Diwali : தீபாவளி தினத்தில் குபேர லட்சுமி பூஜை செய்வது எப்படி? கிடைக்கும் பலன்கள்!
Deepavali Lakshmi Pooja: தீபாவளி மகாலட்சுமிக்கு உரிய நாளாக கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்வது விசேஷமானதாகும். தீபாவளி நாளில் தான் மகாலட்சுமியை வணங்கி சகல செல்வ சம்பத்துகளையும் குபேரர் பெற்றதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் லட்சுமி தேவியை வணங்குவதால் அவரின் பரிபூரண அருளை பெற முடியும்.
லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும் அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடுவதாகும். ஆரம்பத்திலேயே குபேரர் செல்வ வளத்தை பெறவில்லை. செல்வ வளத்தை பெற என்ன செய்ய வேண்டும் என குபேரர் தனது நண்பனான சிவபெருமானிடம் சென்று ஆலோசனை கேட்டார். அதற்கு சிவபெருமான் செல்வத்திற்கு உரியவர் மகாலட்சுமி. அவருடைய அனுகிரகம் இருந்தால் மட்டுமே உங்களால் செல்வத்திற்கு அதிபதியாக முடியும். ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் மாலை நேரத்தில் மகாலட்சுமியை பூஜை செய்தால் நீங்கள் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என கூறினார். சிவபெருமானின் யோசனையை ஏற்று குபேரரும் மகாலட்சுமியை பூஜை செய்து செல்வ வளங்களுக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்ற நாள் தான் இந்த தீபாவளி.
தீபாவளி நாளில் தான் மகாலட்சுமியை வணங்கி சகல செல்வ சம்பத்துகளையும் குபேரர் பெற்றதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் லக்ஷ்மி தேவியை வணங்குவதால் அவரின் பரிபூரண அருளை பெற முடியும். சிவபெருமானே திருவாய் மலர்ந்து அருளியதால் நாமும் செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும் அதை அவருக்கு அருளிய மகாலட்சுமியையும் பூஜை செய்தால் நம்முடைய இல்லத்திலும் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
பூஜை செய்ய ஏற்ற நேரம்:
நவம்பர் 1 ஆம் தேதி மாலையில் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். இந்த சமயத்தில் லட்சுமி குபேரர் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
பூஜை செய்யும் முறை:
லட்சுமி குபேரர் பூஜை செய்பவர்கள் பூஜை அறையை அலங்கரித்து மகாலட்சுமி அல்லது குபேரர் அல்லது லட்சுமி குபேரரின் படத்தை துடைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். கலசம் வைத்து வழிபடுபவர்கள் எவர்சில்வர் தவிர மற்ற உலகங்களால் ஆன கலசத்தில் தண்ணீர் ஊற்றி அதோடு பன்னீர், வாசனை பொருட்கள் மஞ்சள், எலுமிச்சை அதன் மீது மட்டை தேங்காய், மாவிலை வைக்க வேண்டும்.
தேங்காய் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த கலசத்தை வாழையிலை அல்லது தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும். கலசம் வைக்காதவர்கள் படத்தை வைத்து வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
Also Read: தீபாவளி நாளில் விளக்கேற்றும் முறை.. தீபாராதனை இப்படி பண்ணுங்க!
படத்திற்கு முன்பு குபேர எந்திரம் இருந்தால் வைத்துக் கொள்ளலாம். மகாலட்சுமிக்கு உரிய தாமரை, துளசி ஆகிய பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். அதோடு வெற்றிலை, பாக்கு, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இரண்டு குத்து விளக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நெய் விட்டு விளக்கேற்றி முதலில் விநாயகர் பிடித்து வைத்து உங்களுக்கு தெரிந்த விநாயகர் மந்திரத்தை சொல்ல வேண்டும். பிறகு குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்யுங்கள்.
நெய்வேதியமாக பால் பாயாசம், கற்கண்டு சாதம் செய்து படைக்கலாம். முடியாதவர்கள் எளிமையாக அவளில் சர்க்கரை, தேங்காய் துருவல் கலந்து படைக்கலாம். மகாலட்சுமிக்கு குங்குமத்தாலும் குபேரருக்கு நாணயத்தாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். நாணயங்கள் வைக்கும் போது ஒரே மாதிரியான நாணயங்களை வைத்து அர்ச்சிக்க வேண்டும். அதன் பிறகு மகாலட்சுமிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.
பிறகு குபேரருக்கு அவருக்கான மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள். ஒரு தாமரை இதழ் எடுத்து அதன் மீது ஒரு நாணயத்தை வைத்து குங்குமம் வைத்து ஓம் குபேராய நம ஓம் கணபதியே நம என்ற மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியின் பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி, குபேரர், குபேர எந்திரம் ஆகியவற்றிற்கு தூபதீபம் காட்டி வழிபட வேண்டும்.
நெய்வேதியமாக படைத்ததை பிரசாதமாக எல்லோருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பூஜையெல்லாம் முடித்துவிட்டு நீங்கள் குபேரனிடம் வைத்து பூஜை செய்த காசுகளை எடுத்து நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.
Also Read: Diwali 2024: பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்!
பலன்கள்:
குபேரரை மகாலட்சுமியுடன் இணைந்து பூஜை செய்வதன் மூலம் குறைவற்ற செல்வநிதியை வாரி வழங்குவார். மேலும் இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணம் தட்டுப்பாடு நீங்கி, செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறார். தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால் சங்கடங்கள், காரிய தடைகள் நீங்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
தீபாவளி நாளில் வழிபாடெல்லாம் முடித்துவிட்டு உங்களால் முடிந்த தானத்தை செய்யுங்கள். அன்னதானம், புத்தாடை தானம் என்று எதுவாகவும் இருக்கலாம். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் ஆசியை முழுமையாக பெற முடியும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)