கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை… வழிபாடு செய்வது எப்படி?
Surasamharam Fasting: சூரபத்மனை முருகன் வதம் செய்த நாள் தான் சூரசம்காரம் எனப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக ஆறு நாள் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படும். தன் உடல் நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் வெவ்வேறு விரத முறையை மேற்கொள்கிறார்கள். இந்த கந்த சஷ்டி விரதத்தை எப்படி மேற்கொள்வது? இந்த நாளில் எப்படி வழிபாடு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்
குழந்தை பேரு வேண்டுவோர், வறுமையில் வாடுபவர்கள், தொழிலில் வளர்ச்சியடைய வேண்டும் என்பவர்கள், நோய் குணமாக வேண்டும் என்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை பெற வேண்டுபவர்கள், எங்கு சென்றாலும் யாரோ ஒருவரால் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் மற்றும் வேறு என்னவெல்லாம் பிரச்சனை இருக்கின்றதோ அந்த குறைகளை எல்லாம் தீர கந்த சஷ்டி விரதம் இருக்கலாம்.
விரத முறை:
மகா கந்த சஷ்டி 6 நாட்களும் காலையில் எழுந்து குளித்துவிட்டு விரதம் இருப்பவர்கள் உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருக்கலாம். ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து விரதம் இருக்க முடியும் என்றால் நீங்கள் அவ்வாறு செய்து கொள்ளலாம். இல்லை என்றால் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்ளலாம் மற்றும் பால் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒருநாள் சஷ்டி விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆறாவது நாள் சூரசமஹாரம் அன்று விரதம் இருந்து கொள்ளலாம். இந்த கந்த சஷ்டி நாட்களில் விரதம் இருப்பவர்கள் அவரவர்களுக்கு தக்கவாறு வெவ்வேறு விரத முறைகளை கடைபிடிக்கின்றன. அதில் ஒன்று மிளகு விரதம். இது கொஞ்சம் கடினமான விரத முறையும் கூட. மிகவும் உறுதியான மனப்பாகும் வைராகியமும் இறை பக்தியும் கொண்டு இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
Also Read: Surasamharam: சூரனை வதம் செய்த முருகன்.. சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு!
மிளகு விரதம் இருக்கும் முறை:
சஷ்டி விரதத்தின் முதல் நாள் அன்று ஒரு மிளகு மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும். இரண்டாவது நாள் 2 மிளகு மட்டுமே உண்ண வேண்டும். மூன்றாம் நாள் 3 மிளகு. நான்காம் நாள் 4 மிளகு. ஐந்தாம் நாள் ஐந்து மிளகு. ஆறாம் நாள் 6 மிளகு மட்டுமே உண்டு விரதம் இருக்க வேண்டும். ஆறாம் நாள் சூரசம்காரம் முடித்து சஷ்டி விரதத்தின் ஏழாம் நாள் அன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் முடிந்த பிறகு மிளகு விரதத்தை முடித்துவிட்டு படையல் இட்டு உணவு உண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக விரதத்தின் போது அதிக அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தவிர முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் அருந்தலாம்.
வழிபடும் முறை:
இந்த ஆறு நாட்களும் காலையில் குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வீட்டில் வேல் அல்லது முருகப்பெருமானின் விக்ரகம் வைத்து வழிபடுபவர்கள் பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யலாம். விக்ரகம் ஏதுமில்லை இல்லையெனில் படம் வைத்து பூஜை செய்பவர்கள் படத்தை துடைத்து பொட்டு வைத்து முருகப்பெருமானுக்கு உகந்த வில்வம் மற்றும் செம்பருத்தி சாத்தி வழிபடலாம்.
நெய்வேத்தியமாக கல்கண்டு, பால், தேன், தினை மாவு, சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம் படைக்கலாம். ஆறு நாட்களும் தேனும் திணைமாவில் செய்யப்பட்ட ஆறு நெய் விளக்குகள் ஏற்றலாம். ஷட்கோண கோலம் என்பது நாம் நினைத்ததை நினைத்த வண்ணம் நிறைவேற்றி தரக்கூடிய சக்தி வாய்ந்ததாகும். 6 நாட்களும் தினமும் உங்களால் முடிந்த அளவிற்கு கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
இதைத்தவிர ஷண்முக கவசம், வேல் விருத்தம், மயில் விருத்தம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தபுராணம் என்று உங்களுக்கு எது தெரியுமோ அதை படிக்கலாம். இவையெல்லாம் படிக்க தெரியவில்லை என்றாலும் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம். பிறகு முருகப்பெருமானின் 108 திருநாமங்கள் சொல்லி வில்வத்தால் அர்ச்சனை செய்யலாம்.
Also Read: Surasamharam 2024: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் தேதி… முழு விவரங்கள்!
அர்ச்சனை எல்லாம் நிறைவு செய்து வைத்து தீப தூப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம். இந்த ஆறு நாட்களும் கோவிலுக்கு சென்று இரு தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம் மேலும் ஆறாம் நாள் மாலை சூரசம்காரமும் ஏழாம் நாள் திருக்கல்யாண உற்சவத்தையும் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)