Karthigai Deepam: திருக்கார்த்திகை எப்போது? வீட்டில் தீபமேற்றும் வழிமுறைகள் இதோ!
Karthigai Deepam Fasting: கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டின் ஒளி விழாவாகும். எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் விளக்குகள் இந்திய கலாச்சாரத்தின் புனிதத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா சந்திரன் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி நட்சத்திரங்களுடன் இணையும் போது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகின்றது.
தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவபெருமானுக்கும் அக்னியில் உதித்த ஆறுமுக பெருமானுக்கும் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் டிசம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:50 மணிக்கு தொடங்கி டிசம்பர் 14 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 5:48 மணிக்கு முடிவடைகிறது.
கார்த்திகை தீப விரத முறை:
அன்றைய தினம் உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருந்து கொள்ளலாம். அன்றைய தினம் நாள் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்க முடியும் என்றால் இருக்கலாம். இல்லை என்றால் பால் மற்றும் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலை 6 மணிக்கு ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி விட்டு வீட்டிற்கு வந்து விளக்கேற்றி பூஜை செய்தவுடன் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கு ஏற்றி வழிபாடு செய்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
Also Read: கார்த்திகை ஏகாதசி வழிபாடு எப்படி செய்யணும் தெரியுமா? ஆன்மிகம் சொல்லும் முறை!
வழிபடும் முறை:
முந்தைய நாள் வீட்டையும் பூஜையறையும் சுத்தம் செய்து, சிலை வைத்து பூஜை செய்பவர்கள் என்றால் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானின் விக்ரகத்திற்கு அபிஷேக அலங்காரம் செய்யலாம். சிலை ஏதும் இல்லை என்றால் வீட்டில் உள்ள சிவபெருமானின் திருவுருவ படம் அல்லது முருகப்பெருமானின் திருவுருவப்படத்தை துடைத்து பொட்டு வைத்து தெய்வத்திற்கு உரிய மலர்கள் சாத்தி வழிபாடு செய்யலாம்.
நெய்வேத்தியம்:
இந்த நாளன்று நெல் பொரியும், அவல்பொரியும் வெல்லப்பாகில் இட்டு பரம்பொருளான சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம். சிலர் சாதம், வடை, பாயாசம் செய்து படைப்பார்கள். பிறகு விளக்கேற்றும் போது இல்லக விளக்கது இருள் கெடுப்பது என்ற தேவார பாடலை பாடி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிவிட்டு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு சாற்றி தீப தூப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
வீட்டில் தீபம் ஏற்றும் முறை:
கார்த்திகை தீபத்தின் போது ஏற்றப்படும் சிறிய களிமண் விளக்குகள் அக்னி லிங்கத்தின் சிறிய பிரதிகள் என்று நம்பப்படுகின்றது வீட்டில் மூன்று நாட்கள் தீபமேற்ற வேண்டும். அவை பரணி அன்றும் கார்த்திகை அன்றும் அடுத்த நாளும் ஏற்ற வேண்டும் மண்ணினால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தான் தீபம் ஏற்ற வேண்டும். பூஜை அறையில் மாவிளக்கு போட வேண்டும்.
நல்லெண்ணெய், நெய் அல்லது பஞ்ச தீப எண்ணெய் இதில் எதை வேண்டுமானாலும் விளக்கில் ஊற்றி ஏற்றலாம். நூல் திரி அல்லது பஞ்சு திரி போட்டு ஏற்றலாம். விளக்கை வாழை இலை, அரச இலை அல்லது ஒரு தட்டின் மீது வைத்து ஏற்ற வேண்டும். கீழே வைக்கக் கூடாது. வாசலில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். பூஜையறையில் இரண்டு விளக்குகளும் சமையலறை, பின்வாசல் என எல்லா இடங்களிலும் வைக்கலாம்.
எத்தனை விளக்கு வேண்டுமானாலும் வைக்கலாம் எந்த கணக்கும் கிடையாது. இதை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஏற்றலாம். திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு திசை நோக்கி ஏற்றினால் திருமண தடை அகலும். எந்த காரணத்தை கொண்டும் தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
Also Read: திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கை.. ஆன்மிக வரலாறு இதுதான்!
தீபத் திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்களாவது ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமாக குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திர தோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். ஐந்து முகம் ஏற்றினால் சகல நன்மைகளும் உண்டாகும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கை மற்றும் தகவலின்படி மட்டுமே எழுதப்பட்டது)