தெய்வத்திற்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய பூக்கள் என்னென்ன தெரியுமா?

Flowers in Pooja: தெய்வ வழிபாட்டில், பூக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அதன் அழகான தோற்றம் நமது பக்தியையும் அழகுபடுத்தி விடுகிறது. பூக்களை கொண்டு வழிபடுவது சந்தோஷம், பக்தி மற்றும் வாழ்க்கையில் முக்கியத்துவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இதில் பக்தர்கள் தம் வழிபடும் தெய்வங்களுக்கு விருப்பமான மலர்களை கொண்டு பூஜித்தால் நிறைய நன்மைகளும் கிடைக்கும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய பூக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தெய்வத்திற்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய பூக்கள் என்னென்ன தெரியுமா?

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

01 Nov 2024 13:28 PM

பூக்களை சரியானதாக தேர்ந்தெடுத்து வழிபடுவதன் மூலம் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பூக்களும் அதன் நன்மைகள் பற்றியும், எல்லா தெய்வங்களுக்கும் உகந்த சமர்ப்பிக்க கூடிய மற்றும் சமர்ப்பிக்க கூடாத பூக்களை பற்றியும் பூக்களை இறைவனுக்கு சமர்ப்பிக்கும் சரியான முறை பற்றியும் பார்க்கலாம். இறைவனுக்கு மலர்களை சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். தினமும் புதிய மலர்களை கொண்டு பூஜிக்க வேண்டும். மாலை நேரத்தில் பூக்களை பறிக்கக் கூடாது. பூக்களை பறித்து விட்டு அந்த செடிக்கு நமது நன்றியை தெரிவிக்க வேண்டும். பூக்களை பறிக்கும்போது மந்திரம் ஓதிக் கொண்டு செய்வது நல்லது.

பூக்கள் தேர்வு

உதிர்ந்து போன மலர்களை பூஜைக்கு எடுக்கக் கூடாது. மலராத பூக்களையும் பறிக்கக் கூடாது. நன்றாக மலர்ந்த பூக்களை மட்டுமே இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பூக்களை பறித்த பிறகு சுத்தமான நீரில் கழுவிய பிறகு சமர்ப்பிக்க வேண்டும். வாடிய மலர்கள், பூச்சிகளால் அரிக்கப்பட்ட பூக்கள் போன்றவற்றை படைக்கக்கூடாது.

மலர்களும் அதன் பயன்களும்:

  • வெண்மையான பூக்கள்: சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனுக்கு பூஜை செய்தால் முக்தி கிடைக்கும்.
  • சிவப்பு நிற பூக்கள்: ராஜகுணம் கொண்ட பூக்கள். இவற்றை கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களை தரும்.
  • மஞ்சள் நிற பூக்கள்: சுகபோகத்தையும் மோக்ஷத்தையும் தரும் மற்றும் எல்லா காரியங்களிலும் சித்தி கிடைக்கும். பரம்பரை விருத்தி அடையும்.
  • கருப்பு நிற பூக்கள்: தாமஸ குணம் கொண்டவை ஆகவே பொதுவாக இவற்றை பூஜைக்கு உபயோகிக்க கூடாது.

Also Read: November Month: கந்த சஷ்டி, கார்த்திகை மாத பிறப்பு.. நவம்பரின் முக்கிய விசேஷ தினங்கள்!

தெய்வங்களுக்கு உகந்த மலர்கள்:

விநாயகர்: சிவப்பு நிற மலர்கள் அவருக்கு விருப்பமான மலராகும். செம்பருத்தி தாமரை, ரோஜா, மல்லி, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற மலர்களையும் சமர்பிக்கலாம். இதை தவிர அருகம்புல்லும் வில்வ இலைகளையும் சமர்ப்பிக்கலாம்.

முருகப்‌ பெருமான்: செவ்வரளி, செம்பருத்தி பூக்கள் மிகவும் உகந்தது.

சிவப் பெருமான்: வெள்ளை நிற மலர்கள் இவருக்கு உகந்தது.மகிழம்பூ, நீல நிற தாமரை, பிங்க் நிற தாமரை, வெள்ளை தாமரை சமர்ப்பிக்கலாம். செவ்வரளி போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம். வில்வ இலைகள், ஊமத்தம் பூ, நாகசேர்ப்பு, பாரிஜாதம் மற்றும் எருக்கம் பூ போன்றவற்றையும் சமர்ப்பிக்கலாம்.

துர்க்கை அம்மன்: சிவப்பு நிற மலர்களான செம்பருத்தி, தாமரை குண்டுமல்லி மற்றும் வில்வ இலைகள் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.

பார்வதி தேவி: சிவபெருமானுக்கு படைக்கப்படும் எல்லா மலர்களையும் அன்னை பார்வதி தேவிக்கும் சமர்ப்பிக்கலாம்.

மகா விஷ்ணு: இவருக்கு தாமரை மலர்தான் மிகவும் பிடித்தது. தாமரை குண்டுமல்லி, மல்லிகை, சாமலி பூக்கள், சம்பங்கி பூ வெள்ளை கதம்ப பூக்கள் போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம். துளசி இலைகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

மகாலட்சுமி: மகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரையாகும். அதை தவிர மஞ்சள் சாமந்தி, ரோஜா பூ ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

ஸ்ரீ ராமர்: சாமலி பூக்கள் படைக்கலாம்.

அனுமன்: துளசி மாலை மிகவும் உகந்தது.

தத்தாத்ரேயர்: மல்லிகைப்பூ, வில்வ இலைகள், அத்தி மர இலைகள் போன்றவற்றை படைக்கலாம்.

கிருஷ்ணர்: துளசி இலைகள் மிகவும் உகந்தது. நீல நிற தாமரை, பாரிஜாதம், நந்தியாவட்டம் போன்ற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

பிரம்மதேவர்: நந்தியாவட்டம் மற்றும் வெள்ளை நிற தாமரை கொண்டு பூஜிக்கலாம்.

சரஸ்வதி தேவி: வெள்ளை நிற தாமரை வெள்ளை நிற பூக்கள் கொண்டு வழிபடலாம்.

மகாகாளி: மஞ்சள் நிற அரளி பூ கொண்டு பூஜிக்கலாம்.

பைரவர்: செவ்வரளி, சிகப்பு ரோஜா போன்ற சிகப்பு நிற மலர்களை சமர்ப்பிக்கலாம்.

சனீஸ்வரர்: நீல நிற பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். அதுவும் சனிக்கிழமைகளில் செய்யும் போது கூடுதல் பலன் கிடைக்கும்.

இவை அல்லாமல் துளசி, மகிழம்பூ, செண்பகப்பூ, தாமரை, வில்வம், மரிக்கொழுந்து, மருதாணி, அருகம், நாயுருவி, விஷ்ணுகிராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உரியவை.

Also Read: Spiritual: சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம்… வழிபடும் முறையும் பலன்களும்..!

தெய்வங்களுக்கு சமர்ப்பிக்க கூடாத பூக்கள்:

  • விநாயகருக்கு தாழம்பூ, துளசி போன்றவற்றை சமர்ப்பிக்க கூடாது.
  • சிவபெருமானுக்கு தாழம்பூ சமர்ப்பிக்க கூடாது.
  • மகாலட்சுமிக்கு தும்பை பூ சமர்ப்பிக்க கூடாது.
  • மகாவிஷ்ணுவிற்கு அஷதா பூக்களை பயன்படுத்தக் கூடாது.
  • ஸ்ரீ ராமருக்கு அரளிப்பூக்களை படைக்கக்கூடாது.
  • சூரிய பகவானுக்கு வில்வ இலைகளை சமர்ப்பிக்க கூடாது.
  • சரஸ்வதி தேவிக்கு பவளமல்லி பூக்களை சமர்ப்பிக்க கூடாது.
  • பைரவருக்கு வெள்ளை நிற மலர்களை சமர்ப்பிக்க கூடாது.

 

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!