Margazhi Month: மார்கழி மாதத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை: பொதுவாக மார்கழி மாதம் என்றால் பீடை மாதம் என்று பலரும் தவறாக கருதுகிறார்கள். ஆனால் மார்கழி மாதத்தில் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எந்த விதமான காரியங்களிலும் ஈடுபடலாம். பக்தியில் திளைக்க வேண்டிய இந்த மாதத்தில் செய்ய வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பீடு நடை போட்டு பக்தியில் நாம் நடக்க வேண்டிய மாதம் மார்கழி மாதம். ஆனால் காலப்போக்கில் இது பீடை மாதம் என்று மாறிப்போனது. ஆனால் நாம் பக்தியில் முழுவதும் திளைத்து நிற்க வேண்டிய மாதம் இந்த மார்கழி மாதம். தேவர்கள் கண்விழிக்கக்கூடிய இந்த மாதத்தில் வழிபாடு செய்தால் உடனடியாக அதனுடைய பலன் கிடைக்கும். மார்கழி மாதம் 2024 டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி 2025 ஜனவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த மார்கழி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
செய்யக்கூடாதவை:
வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதாவது புதிதாக குடி போவது, பால் காய்ச்சுவது, கிரகப்பிரவேசம் செய்வது போன்றவற்றை செய்யாமல் இருக்க வேண்டும். அதை தவிர கார் வாங்குதல், வளைகாப்பு நடத்துதல் போன்ற எந்தவித சுப நிகழ்ச்சிகளையும் இந்த மாதத்தில் நடத்தலாம். எனவே இந்த மாதம் ஆகாத மாதம் அல்ல. மாறாக முழுக்க முழுக்க பக்தி செய்வதற்குரிய ஒரு மாதமாகும். இந்த மாதத்தில்தான் சிவபெருமானுக்கு மிக மிக விசேஷமான ஆருத்ரா தரிசனம் நாள் இந்த மாதத்தில் தான் அமைந்திருக்கிறது. பெருமாளுக்கு மிகவும் உகந்த வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தில் தான் அமைந்திருக்கிறது.
அனுமன் ஜெயந்தியும் இந்த மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. எனவே நிறைய பண்டிகைகள் நிறைந்த அற்புதமான இந்த மாதம் தெய்வீகத்தோடும் இறை வழிபாட்டோடும் தொடர்புடையதாக அமைந்திருக்கிறது.
செய்ய வேண்டியவை:
காலை பொழுதில் எழுந்து குளித்து விளக்கேற்றி பூஜை செய்தால் அதற்கான பலனை நீங்கள் ஆண்டு முழுவதும் அனுபவிக்கலாம். கடுகடுப்பாக கஷ்டத்தோடு எழுந்து இதை செய்தால் அதில் எந்தவித பலனும் இருக்காது. நீங்களாகவே மனம் விரும்பி காலையில் எழுந்து பூஜைகள் செய்து வந்தால் உங்களுக்கான பலனை நீங்கள் உணர்வீர்கள்.
Also Read: வீடு செழிக்க தினமும் செய்ய வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்!
மார்கழி மாதம் 1ஆம் தேதி முதல் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள்.
விளக்கேற்றுதல்:
காலை 4 மணி முதல் காலை 5 மணிக்குள் வாசலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். சாதாரண அகழ் விளக்கில் சாதாரண பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி நிலைவாசலில் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். அதன் பிறகு பூஜை அறையில் விளக்கேற்றி வீடு முழுக்க சாம்பிராணி போட வேண்டும். வீடு முழுக்க மணக்கச் செய்துவிட்டு எந்த தெய்வத்துடைய நாமம் தெரியுமோ அல்லது எந்த தெய்வத்தை பிரியமாக வழிபாடு செய்வீர்களோ அந்த தெய்வத்துடைய நாமத்தை காலையில் குறைந்தது பத்து நிமிடங்கள் வழிபாடு செய்ய வேண்டும்.
காலை நேரத்தில் விளக்கேற்றும்போது உங்களுக்கான வேண்டுதல் ஏதேனும் இருந்தால் அந்த நேரத்தில் வேண்டிக் கொள்ளுங்கள். இதை பெண்கள் மட்டும் அல்லாமல் குழந்தைகள், ஆண்கள் என யார் வேண்டும் இந்த தீபத்தை மார்கழி மாதம் முழுவதும் ஏற்றலாம்.
தனுர் மாத பூஜை:
ஒருவரால் 365 நாளும் இறைவனுக்கு ஆராதனை செய்து அபிஷேகம் செய்ய முடியாது. ஆனால் இந்த மாதத்தில் ஒரே ஒரு நாள் செய்யப்படும் தனுர் மாத பூஜையால் இறைவனுக்கு ஆண்டு முழுவதும் அபிஷேகம் செய்த பலன் கிடைக்கும். எனவே அருகில் இருக்கக்கூடிய எந்த கோயிலாக இருந்தாலும் அந்த கோவிலுக்கு குறைந்தது ஒரு அரை லிட்டர் பாலாவது வாங்கி கொடுத்து தனுர் மாத பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அந்த கோயிலில் என்ன செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு பன்னீர், தயிர், விபூதிக்கு ஆகிய பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இதை செய்வதன் மூலமாக செல்வநிலை மேம்படும்.
Also Read: பூஜை அறையில் வைக்கக் கூடாத கடவுள் படங்கள்!
அன்னதானம்:
நம்முடைய பிறவி வினைகளை கழிப்பதற்கு மிகவும் உதவி செய்யக்கூடிய மிகப்பெரிய தானம் அன்னதானம். மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ஆருத்ரா நாள் போன்ற சிறப்பு மிக்க நாட்களில் அன்னதானம் வழங்கலாம். இல்லையென்றால் மார்கழி மாதத்தில் எந்த ஒரு நாளிலாவது அன்னதானத்தை வழங்கலாம். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் அல்லது சுண்டல் இவற்றை ஏதாவது ஒன்று செய்து கொண்டு காலையில் கோயிலுக்கு செல்பவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். இதை செய்வதன் மூலமாக உங்கள் பரம்பரைக்கு அன்னக் குறை வராது என்பது நம்பிக்கை. எனவே மார்கழி மாத அன்னதானத்தை உங்கள் சக்திக்கு உட்பட்டு செய்ய வேண்டும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)