Surasamharam 2024: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் தேதி… முழு விவரங்கள்!
Surasamharam 2024: சூரபத்மன் செய்த அட்டூழியங்களை தடுப்பதற்காக விஸ்வரூபம் எடுத்த முருகன் அவனை வதம் செய்தார். அந்த நிகழ்வே சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. இது திருச்செந்தூர் அருள்மிகு முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு எப்பொழுது கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது? எப்பொழுது சூரசம்ஹாரம் திருவிழா நடைபெற இருக்கிறது என்ற முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
சூரபத்மன் தேவர்களை கைது செய்து பூமி மற்றும் சொர்க்கத்தில் பயங்கர அழிவை ஏற்படுத்தினான். முருகன் சக்தி வாய்ந்த படையுடன் வந்தார். சூரபத்மன் தன் எல்லையற்ற படைகளுடன் எதிர்கொண்டாலும் முருகன் அவனுடைய படையை முற்றிலும் அடியோடு அழித்தார். திகைத்த சூரபத்மன் தன் மாய வலயத்தை பயன்படுத்தி பல கோள்களுக்கு தப்பிச் சென்றான். முருகன் அவனை பின்தொடர்ந்து தன் தெய்வீக ஆயுதத்தின் மூலம் அவனுடைய மாயத்தை முற்றிலும் அழித்தார். இறுதிப் போரில் முருகன் விஸ்வரூபம் எடுத்தார். சூரபத்மனும் பிரம்மாண்டமான ரூபத்தில் தோன்றினான். முருகன் தன் வேலால் சூரபத்மனின் மார்பை கிழித்து அவனை இரண்டு பகுதிகளாக வெட்டினார். முருகன் ஒரு பகுதியை தனது வாகனமான மயிலாகவும் மற்றொரு பகுதியை தனது கொடியின் சின்னமாக இருக்கும் சேவலாகவும் மாற்றினார். இந்த பிரம்மாண்ட போரே சூரசம்காரம் என்று அழைக்கப்படுகிறது.
சூரசம்ஹாரம் நடைபெறும் தேதி:
முருகப்பெருமானின் அறுவடை வீடுகளின் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விரதமும் அதனை தொடர்ந்து சூரசம்கார நிகழ்வும் வெகு விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாள் அதாவது பிரதமை திதியில் இருந்து சஷ்டி திதி வரை உள்ள ஆறு தினங்கள் கடைபிடிக்கக்கூடிய விரதம் தான் இந்த கந்த சஷ்டி விரதம் ஆகும்.
பக்தி சிரத்தையுடன் சஷ்டியில் விரதம் இருந்து வழிபட்டால் அகப் பையான கருப்பையில் கரு தங்கும் என்பது இந்த விரதத்தை கடைபிடிப்பவர்களே சாட்சி. முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடான திருத்தணி கோவிலை தவிர மற்ற கோவில்களில் இந்த திருவிழா வெகு விமர்சையாக கோலாகலமாக கொண்டாடப்படும்.
12 நாள் திருவிழா:
திருச்செந்தூர் திரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறு நாள் கந்த சஷ்டி விரதம் வரும் நவம்பர் 2, 2024 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகிறது. சூரசம்காரம் நவம்பர் 7 2024 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. திருச்செந்தூரில் நவம்பர் 7, 2024 அன்று வியாழக்கிழமை மாலை 4:15 மணியிலிருந்து 6 மணி வரை சூரசம்காரத் திருவிழா கோலாகலமாக நடைபெற இருக்கிறது. சஷ்டி திதி 6 ஆம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி இரவு 9:20 மணிக்கு முடிவடைய உள்ளது
திருக்கல்யாண நிகழ்வு நவம்பர் 8, 2024 வெள்ளிக்கிழமை அன்று வருகின்றது. நவம்பர் 8 2024 வெள்ளிக்கிழமை, ஏழாவது நாள் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கும். காலை 5 மணி அளவில் திரு தெய்வானை அம்பாள் தபசு காட்சி புறப்பாடு நடைபெறும்.
மாலை 6:30 மணி அளவில் திரு குமார விடங்க சுவாமி அம்பாள் தோல் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு பிறகு நள்ளிரவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
Also Read: Diwali : தீபாவளி தினத்தில் குபேர லட்சுமி பூஜை செய்வது எப்படி? கிடைக்கும் பலன்கள்!
எட்டாவது நாளான நவம்பர் 9 சனிக்கிழமை, திருவிழா இரவு தங்கமயில் வாகனத்தில் திரு குமார விடங்க பெருமாள் திரு தெய்வானை அம்மாள் பூ பல்லக்கு பட்டண பிரதேச நிகழ்வு நடைபெறும். நவம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பர் 12 செவ்வாய்க்கிழமை வரை, 9 முதல் நாள் 11 வது நாள் திருவிழாவாக மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
திருக்கல்யாண மண்டபத்தில் திரு குமார விடங்க பெருமாள் திரு தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி பக்தர்களுக்கு காண கிடைக்கும்.12 வது நாளான நவம்பர் 13 புதன்கிழமை அன்று மாலை 4:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, சுவாமி அம்பாள் திருவீதி உலா திருக்கோவில் வந்து சேரும் .
இந்த நிகழ்விற்கு செல்ல இருப்பவர்கள் புதிதாக கோவில் நிர்வாகத்தால் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதியில் இணையத்திலோ அல்லது நேரில் சென்றோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)