முருகனின் அறுபடை வீட்டிற்கு இலவசமாக செல்லலாம்.. விண்ணப்பிப்பது எப்படி?
Free Spiritual Journey: முருகனின் அறுபடை வீடுகளை தரிசிக்க 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களை தமிழக அரசின் இந்து அமைய அறநிலையத் துறை சார்பாக இலவசமாக அழைத்து செல்லப்படுகிறது. ஆண்டுதோறும் ஐந்து முறை 200 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த இலவச ஆன்மீக பயணத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்
மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் ஆன்மீகம் பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசின் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் அழைத்துச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஆண்டிற்கான ஆன்மீக பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு சில தகுதி உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.ஏற்கனவே இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய பகுதிகளுக்கு ஆன்மீகம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த இடங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் 500 நபர்களுக்கு அரசு மானியத்தை உயர்த்தி வழங்கி வருகிறது.
அதைப்போல் புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்ல தமிழக சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது தவிர இராமேஸ்வரத்தில் இருந்து காசி வரை ஆன்மிக பயணமாக கடந்த ஆண்டு 200 நபர்களும் இந்த ஆண்டில் 300 நபர்களும் கட்டணம் இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழனி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்கு மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் ஒரே முறையில் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பக்தர்களை அழைத்துச் செல்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் பயணம் ஆண்டுக்கு ஐந்து முறை என்ற கணக்கில் ஆண்டுக்கு ஆயிரம் பக்தர்களை அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read: Girivalam: எந்த நாளில் கிரிவலம் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
விண்ணப்பிப்பது எப்படி:
அந்த வகையில் சென்னை கந்தக் கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட பயணத்தில் 207 மூத்த குடிமக்களும் இரண்டாவதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இருந்து மார்ச் மாதம் புறப்பட்ட ஆன்மீக பயணத்தில் 200 மூத்த குடிமக்களும் பங்கேற்று பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து தென்தமிழகத்தில் உள்ள பக்தர்கள் பயனடையும் வகையில் மூன்றாம் கட்ட பயணம் 200 பக்தர்கள் பங்கேற்று முடிவடைந்தது. இப்பொழுது அடுத்த கட்டமாக நான்காவது முறையாக முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணம் இலவசமாக செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிக்க கோரி அனுமது அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறுபடை வீடு இலவச ஆன்மீக பயணத்திற்கு செல்ல விருப்பமுடையவர்கள் அருகில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். அல்லது https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மீக பயணம் செல்லும் பக்தர்களுக்கு கீழ்கண்ட நிபந்தனைகளை தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதின் அடிப்படையில் அவர்கள் அளித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- அறுபடை வீடு ஆன்மீகப் பயணம் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- இந்தப் பயணத்திற்கு செல்ல விரும்பும் பக்தர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- வயதை உறுதி செய்வதற்காக வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
- இந்தப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் சரியான போதிய உடல் தகுதி கொண்டிருக்க வேண்டும்.
- பக்தர்கள் வசிக்கும் தங்கள் வீட்டின் நிலையான முகவரியின் ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.
- இந்த ஆன்மீகப் பயணத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுடன் சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை.
- ஆதார் அட்டை அல்லது நிரந்தர கணக்கு எண் (PAN Card) ஆகியவற்றின் ஏதாவது ஒரு நகலை இணைக்க வேண்டும்.
- அருகில் இருக்கக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மீண்டும் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- ஆன்மீகப் பயணம் செல்வதற்கு விண்ணப்பிக்கும் பக்தர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு குறைவாக இருக்க வேண்டும். எனவே அதற்காக வட்டாட்சியரிடம் வருமானச் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
- இந்த கட்டணம் இல்லா ஆன்மீகப் பயணத்தில் பக்தர்கள் ஒருமுறை மட்டுமே கலந்து கொள்ள முடியும். சென்ற முறை கலந்திருந்தால் இந்த முறை விண்ணப்பிக்க இயலாது.
Also Read: Sabarimala Booking: சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்யவில்லையா? ஸ்பாட் புக்கிங் விவரம்!