ஏழு பிறவியிலும் தவம் உடையவர் என்ற பெருமை.. பூதத்தாழ்வார் வரலாறு இதுதான்!
History of Boothathalwar: வைணவத்தில் பெருமாளுக்கு இணையாக பார்க்கப்படுபவர்கள் ஆழ்வார்கள். பெருமாளே கதி என்று சரணம் அடைந்து தீராத பக்தி கொண்டு தமிழ் செய்யுளால் பெருமாளை பாடியவர்கள். இந்த செய்யுள்களின் தொகுப்பு நாலாயிரம் திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வாரின் பேச்சுக்கு பெருமாளே கட்டுப்படுவதாகவும் அவர்கள் எங்கே சென்றாலும் பெரும்பாலும் அந்த இடத்திற்கு தேடிச் செல்வார் என்று சொல்லப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் 12 நபர்கள். அதில் பூதத்தாழ்வார் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.
சைவத்தில் சமயக்குறவர் நான்கு பேர் இருப்பது போல வைணவத்தில் மூன்று பேர் உள்ளனர். அவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் முதல் மூவர் என குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் மூவரும் சமகாலத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இப்பொழுது இரண்டாம் ஆழ்வார் என சொல்லப்படும் பூதத்தாழ்வார் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பூதத்தாழ்வாரின் தோற்றம்:
பூதத்தாழ்வார் வைணவ நெறியை பின்பற்றிய பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாமவர். முதல் ஆழ்வார்கள் என போற்றப்படும் மூன்று ஆழ்வார்களில் ஒருவராக விளங்கினார். இவர் ஐப்பசி மாதம் நவமி திதியில் அவிட்டம் நட்சத்திரத்தில் அவதரித்தார். கடல் மல்லை இன்று சிறப்பிக்கப்படும் மகாபலிபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியில் மல்லி கொடிகளுக்கு நடுவே குருக்கத்திக் கொடி என்கிற கொடியில் நீல நிற மலர்களில் இருந்து பிறந்தார். பெருமாளின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கதாயுதத்தின் அம்சமாக பிறந்தவர்.
பெயர் காரணம்:
பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடி சொல்லில் இருந்து தோன்றியது. இவன் பொருளாவது சத்தை பெற்றது அதாவது அறிவு பெற்றது என்று பொருள். திருமாலின் திரு குணங்களை அனுபவித்தே அறிவை பெற்றவர் பூதத்தாழ்வார் என்பதாகும்.
Also Read: History of Alwars: பக்தியால் திருமாலைக் நேரில் கண்ட பொய்கை ஆழ்வார்!
பூதத்தாழ்வாரின் தொண்டு:
பெருமாளின் மீது இவர் கொண்ட பக்தியை காட்டும் இவரது பாடல்களிலேயே தமிழ் பற்றும் புலப்படுகிறது. இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திரு அந்தாதி பாடியுள்ளார். இது வெண்பாக்களால் ஆனது. இவர் மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து மொத்தம் 13 திருக்கோவில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். மங்களாசாசனம் என்பது ஒரு கோவிலில் உள்ள இறைவனை போற்றி பாடுவதாகும்.
அந்த கோவில்கள் திருப்பதி, திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், திருக்குடந்தை, திருகோட்டியூர், திருக்கச்சி, திருப்பாடகம், திருக்கோவிலூர், திருத்தஞ்சை மாமணி கோயில், திருநீர்மலை, திருக்கடல்மல்லை, திருதங்கள் ஆகிய கோயில்கள் ஆகும்.
முதல் மூன்று ஆழ்வார்கள் என்று போற்றப்படும் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார். இவர்கள் மூவரும் ஞானம், பக்தி, வைராக்கியம் மிக்க துறவறம் பூண்டு ஆண்டவரின் நினைவில் உருகி உள்ளம் கனிய பாடியவர்கள்.
பூதத்தாழ்வாரின் தவம்:
வைணவர்களால் நம்பிக்கையுடன் போற்றப்படும் வரலாறு உண்டு. பெருமாள் ஒரு முறை பொய்கை ஆழ்வாரை பூதத்தாழ்வாரோடும் பேயாழ்வாரோடும் சந்திக்க வைத்து மூவருக்கும் தன் திவ்ய ரூபத்தைக் காட்டி அவர்களின் பக்தியை உணரச் செய்ய ஒரு எண்ணம் கொண்டார். மூன்று ஆழ்வார்களும் தனித்தனியாக தல யாத்திரை மேற்கொண்டு திருக்கோவிலூருக்கு ஒரே சமயத்தில் நுழைகின்றனர். அப்போது பெருமழை உண்டானது.
மழைக்கு ஒதுங்கும் பொருட்டு மிருகண்டு மாளிகையின் உள்ள நடைபாதையில் ஒதுங்குகின்றன. அந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம் மூவர் நிற்கலாம் என்று அளவிற்கு இடமிருந்தது. அதனால் மூன்று ஆழ்வார்களும் நின்று கொண்டு திருமாலின் புகழை பாடிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து நான்காவதாக வந்தது யார் என்பதை இருளில் அறிய முடியவில்லை. அப்போது பூதத்தாழ்வார் பாசுரம் பாடி இறைவனை தொழுதார். அன்பையே விளக்காகவும் ஆர்வமே நெய்யாகவும் சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனை கண்டு துதித்தவர் என்று பாசுரம் செய்தார்.இதன் பிறகு இருள் நீங்கி அந்த இடத்தில் நீண்ட நெடிய திருமால் இருப்பதை உணர்ந்தார். பிறகு மூன்று ஆழ்வார்களும் திருமாலின் சொரூபத்தை கண்டு அனுபவித்து தரிசித்து சென்றனர்.
Also Read: Kandha Sasti 2024: கந்த சஷ்டி முதல் நாளில் வாங்க வேண்டிய முக்கிய பொருள்கள்…
திருமாலைத் தொழுதலும் அவரை வணங்குவதை தவிர இந்த மண்ணுலகில் வேறு பெருவளம் இல்லை என்று உணர்த்தியவர் பூதத்தாழ்வார். தம்மைப் போல் தவம் செய்தவர் யாரும் இல்லை என்றும் தாமே ஏழு பிறவிகளிலும் தவம் உடையவர் என்றும் பெருமை கொள்கிறார் இவர். பெருமாளின் இணை அடிகளுக்கு பெருமை வாய்ந்த தமிழால் தொடுத்த மாலையை அணிவித்தமையால் தாம் பெரும் தமிழனாக பெருமையினை இந்த ஆழ்வார் கொள்கிறார்.