History of Alwars: பக்தியால் திருமாலைக் நேரில் கண்ட பொய்கை ஆழ்வார்!
History of Poigai Alwar: வைணவத்தில் பெருமாளுக்கு இணையாக பார்க்கப்படுபவர்கள் ஆழ்வார்கள். பெருமாளே கதி என்று சரணம் அடைந்து தீராத பக்தி கொண்டு தமிழ் செய்யுளால் பெருமாளை பாடியவர்கள். இந்த செய்யுள்களின் தொகுப்பு நாலாயிரம் திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வாரின் பேச்சுக்கு பெருமாளை கட்டுப்படுவதாகவும் அவர்கள் எங்கே சென்றாலும் பெரும்பாலும் அந்த இடத்திற்கு தேடிச் செல்வார் என்று சொல்லப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் 12 நபர்கள். முதலில் பொய்கையாழ்வாரின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.
வைணவ நெறியை பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதன்மையானவர் பொய்கை ஆழ்வார். வடவேங்கடம் முதல் தென்குமரி வரை விரிந்து பரந்த தமிழகத்தை தமிழ் அன்னையாக பாவித்தால் அவளின் நெற்றி திலகம் போல் திகழ்வது தொண்டை நாடும் அதன் தலைநகராக விளங்கும் காஞ்சிபுரம் ஆகும். தொன்று தொட்டு பழம்பெரும் நகரமாக விளங்கி வருகிறது இந்த காஞ்சிபுரம். சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் நகருக்கு பல வைணவ திருத்தலங்களும் பல சிவ திருத்தலங்களும் பெருமை சேர்க்கின்றன.
பொய்கை ஆழ்வாரின் தோற்றம்
வைணவ கோயில்கள் பல கொண்ட அந்த காஞ்சி மாநகருக்கு பெருமை சேர்க்கிறது திருவெக்காவில் உள்ள யதோத்காரி பெருமாள் கோயில். இது திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பெருமானின் பெருங்கருணை நிறைந்திருக்கும் திருத்தலம். இந்தக் கோயிலில் ஒரு பொய்கை இருந்தது. அந்த பொய்கையில் தேவர்களும் வானுலக கன்னியர்களும் நீராடுவார்கள்.
அத்தகைய சிறப்புடையதும் கருணை மிகவும் பொழியும் பரந்தாமனின் மார்பை போன்ற மிகவும் குளிர்ச்சி பொருந்தியது அந்த பொய்கை. பொற்றாமரை மலர் ஒன்று அந்த பொய்கையில் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்தது. அந்த பொற்றாமரை மலரில் அன்பே குணமாக கொண்டு அறிவொளி வீசும் ஞான சுடராக ஒருவர் அவதரித்தார். கிபி 7ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் செவ்வாய்க்கிழமை திருவோண நட்சத்திரத்தில் திருவெக்கா எனும் ஊரில் பொய்கை ஆழ்வார் திரு அவதாரம் எடுத்தார்.
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலில் உள்ள பொய்கையில் பூத்திருந்த தாமரையில் இவர் அவதரித்தார். காஞ்சிபுரத்தில் பொற்தாமரை பொய்கையில் அவதரித்ததால் பொய்கை ஆழ்வார் என பெயர் பெற்றார். ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஆறு ஆயுதங்களின் ஒன்றின் அம்சமாக பிறந்தவர்கள். அதன்படி பொய்கை ஆழ்வார் பெருமாள் கையில் தாங்கி நிற்கும் புனித சங்கின் அம்சம் ஆவார். வைணவத்தினர் இவரை கவிஞர், தலைவர் என்று போற்றுகின்றனர்.
Also Read: November Month Horoscope: நவம்பர் மாத ராசிபலன்கள்.. மேஷம் முதல் கன்னி வரை!
பொய்கை ஆழ்வாரின் தொண்டு:
இவர் தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இந்த உலகிற்கு அர்ப்பணித்தவர். இந்தத் தொகுப்பில் முதல் அந்தாதியாக பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருஅந்தாதி என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர் இவர். பொய்கை ஆழ்வார் திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடிய திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். உலகப்பற்றை விட்டு தன்னையே பெருமாள் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டார். தன் கண்கள் பெருமாளை காணவே உள்ளது என்றும் தன் வாய் அவர் புகழைப் பாடவே என்றும் தன்னுடைய செவிகள் திருமாலின் புகழை கேட்கவே உள்ளது என்றும் தன் உள்ளம் எந்நேரமும் விஷ்ணுவின் அன்பையே சிந்தித்து மகிழ்கிறது என்றும் தன்னை விஷ்ணுவிற்காகவே அர்ப்பணித்துக் கொண்டு சதாகாலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருந்தார்.
பொய்கை ஆழ்வார் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஆறு திருக்கோவில்களை மங்களா சாசனம் செய்தார்கள். மங்களா சாசனம் என்பது கோயிலில் உள்ள இறைவனை போற்றி பாடுவதாகும். அந்த ஆறு கோயில்கள் திருவரங்கம், திருவெக்கா, திருக்கோவிலூர், திருப்பரமபதம், திருப்பதி, திருப்பாற்கடல் என்பதாகும். இவர் பேய் ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்.
பக்தியால் பெருமாளை கண்ட பொய்கை ஆழ்வார்:
வைணவர்களால் நம்பிக்கையுடன் போற்றப்படும் வரலாறு உண்டு. பெருமாள் ஒரு முறை பொய்கை ஆழ்வாரை பூதத்தாழ்வாரோடும் பேயாழ்வாரோடும் சந்திக்க வைத்து மூவருக்கும் தன் திவ்ய ரூபத்தைக் காட்டி அவர்களின் பக்தியை உணரச் செய்ய ஒரு எண்ணம் கொண்டார். மூன்று ஆழ்வார்களும் தனித்தனியாக தல யாத்திரை மேற்கொண்டு திருக்கோவிலூருக்கு ஒரே சமயத்தில் நுழைகின்றனர். அப்போது பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு மிருகண்டு மாளிகையின் உள்ள நடைபாதையில் ஒதுங்குகின்றன. அந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம் மூவர் நிற்கலாம் என்று அளவிற்கு இடமிருந்தது. அதனால் மூன்று ஆழ்வார்களும் நின்று கொண்டு திருமாலின் புகழை பாடிக்கொண்டிருந்தனர்.
Also Read: நவம்பர் மாதம் ராசிபலன்கள்.. துலாம் முதல் மீனம் வரை!
சிறிது நேரம் கழித்து நான்காவதாக வந்தது யார் என்பதை இருளில் அறிய முடியவில்லை.இதனால் பொய்கை ஆழ்வார் திருமாலை மனதில் நினைத்துக் கொண்டு தாங்கள் வேண்டிய வரம் வேண்டும் என்று பாசுரம் பாடினார். இதன் பிறகு இருள் நீங்கி அந்த இடத்தில் நீண்ட நெடிய திருமால் இருப்பதை உணர்ந்தார். பிறகு மூன்று ஆழ்வார்களும் திருமாலின் சொரூபத்தை கண்டு அனுபவித்து தரிசித்து சென்றனர்.
பொய்கை ஆழ்வார் ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்று உணர்த்தியவர். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம் என்று கூறி ஹரியிடம் மிகுந்த பக்தி கொண்டு அவருக்கு சேவை செய்து வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும் இறைவனை பிரிந்து இருப்பதுதான் துன்பங்களுக்கு எல்லாம் காரணம் என்றும் பொய்கை ஆழ்வார் உணர்த்தினார்.