5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Varahi Amman: காளியின் சொரூபம்… வாராகி‌ அம்மனை வீட்டில் வைத்து வணங்கலாமா?

Varahi Amman Vazhipaadu: சமீப காலமாக தமிழ்நாட்டில் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆனால் அம்மன் வழிபாடு நம் நாட்டில் காலகாலமாக இருந்து வருகிறது. வாராஹி அம்மன் தோற்றத்தை வைத்து‌ அவரை வீட்டில் வைத்து வணங்கலாமா ‌ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது. எனவே வாராகி அம்மனை வீட்டில் வைத்து வணங்கலாமா? வழிபடும் முறை, நேரம் மற்றும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Varahi Amman: காளியின் சொரூபம்… வாராகி‌ அம்மனை வீட்டில் வைத்து வணங்கலாமா?
வராஹி அம்மன் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 11 Nov 2024 15:12 PM

அம்பாளின் பலவகையான ரூபங்களில் ஒன்றுதான் இந்த வாராகி அம்மன். பல வகையான அம்மன் படங்களை நம் வீட்டில் வைத்து வழிபட்டாலும் வாராகி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இன்றுவரை இருந்துதான் வருகின்றது. இதற்கு அம்மனுடைய தோற்றமும் அவர் காளியின் சொரூபம் என்பதினால் தான். வாராகி தேவி கோப குணத்தை கொண்டவர் இல்லை. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தவறு செய்பவர்கள் தான் பார்த்து பயப்பட வேண்டும். ஏனென்றால் முனிவர்களை வாட்டி வதக்கிய அசுரர்களை அழித்தவர் இந்த வாராகி அம்மன். தவறு செய்யாதவர்களுக்கு வரங்களை அள்ளித் தருபவர் இந்த தேவி. தன்னலம் பாராமல் கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல் இவரை வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்யும் தெய்வம்தான் இந்த வாராகி அம்மன்.

தீயோர்களை அழித்து நல்லோர்களை காக்கும் வாராகி அம்மனை வீட்டில் வைத்து தாராளமாக வழிபடலாம். நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் முழு பக்தியுடன் வாராகி அம்மனை வேண்டி வழிபடுபவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது நம்பிக்கையோடு வழிபடுங்கள்.

வழிபடும் முறை:

வராகி அன்னையை படமாகவோ விக்கிரகமாகவோ அல்லது எந்திரமாகவோ வைத்து பூஜை செய்பவர்கள் என்றால் தினமும் அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும். திருவுருவப்படத்தை துடைத்து பொட்டு, பூ வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். விக்கிரகத்திற்கும் எந்திரத்திற்கும் அபிஷேகம் செய்து பொட்டு வைத்து பூக்கள் வைக்க வேண்டும். வராகி அம்மனுக்கு சிவப்பு நிற மலர்கள் மிகவும் விருப்பமானது. அதிலும் சிவப்பு தாமரை மிகவும் உகந்தது.

Also Read: வாராகி அம்மன் வழிபாடு.. தஞ்சை பெருவுடையார் கோயில் கட்ட இடம் காட்டிய கடவுள்!

பிறகு அன்னைக்கு விளக்கேற்ற பஞ்சு திரி, தாமரை தண்டு, வாழைத் திரி பயன்படுத்தலாம். அதிலும் தாமரைத் தண்டு திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கஷ்டம் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு தேங்காயினை உடைத்து இரண்டு மூடிகளிலும் நெய் விட்டு பஞ்சு திரி போட்டு குங்குமமிட்டு தீபம் ஏற்றி அந்த தீபம் தானாக குளிரும் வரை விட வேண்டும்.

வேண்டுதல் எதுவும் இல்லாவிட்டாலும் கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடுவது சிறந்த பலனை தரும். விளக்கேற்றி விட்டு தினமும் குங்கும அர்ச்சனை அல்லது பூக்களால் அர்ச்சனை செய்யலாம். சிறிது நேரம் அமர்ந்து அம்பிகையை நோக்கி தியானம் செய்யலாம். பிறகு தேங்காய் பழம், வெற்றிலை, பாக்கு சமர்ப்பித்து பிறகு தீப தூப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.

நெய்வேதியம்:

தோல் எடுக்காத மிளகு சேர்த்த உளுந்து வடை, வெண்ணெய் எடுக்காத தயிர் சாதம், மொச்சை சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கருப்பு எள்ளுருண்டை, சர்க்கரைவள்ளி கிழங்கு, தேன் ஆகியவற்றை படைக்கலாம். பழங்களில் மாதுளை பழம் மிகவும் உகந்தது.

வழிபடும் நேரம்:

பிரம்ம முகூர்த்த வேலையில் வழிபடலாம். அல்லது மாலை 6 மணிக்கு மேல் வழிபடலாம். பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை தவிர தசமி அஷ்டமி பௌர்ணமி, அமாவாசை ஆனி, ஆடி மாதம் வரக்கூடிய ஆஷா ரவராத்திரி வராகி அம்மனுக்கு உரியது. வளர்பிறை பஞ்சமி திதியில் வராஹி தேவியை மனதார வழிபடுங்கள் வீட்டில் குடும்பமாக அமர்ந்து விளக்கேற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள்.

Also Read: திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கை.. ஆன்மிக வரலாறு இதுதான்!

பலன்கள்:

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் வராகி அன்னையை வழிபடுவதால் விவசாயம் செழிக்கும். வீட்டில் எப்பொழுதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இவரை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல் பில்லி சூனியத்தில் இருந்து காப்பாற்றுவார். நினைத்த காரியம். நிறைவேறும் திருமண தடை விலகும்‌.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணைப் பிடித்து வைத்து அதை வாராகி என்று நினைத்து வழிபாடு செய்தால் இந்த உலகத்தில் வாழ்வதற்கு உண்டான தகுதி அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

வராகி அம்மன் வழிபாட்டில் ஒருபோதும் அடுத்தவர் கெட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு வழிபடவே கூடாது. நம்முடைய நலனுக்காக மட்டுமே வரம் கொடுப்பவள் வராகி அம்மன். தவறான எண்ணத்தோடு வராகிய அம்மனை வழிபடுவது தண்டனையை நமக்கு நாமே தேடிக் கொள்வதற்கு சமம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக  நம்பிக்கை மற்றும் தகவலின்படி மட்டுமே எழுதப்பட்டது)

Latest News