Shashti Viratham: வாழ்க்கையில் ஒளிவீசும் வளர்பிறை சஷ்டி விரதம்.. எப்படி இருக்கலாம்?
Murugan Temples: விரதம் இருக்கும் பக்தர்கள் முடிந்தவரை அருகில் இருக்கும் நீர்நிலைகளுக்கு சென்று நீராட வேண்டும். முடியாதவர்கள் வீட்டிலேயே நீராடலாம். சிலர் இந்நாளில் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும்,பிற பகுதிகளில் இருக்கும் முருகன் கோயிலுக்கும் சென்றும் தங்கி இருந்து வழிபடுவதும் வழக்கம். பகல் பொழுதில் இருவேளை சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.
பொதுவாக ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறையில் பல்வேறு விதமான திதிகள் வரும். அப்படியாக வரும் ஒவ்வொரு நாளுக்கும் சாஸ்திரத்தில் பல்வேறு விதமான விரத முறைகள், வழிபாடுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியாக வளர்பிறை, தேய்பிறையில் வரும் திதிகளில் சஷ்டியும் ஒன்றாகும். கடவுள் முருகனுக்குரிய சிறப்பான தினமாக இது கருதப்படுகிறது. ஐப்பசி மாதம் வரும் சஷ்டி தான் இந்த நாளில் சிறப்பானது என்றாலும், முருகனை தன்னில் ஒருவனாக நினைத்து வழிபடுபவர்கள் மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் விரதம் இருப்பார்கள்.
நாமெல்லாம் சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற பழமொழியை கேட்டிருப்போம். ஆனால் சஷ்டியில் விரதம் இருந்தால் தான் கருப்பையில் குழந்தை வரும் என்பது தான் அதன் அர்த்தம். அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய நாளாக பார்க்கப்படும் சஷ்டியில் அதிகாலையில் நீராடி விட்டு முருகனை நினைத்து விரதத்தை தொடங்க வேண்டும். நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோம் என்பதை வழிபாட்டின்போது கூறி விரதத்தை முடிக்க வேண்டும். குழந்தை வரம் மட்டுமல்லாமல் எந்த வேண்டுகோளுக்கும் சஷ்டி தினத்தில் விரதம் இருக்கலாம் என கூறப்படுகிறது. முருகப்பெருமான் நிச்சயம் நம்முடைய பிரச்னையை தீர்த்து வைத்து இந்த நாளில் நமக்கும், குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவார் என நம்பப்படுகிறது.
விரதம் இருப்பது எப்படி?
விரதம் இருக்கும் பக்தர்கள் முடிந்தவரை அருகில் இருக்கும் நீர்நிலைகளுக்கு சென்று நீராட வேண்டும். முடியாதவர்கள் வீட்டிலேயே நீராடலாம். சிலர் இந்நாளில் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும்,பிற பகுதிகளில் இருக்கும் முருகன் கோயிலுக்கும் சென்றும் தங்கி இருந்து வழிபடுவதும் வழக்கம். பகல் பொழுதில் இருவேளை சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். உடல்நிலை முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் கடைபிடிக்கலாம். விரதம் இருக்கும் நேரங்களில் செல்போன், டிவி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் ஆன்மிக விஷயங்களை செய்யலாம். குறிப்பாக முருகனின் பக்தி பாடல்களை பாடலாம். மேலும் வீட்டில் இருப்பவர்கள் முருகன் புகைப்படம் அல்லது சிலை முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
குழந்தை பேறு, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பணியில் பதவி உயர்வு, ஆரோக்கியம் என அனைத்தும் கிடைக்க இந்நாளில் விரதம் இருந்து வழிபடலாம். மேலும் ஒரு பிரச்னை தேய்ந்து முடிவுக்கு வர வேண்டும் என்றால் தேய்பிறையிலும், நாம் செய்யப்போகும் ஒரு காரியம் வளர வேண்டும் என்றால் வளர்பிறையிலும் சஷ்டி விரதம் இருக்கலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)