5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Navarathiri Viratham: நன்மைகளை அள்ளித்தரும் நவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு இல்லங்கள் மற்றும் கோயில்களிலும் கொலு வழிபாடு நடைபெறும். இதில் பங்கேற்பதால் மிகப்பெரிய பலன்கள் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கொலுவானது ஒன்பது நாட்கள் வைக்கப்படும். புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தான் நவராத்திரி திருவிழா தொடங்கும். அந்த வகையில் நடப்பாண்டு அக்டோபர் 3 தேதி நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது.

Navarathiri Viratham: நன்மைகளை அள்ளித்தரும் நவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Sep 2024 19:15 PM

நவராத்திரி விரதம்: புரட்டாசி மாதம் வந்து விட்டாலே நம் அனைவருக்கும் நவராத்திரி திருவிழா தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு இல்லங்கள் மற்றும் கோயில்களிலும் கொலு வழிபாடு நடைபெறும். இதில் பங்கேற்பதால் மிகப்பெரிய பலன்கள் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கொலுவானது ஒன்பது நாட்கள் வைக்கப்படும். புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தான் நவராத்திரி திருவிழா தொடங்கும். அந்த வகையில் நடப்பாண்டு அக்டோபர் 3 தேதி நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது. அக்டோபர் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படும் இப்பண்டிகையின் போது கொலு வைக்காதவர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். முடிந்தவர்கள் 9 நாட்களும், முடியாதவர்கள் 3, 5 அல்லது ஏழு நாட்களும் விரதம் இருக்கலாம். நவராத்திரி என்பது அம்பிகைக்குரிய முக்கிய விசேஷ தினங்களில் ஒன்றாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள் தான் இந்த விரத காலம் ஆகும்.

ALSO READ: Navaratri 2024: நவராத்திரி பண்டிகை.. கொலு வழிபாடு மேற்கொள்வது எப்படி?

மலைமகள், கலைமகள், அலைமகள் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரனை வதம் செய்ய விரதம் இருந்த தவக்காலம் தான் நவராத்திரி விரதமாக கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நவராத்திரி ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் வீரத்தை நல்கும் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை தரும் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் கல்வியை தரும் கலைமகளான சரஸ்வதி தேவியியையும் விரதமிருந்து வழிபாடு செய்வதால் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி இன்பம் செழித்தோங்கும் என நம்பப்படுகிறது.

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் ஒன்பது நாட்களும் வீட்டை சுத்தப்படுத்தி மாக்கோலம் இட வேண்டும். மேலும் நவதானியங்களை ஒரு மண் பாத்திரத்தில் புதைத்து நீர் விட்டு வளர்க்க வேண்டும்.. இதனை மூன்று லட்சுமியாக எண்ணி 9 நாட்களும் மலர்களால் அர்ச்சித்து விளக்கேற்றி வழிபட வேண்டும். இதில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவிக்கு குங்குமம் மற்றும் செந்நிற மலர்கள் ஆகியவற்றை கொண்டு பூஜை செய்யலாம். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கு செந்தாமரை வில்வம் இலைகளை கொண்டு பூஜை செய்யலாம். கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு பிடித்த தாமரை மலர், மகிழம்பூ கொண்டு அர்ச்சனை வழிபாடு செய்யலாம்.

எப்படி விரதம் இருக்கலாம்?

சிலர் 9 நாட்களும் ஒரே ஒரு வேளை மட்டுமே உணவு எடுத்துக்கொண்டு விரதம் இருப்பார்கள். சிலர் காலை பூஜை செய்வது தொடங்கி மாலையில் பூஜை செய்து முடிக்கும் வரை விரதம் இருந்து மாலை பூஜைக்கு பிறகு இரவு நேரத்தில் சாப்பிடுவார்கள். ஒரு சில பெண்கள் நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள். இவர்கள் மாலை நேரத்தில் சுமங்கலி பெண்கள் மற்றும் அருகில் உள்ள சிறுமிகளுக்கு தாம்பூலத்தில் மஞ்சள், குங்குமம், வளையல் வைத்து கொடுத்து விரதம் முடிப்பார்கள்.

இன்னும் சில பெண்கள் இந்த ஒன்பது நாட்களில் அம்மனுக்கு எந்த வகையான நைவேத்தியம் வைத்து பூஜை செய்கிறோமோ அதனை மட்டுமே உணவாக சாப்பிடுவார்கள். அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலவை சாதம், இனிப்பு வகை மற்றும் சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக வைக்கலாம்.பெரும்பாலும் விரதம் இருக்கும் பெண்கள் பழங்கள், பால், மோர் மற்றும் பழச்சாறு ஆகியவை மட்டுமே சாப்பிட வேண்டும். ஒருவேளை பழச்சாறு பிடிக்காதவர்கள் திட உணவாக எடுத்துக் கொள்ளாமல் கஞ்சி மாதிரி திரவ உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

நவராத்திரியில் விரதம் இருக்கும் பெண்கள் அதிக மசாலா சேர்த்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் மேலும் பூண்டு, வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் விரதம் இருப்பவர்கள் வீட்டில் சமைத்த உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து பழங்கள் தவிர வேறு எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது. அதே சமயம் இந்த ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டும்.

ALSO READ: Navarathri : நவராத்திரியின் போது அம்மனுக்கு எந்த நிற ஆடையை அணிந்து வழிபட வேண்டும்?

விரதம் இருப்பது உடலுக்கும் மனதுக்கும் ஆற்றலைத் தரும் என்பது நம்பிக்கையாகும். ஆனால் அதே நேரத்தில் ஆரோக்கியத்திலும் இது மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கும் என்பதால் மிகவும் கவனமுடன் விரதம் இருக்க வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம். மேலும் நார்ச்சத்து நிறைந்த காய்கறி வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம். விரதம் இருப்பதால் நீர்ச்சத்து குறைந்து சோர்வு உண்டாகும் என்பதால் நன்றாக தூங்க வேண்டும். மேலும் தேவையில்லாத வீண் பேச்சுக்கள் வாக்குவாதங்கள் செய்து உங்கள் ஆற்றலை இழக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)>

Latest News