5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Surasamharam: சூரனை வதம் செய்த முருகன்.. சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு!

Surasamharam History: தமிழ் கடவுளான‌ முருகனின் சிறப்புமிக்க பல வரலாறுகள் இருந்தாலும் அதில் குறிப்பாக அசுரனை வதம் செய்ததுதான் மிகவும் பிரபலமானது. தேவர்களுக்கு தொல்லை கொடுத்த சூரபத்மனை வதம் செய்த நிகழ்வினை கொண்டாடும் விதமாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறும். இந்த சூரசம்ஹாரம் தோன்றிய முழு வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்.

Surasamharam: சூரனை வதம் செய்த முருகன்.. சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு!
(கோப்புப் படம்: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 25 Oct 2024 08:30 AM

பெருமாளுக்கு உரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். மாதம் தோறும் வளர்பிறையில் ஒரு சஷ்டியும் தேய்பிறையில் ஒரு சஷ்டியும் வந்தாலும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரக்கூடியது மகா கந்தசஷ்டி சிறப்பு வாய்ந்தது. ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தனை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. நாம் இந்த தொகுப்பில் கந்தசஷ்டியின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பற்றி காணலாம். சூரபத்மன் எனும் அரக்கன் தேவர்களை துன்புறுத்தினான். அவனது அட்டகாசங்கள் எல்லை மீறியது. தேவர்கள் தங்களை காக்கும்படி பிரம்மதேவரிடம் சென்று வேண்டினார்கள். பிரம்மதேவர் உங்களை காக்க சிவபெருமானால் மட்டுமே முடியும் என கூறினார்.

பின்பு தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வேண்டினார்கள். இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டி சிவபெருமான் முருகப்பெருமானை படைத்தான். சிவபெருமான் தனது நெற்றி கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை படைத்து அந்த தீப்பொறிகளை கங்கை ஆற்றில் சேர்க்க வாயு பகவானை அழைத்தார். வாயு பகவான் அந்த நெருப்பு துண்டுகளை கங்கையில் சேர்த்தார். கங்கை பின்பு அவற்றை சரவண பொய்கைக்கு எடுத்து சென்றார். அந்த ஆறு தீப்பொறிகளும் சரவண பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாறியது. அந்த குழந்தைகளை ஆறு கார்த்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர்.

Also Read: Diwali 2024: தீபாவளி நாளில் பெண்கள் என்ன கலரில் ஆடை அணிய வேண்டும்?

ஆறு குழந்தைகளையும் அன்னை பார்வதி தேவி தாய் பாசத்துடன் கட்டியணைத்ததும் ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாக மாறியது. ஆறுமுகங்களுடன் இருந்த அந்த குழந்தைக்கு முருகன் என பெயரிடப்பட்டது. இந்த சமயத்தில் சூரபத்மன் அளவில்லாத கொடுமைகளை செய்து வந்தான். சூரபத்மனை வதம் செய்ய முடிவு செய்த சிவபெருமான் முருகப்பெருமானை அழைத்து தனது படைகளுக்கு தளபதியாக நியமித்தார். அன்னை பார்வதி தேவி தனது சக்தியை வேலில் உருவேற்றி முருகப்பெருமானுக்கு ஆயுதமாக அளித்தார்.

முருகப்பெருமான் வேலோடும் படையோடும் சூரபத்மனை அளிக்க புறப்பட்டார். திருச்செந்தூரில் போருக்கு செல்வதற்கு முன்பு முருகப்பெருமான், சிவபெருமானை பஞ்சலிங்கமாக வழிபட்டு சென்றார். முதலில் சிங்கமுகனையும் தாருகாசுரனையும் அழித்தார். இறுதியில் சூரபத்மனை அழித்தார். தோல்வியை ஏற்காத சூரபத்மன் ஒரு மரமாக மாறினான். முருகப்பெருமான் அந்த மரத்தை தனது வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார்.

பிளக்கப்பட்ட மரம் ஒரு பகுதி மயிலாகவும் மற்றொரு பகுதி சேவலாகவும் மாறியது. முருகப்பெருமான் கருணை உள்ளம் கொண்டு அவற்றை வாகனமாகவும் தனது கொடியாகவும் ஏற்றுக்கொண்டார். சூரபத்மனை முருகப்பெருமான் சம்காரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினார்கள். அதை அடுத்து முருகப்பெருமானுக்கு தன்னுடைய நன்றியை செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினார். அதன் தொடர்ச்சியாக முருகப்பெருமான் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

முருகப்பெருமானுடைய வரலாறுகள் பல பல உண்டு. அவற்றில் சிறப்புடையது அவர் தேவர்களுக்கு இடையூறாக இருந்த சூரபத்மன் சிங்கமுகன் தாருகாசுரன் முதலியவர்களை கொன்று தேவர்களுக்கும் மக்களுக்கும் அருள் புரிந்தது. அசுரர்கள் என்றால் விகார உருவம் படைத்தவர்கள் என்பது மட்டுமல்ல. நமது உள்ளத்தில் உதிக்கும் அகங்காரம், காமம், குரோதம் முதலியவைகள் தான் உருவகப்படுத்தி அசுரர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த அசுரர்களை அழித்து சூரசம்ஹாரம் நடத்துவதற்கு முருகப்பெருமானின் அருள் நமக்கு தேவை.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாருகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், வன்மம், மாயை என்னும் மூன்று கழிவுகளை குறிப்பதாகும். ஆன்மாவை துன்புறுத்தும் இத்தகைய கழிவுகளின் கெடுபிடிகள் இருந்து விடுதலை அளிப்பதோடு ஆணவ கழிவுகளின் பலத்தை குறைத்து அதனை தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்ஹாரமாகும். இந்த போர் நடந்த நாட்களை கந்த சஷ்டி விரத தினங்களாக அனுஷ்டிக்கப்படுகிறது.

Also Read: Surasamharam 2024: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் தேதி… முழு விவரங்கள்!

முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நாள் என்று முருகப்பெருமான் கோவில்களில் பொம்மை அசுரனை அழிக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது சூரச மாதவிழா.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News