர்த்தவர்கள் மட்டுமே சபைக்கு உள்ளே செல்ல அனுமதி உண்டு. இந்த சத்திய ஞான சபையானது எண் கோண வடிவில் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதன் முன் மண்டபத்தில் கீழ் புறமாக பொற்சபையும், மேல்புறமாக திருச்சபையும், மையத்தில் ஞானசபையும் அமைந்திருக்கிறது. இந்த மையத்தின் நடுவில் தான் அருட்பெருஞ்ஜோதியாக வள்ளலார் காட்சியளிக்கிறார்.

இந்தக் கோயில் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஒவ்வொரு தை மாதம் வரும் தைப்பூசம் அன்று ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5:30 மணி ஆகிய ஆறு நேரங்களில் இந்த ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு மாதமும் வரும் பூசம் நட்சத்திரத்தன்று இரவு 8 மணிக்கு 6 திரைகள் மட்டும் விலக்கி மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Latest News