முருகப்பெருமானின் கோபத்திற்கு ஆளான பாம்பன் சுவாமிகள்… ஆன்மிக வரலாறு! - Tamil News | history and details of sree math pamban swamigal details in tamil | TV9 Tamil

முருகப்பெருமானின் கோபத்திற்கு ஆளான பாம்பன் சுவாமிகள்… ஆன்மிக வரலாறு!

History of Pamban Swamy: ஆழி சூழ் இவ்வுலகத்தில் இச்சைகளை துறந்து உலகில் வாழும் உயிர்களின் நன்மைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாக சீலர்கள் எண்ணற்றோர் நம் தமிழ்நாட்டில் உண்டு. எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே என்று திருவாக்கினை தாரக மந்திரமாக கொண்டு உலகம் மாந்தருள் ஒருவராக வாழ்ந்தாலும் தனக்கென்று தனிப்பட்ட வாழ்வாங்கு வாழ்க்கை நடத்தி மக்கள் மனதில் வானுறையும் தெய்வமாக வாழும் சிலருள் ஒருவர் தான் ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாச சுவாமிகள் என்று அழைக்கப்படும் பாம்பன் சுவாமிகள்.

முருகப்பெருமானின் கோபத்திற்கு ஆளான பாம்பன் சுவாமிகள்... ஆன்மிக வரலாறு!

பாம்பன் சுவாமிகள் (Photo Credit: Mohamed Muzammil)

Published: 

07 Nov 2024 18:24 PM

தத்துவ தமிழ் உலகில் உன்னத நிலையை அடைய அவதரித்த ஞானப்பெரியோர்களின் தன்னிகரற்ற விளங்கியவர் தான் பாம்பன் சுவாமிகள். நினைத்த நேரமெல்லாம் அழகன் முருகனின் புகழை கனிய கனிய பாடி பரவசமடைந்தவர் பாம்பன் சுவாமிகள். பழந்தமிழ் குடியில் சாந்த பிள்ளை செங்கமலம் தம்பதியருக்கு ஞான மகனாக ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பனில் தோராயமாக 1848 ஆம் ஆண்டு முதல் 1850 ஆம் ஆண்டுக்குள் சுவாமிகள் பிறந்ததாக சொல்லப்படுகின்றது. இவர் பிறந்த தேதி சரியாக தெரியவில்லை இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும் 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிறிஸ்தவ பள்ளியில் பயின்றார். முனியாண்டி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் திகழ்ந்த சுவாமிகள் தெய்வத்திரு முருகன் பால் அளவு கடந்த பக்தி கொண்டவர்.

பாம்பன் சுவாமிகள் முருகனுக்கு செய்த சத்தியம்:

ஒரு முறை துறவறம் மேற்கொண்டு பழனிக்கு சென்று பழனி ஆண்டவரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் சுவாமிகள் மனதில் உதித்தது. தனது உள்ளத்தில் தோன்றியதை தனது உற்ற நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம் கூறினார். ஸ்வாமிகளின் குடும்ப வாழ்க்கையையும் அவருடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு தற்சமயம் வேண்டாம் என்று சுவாமிகளை தடுத்தார். சுவாமிகள் மீண்டும் கூற இது பழனி முருக கடவுளின் ஆணையா என்ற கேள்வியை எழுப்பினார் அவரது நண்பர். சுவாமிகள் ஆம் என்பதற்கு இணங்க தன் தலை அசைத்து பதில் கூறினார். அன்று மாலை நேரத்தில் சுவாமிகள் தனது வீட்டில் அமர்ந்திருந்தார்.

Also Read: கார்த்திகை ஏகாதசி வழிபாடு எப்படி செய்யணும் தெரியுமா? ஆன்மிகம் சொல்லும் முறை!

அப்போது தென் திசையில் கோபக் கனலாக இறைவனின் உருவம் தென்பட்டது. கருணை கடலான முருகப்பெருமான் கோபக் கனலாக தன் முன் காட்சி கொடுப்பதைக் கண்ட பாம்பன் சுவாமிகள் கண்களில் நீர்வழிய நான் தழுதழுக்க மனம் குன்றி கைக்கூப்பிய படி நின்றார். பழனிக்கு வருமாறு உனக்கு ஆணையிட்டேனா? என்ற குரல் அவரது செவிகளில் ஓங்கி ஒலித்தது.

அளவற்ற பக்தியினாலும் ஆன்ம லாபத்தை அடைய வேண்டும் என்ற ஆசையினாலும் அவ்வாறு கூறினேன் என்று சுவாமிகள் பதிலளித்தார். பழனிக்கு நீ எப்போது வரவேண்டும் என்று எமக்குத் தெரியாதா? அந்த ஆன்ம லாபத்தை உமக்கு யாம் அளிக்க மாட்டோமா? என் உத்தரவின்றி நீ பொய் உரைத்ததால் என்னிடம் இருந்து அழைப்பு வரும் வரை நீ பழனிக்கு வருவதில்லை என்று எனக்கு சத்தியம் செய்யும் என்று இறைவனின் குரல் செவிகளில் ஒலித்தது. பாம்பன் சுவாமிகள் திக்கற்று நின்றார். இறைவனின் உருவம் மறைந்தது.

இதன் பிறகு சுவாமிகளின் வாழ்நாள் முழுவதும் பழனி தண்டாயுத தெய்வத்திடம் இருந்து பழனியம் பதிக்கு வருமாறு அழைப்பு வரவே இல்லை இதனால் சுவாமிகளும் பழனிக்கு செல்ல முடியாமல் போனது. தாம் இயற்றிய பழனி மலை பதிகத்தில் என்று என்னை பழனிக்கு அழைப்பாயோ? என்று பொருள்படி பத்து பாடல்களை இயற்றியுள்ளார் சுவாமிகள்.

முருகப் பெருமானின் உபதேசம்:

சுவாமிகள் முருகப்பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என்ற பேராவலால் பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்குள்ள மயான பகுதியில் ஒரு சதுர குழி வெட்ட செய்து அதை சுற்றி முள்வேலி அமைக்க சொன்னார். பின்னர் அக்குழியில் இறங்கி தியான யோகத்தில் ஈடுபட்டார். முதல் ஐந்து நாட்கள் பல இன்னல்கள் ஏற்பட்டன. இறைவனின் சடாட்சரம் மந்திரத்தின் துணையால் இன்னல்கள் கலைந்தது. ஏழாம் நாள் முருகப்பெருமான் அகத்தியர், அருணகிரிநாதர் ஆகிய இருவரும் சூழ பழனி தண்டாயுத பானியாக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து குரு உபதேசம் செய்து வைத்தார்.

தொடர்ந்து சுவாமிகள் தவத்தினை மேற்கொண்டார். 35 ஆம் நாள் தவயோகத்தில் இருந்து எழுக என்ற குரல் கேட்டது. என் இறைவன் முருகப்பெருமான் கட்டளையிட்டால் மட்டுமே தவத்தில் இருந்து எழுவேன் என்று உறுதியாக கூறினார் பாம்பன் சுவாமிகள். இறைவன் முருகன் கட்டளை தான் எழுக என்று குரல் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுவாமிகள் தவக்குழியில் இருந்து எழுந்து அக்குழியை மூன்று முறை வலம் வந்து இறைவனுக்கு பல பூஜை முறைகளை செய்யத் தொடங்கினார்.

Also Read: திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கை.. ஆன்மிக வரலாறு இதுதான்!

மறைவு:

தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் அரும் தொண்டாற்றிய பாம்பன் சுவாமிகள் மே 30ஆம் தேதி 1929 அன்று மகா சமாதி அடைந்தார் அவரது உடல் அவர் விருப்பப்படி திருவான்மியூர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. என்னை தள்ளினாலும் என்னை நம்பியோரை தள்ளேன் என்று முருகப்பெருமானிடம் வேண்டியவர் சுவாமிகள்.

தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குக பிரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும் சாஸ்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகப்பெருமானின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் மொத்தம் 6666 ஆகும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக  நம்பிக்கை மற்றும் தகவலின்படி மட்டுமே எழுதப்பட்டது)

கருப்பு நிற புடவையில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்
புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்
நடைபயிற்சிக்கு பிறகு இந்த தவறை பண்ணாதீங்க
ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?