ஆழ்வாருக்கு பாசுரம் பாடிய மதுரகவி ஆழ்வாரின் வரலாறு!

History of Madhurakavi Alwar: வைணவத்தில் பெருமாளுக்கு இணையாக பார்க்கப்படுபவர்கள் ஆழ்வார்கள். பெருமாளே கதி என்று சரணம் அடைந்து தீராத பக்தி கொண்டு தமிழ் செய்யுளால் பெருமாளை பாடியவர்கள். இந்த செய்யுள்களின் தொகுப்பு நாலாயிரம் திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஆழ்வாருக்கு பாசுரம் பாடிய மதுரகவி ஆழ்வாரின் வரலாறு!

மதுரகவி ஆழ்வார் (Photo Credit: Pinterest)

Published: 

22 Nov 2024 09:05 AM

மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியை பின்பற்றிய பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஆறாவது ஆழ்வார். மதுரகவி ஆழ்வார் 9ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வளர்பிறை சதுதசி திதியன்று வெள்ளிக் கிழமை தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூரில் அவதரித்தார். இவர் கருடாழ்வாரின் அம்சமாக பிறந்தவர். இவர் ஒரு ஆழ்வாராக இருந்தும் மற்றொரு ஆழ்வாரை பற்றி பாடிய பெருமை பெற்றவர். செவிக்கு இனிமையான சொற்களால் கவிதை பாடும் வல்லவர். அதனால் இவர் மதுரகவி ஆழ்வார் என புகழப்பட்டார்.இவர் ஆழ்வாராக இருந்தும் வேறொரு ஆழ்வார் மீது பக்தி கொண்டதால் இவரை ஆழ்வார்கடியார் என்றும் இனிமையான சொல்லில் கவி பாடுவதால் இன்கவியாழ்வார் என்றும் அழைக்கப்படுவார்

நம்மாழ்வாரை தெய்வமாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்:

இவர் பெருமாளை தன் பாசுரங்களால் பாடாமல் தன் குருவான நம்மாழ்வாரை சிறந்த தெய்வமாக எண்ணி அவரை போற்றி பதினோரு பாசுரங்களை பாடியுள்ளார். இவர் அயோத்தியில் உள்ள ராமபிரானை வணங்கிவிட்டு அங்கேயே சில காலம் தங்கினார். ஒரு நாள் தான் பிறந்த திருக்கோளூர் பெருமானை தென் திசை நோக்கி வணங்கும்போது வானத்தில் ஒரு ஜோதியை கண்டார். அந்த ஜோதியை பின்பற்றி தென்திசை நோக்கி புறப்பட்டார். ஆழ்வார் திருநகரியை வந்து அடைந்தவுடன் அந்த ஜோதி இருக்கும் திசை நோக்கி சென்றார். அங்கு சென்று பார்த்தால் புளிய மரத்திற்குள் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரை கண்டார். ஆழ்வாரின் முன்பு ஒரு கல்லை தூக்கி போட்டார். ஆழ்வார் கண் மலர்ந்து பார்த்தார்.

Also Read: History of Alwars: தெய்வத்தின் பேரொளியாக வீசிய நம்மாழ்வாரின் கதை தெரியுமா?

மதுரகவி ஆழ்வார் அவரை நோக்கி அணு உருவாகிய ஆத்மா அழிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடைக்கும் எனக் கேட்டார். அதற்கு அது அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும் என்று நம்மாழ்வார் பதிலளித்தார். உடனே மதுரகவி இவரே நம்மை ஆள வந்த குருநாதர் என்று கருதி தெய்வம் மற்றரியேன்‌ என்று ஆழ்வாரின் திருவடியை சேவித்து நின்றார்.

நம்மாழ்வாருக்கு பாடிய பாசுரம்:

நம்மாழ்வாரின் காலத்திற்குப் பிறகு அவரின் விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் வைத்து வழிபட்டார் மதுர கவி ஆழ்வார். மதுரை தமிழ் சங்கப் புலவர்கள் நம்மாழ்வாரை வாதத்திற்கு அழைத்தனர். அவர் இல்லாததால் மதுரகவி ஆழ்வார் 300 சங்க புலவர்கள் ஏறிய சங்கப் பலகையில் நம்மாழ்வார் பாடிய ஓலையை வைத்தவுடன் பலகை கவிழ்ந்தது. அனைத்து புலவர்களும் பொற்றாமரை குளத்தில் விழுந்து விட்டனர். நம்மாழ்வார் பகவானின் அம்சம் என்பதை சங்க புலவர்கள் உணர்ந்தனர். மதுரகவி ஆழ்வார் தன் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளை பிரபந்தங்களையும் உலகெங்கும் பரவச் செய்தார்.

Also Read: History of Alwars: கோவிலை விட்டு வெளியேறிய பெருமாள்… திருமழிசை ஆழ்வாரின் வரலாறு!

பெருமாளின் 108 திருப்பதிகளில் மதுரகவி ஆழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோவிலை மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார். மங்களா சாசனம் என்பது ஒரு கோவிலில் உள்ள தெய்வத்தை பாடிப் புகழ்வதாகும். அவர் மங்களாசாசனம் செய்த கோயில் ஆழ்வார் திருநகரியில் உள்ள அருள்மிகு ஆதிநாதன் பெருமாள் திரு கோயில் ஆகும். அந்தக் கோயிலிலும் பெருமாளை பற்றி பாடாமல் தன் குருவான நம்மாழ்வாரை போற்றி பாடினார்.

சிறிய முடிச்சுகள் உள்ள சிறிய கயிரால் தானே விரும்பி கட்டுப்பட்ட கண்ணனின் பெருமைகளை விட குருகூரில் வாழும் நம்மாழ்வாரின் பெருமைகளை சொன்னால் நா இனிக்கும் என்று‌ நம்மாழ்வாரை போற்றி புகழ்ந்து பாடினார்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!