5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amavasai: அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு வைப்பது எப்படி?

Aadi Amavasai: காகம் நம் தலைமுறையினர் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்கக் கூடிய சனீஸ்வர பகவானுக்குரிய வாகனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது தான் பூமியில் நாம் செய்யும் திதி, தர்ப்பணம் போன்ற விஷயங்களை பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாக நம்பப்படுகிறது.

Amavasai: அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு வைப்பது எப்படி?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Aug 2024 15:41 PM

அமாவாசை தினம்: பொதுவாக நாம் எப்போதும் நம் முன்னோர்களையும், குலதெய்வத்தையும் தவறாமல் ஆண்டுதோறும் வணங்க வேண்டும். நம்மை இன்னல்களில் இருந்து காத்து, தலைமுறைகளை செழித்து வாழ வைக்கும் இந்த இரண்டு வழிபாடுகள் வாழ்க்கையில் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் முன்னோர் வழிபாடு என்பது சிலர் ஒவ்வொரு மாத அமாவாசையிலும் கடைபிடிப்போம். அப்படி முடியாதவர்கள் தை , ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாளில் கண்டிப்பாக முன்னோர்களை வழிபட வேண்டும். இந்த 3 அமாவாசை தினத்திலும் பெற்றவர்களை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். மற்ற அமாவாசைகளில் வீட்டிலேயே புகைப்படம் முன்பு வழிபாடு செய்து விரதம் கடைபிடிக்கலாம். அப்படி விரதம் கடைபிடிக்கும்போது காகத்துக்கு சாதம் வைப்பது வழக்கம். சிலருக்கு இதில் சில சாஸ்திரங்கள் உள்ளது பற்றி தெரியாது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

அவ்வாறு அமாவாசை நாளில் காகத்துக்கு உணவளிப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசிகள் நமக்கு கிடைக்கிறது. மேலும் நமக்கு வாழ்க்கையில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் நாம் செய்யும் பாவங்களின் விளைவுகள் குறையும். பித்ருதோஷம் உள்ளிட்ட தோஷங்களில் இருந்து விட முடியும் என கூறப்படுகிறது.

அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியமானது. காரணம் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை இதுவாகும்.  இந்நாளில் தான் பித்ருலோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள் நம்மை காண பூமிக்கு வர புறப்படுவதற்கான காலம் தொடங்கும் என்பதால் ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் தந்தை வழி உறவுகளுக்கு காரணமான கிரகமான சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமையிலும், கர்மகாரகன் என சொல்லப்படும் சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்திலும் இணைந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 04ம் தேதி ஆடி அமாவாசை அமைந்துள்ளது.

காகத்திற்கு சாதம் வைக்கும் முறை

பொதுவாக அமாவாசை நாள் மட்டுமல்லாமல் விசேஷ நாட்களிலும் காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது. இதில் காகத்திற்கு இலை போட்டு, உணவு படைத்து அது சாப்பிட்ட பிறகே முன்னோர்களுக்கு படைத்து வழிபட வேண்டும். இதன் பின்னரே நாம் உணவு சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ள வேண்டும். எத்தனையோ  உயிரினங்கள் இப்பிரபஞ்சத்தில் இருக்கும் போது காகத்திற்கு மட்டும் உணவு வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுவது உண்டு. இதற்கு ஜோதிட ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

காகம் நம் தலைமுறையினர் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்கக் கூடிய சனீஸ்வர பகவானுக்குரிய வாகனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது தான் பூமியில் நாம் செய்யும் திதி, தர்ப்பணம் போன்ற விஷயங்களை பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாக நம்பப்படுகிறது. காகம் சாதாரணமாக குப்பையில் கிடக்கும் பொருட்களையும், இறந்த உயிரினங்களையும் சாப்பிடும்.

அதேநேரம் நாம் இலை போட்டு வைக்கும் உணவுகளையும் சாப்பிடும். இதன்மூலம் கர்ம வினைகளால் நாம் எவ்வளவு தான் வாழ்க்கையில் கீழான நிலையில் இருந்தாலும், அவற்றை நீக்கி, வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்கும் நிலையை உண்டாகும் என்பது தான் இதன் பொருளாகும்.

முன்னோர்கள் காகத்தின் வடிவிலேயே வந்து நாம் படைக்கும் உணவுகளை சாப்பிடுவதாக நம்பப்படுகிறது. நமக்கு நேரம் நன்றாக இருந்தால்  காகங்கள் நாம் வைக்கும் உணவுகளை உடனடியாக சாப்பிட்டு விடும். ஒருவேளை நமக்கு நேரம் சரியில்லாத நிலையில் காகங்கள் சற்று யோசித்து சாப்பிடும் என சொல்லப்படுகிறது. சில நேரங்களில் காகம் நாம் வைக்கும் உணவை சாப்பிடாமல் செல்வதும் நடைபெறும்.

மேலும் அமாவாசை நாளில் செய்யப்படும் சமையலில் வாழைக்காய் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். குறிப்பாக முன்னோர்களுக்கு விருப்பமான உணவுகளை அன்று படைக்கலாம்.  விருப்பமான உணவுகள், வாழைக்காய், எள், நெய் கலந்த சாதத்தை காகத்திற்கு வைப்பதால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என கருதப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News