Vastu Tips: வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க பூஜை அறை குறிப்புகள்..!
Pooja Room Vastu Tips: கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்றாலும் கோவில் கருவறையில் உள்ள மூலவருக்கு என்று ஒரு தனி சக்தி உள்ளது. அதே போலத்தான் நம்முடைய வீட்டில் பூஜை அறையில் உள்ள சாமிக்கும் சக்தி உள்ளது. பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனை கண்மூடி வணங்கினாலே மனதில் ஒரு நிம்மதி குடியேறும். எனவே வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க பூஜை அறையில் செய்ய வேண்டியது செய்யக்கூடாதது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்
திசை: நாம் வசிக்கும் இல்லங்களில் ஈசான்ய மூலையில் பூஜை அறை இருப்பது சிறப்பு. பூஜை அறையானது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தனி வீடாக இருந்தாலும் சரி அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் சரி பூஜை அறையில் வைக்கப்படும் சாமி படங்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்கும்படி வைப்பது சிறப்பு. தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. பூஜை செய்பவர்கள் வடக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளை பார்த்துக் கொண்டு, உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
கடவுளின் படங்களை வைத்திருக்கும் பூஜை அறையை நாம் எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனின் அருள் நம் வீட்டில் பரிபூரணமாக நிறைந்திருக்கும். முக்கியமாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருக்கும் பூஜை அறையை துடைக்கவோ பூஜை அறையில் உள்ள பூஜை பொருட்களை சுத்தம் செய்யவோ கூடாது. அதற்கு முதல் நாள் இரவே இதனை எல்லாம் செய்து முடிக்க வேண்டும். அது பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி முன்னதாகவே எல்லாவற்றையும் வைத்திருக்க வேண்டும்.
Also Read: Lord Murugan: வாழ்வை மாற்றும் முருகனின் 48 நாள் விரதம்.. எப்படி இருக்க வேண்டும்?
பூஜை செய்யும் முறை:
பூஜை அறையில் சூரிய உதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜை செய்ய வேண்டும். பூஜை அறையில் இருக்கும் விக்கிரகமானது குடும்பத் தலைவரின் கட்டை விரல் அளவுக்கு தான் இருக்க வேண்டும். அதைவிட பெரிதாக சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது.
பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்கள்:
பூஜை அறையில் முதல் கடவுளான விநாயகர் பெருமான், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடிய பகவான் ஸ்ரீ நாராயணர், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது ராதையுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவம் என்றால் காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன், விசாலாட்சி, பால திரிபுரசுந்தரி மற்றும் லலிதாம்பிகை, ஜனலட்சுமி ஆகிய அம்பிகை படங்களும், கல்வி மற்றும் ஞானத்திற்கு அதிபதியான சரஸ்வதி படங்களை வீட்டில் பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டும். உங்கள் குலம் காக்கும் குலதெய்வம் படம் அது உக்கிரமான தெய்வமாக இருந்தாலும் கூட நிச்சயமாக பூஜை அறையில் வைக்க வேண்டும்.
உங்கள் இஷ்ட தெய்வத்தின் படத்தை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். வாசலுக்கு நேர் எதிரே வாசலை பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வழமை, வெற்றி, தன லாபம் ஆகியவற்றை அளிக்கக்கூடியது. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம், திரிசூலம், வேல் ஆகிய சின்னங்களை வாசலின் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரே ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும் அதிர்ஷ்டத்திற்கும் உதவும்.
பூஜை அறையில் வைக்க கூடாத படங்கள்:
உடைந்த படங்களையோ பின்னமான சிலைகளையோ வீட்டில் பூஜையறையில் வைத்து பூஜை செய்யக்கூடாது. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாசலபதி, லட்சுமி, குபேரர் ஆகிய படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
Also Read: Spiritual: சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம்… வழிபடும் முறையும் பலன்களும்..!
தீபம்:
பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எரியும் வகையில் ஏற்ற வேண்டும். பூஜையறையில் சூரிய உதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறை விளக்கேற்றுவது நல்லது. வீட்டில் சனி பகவானுக்கு என்று எள். தீபம் ஏற்றக்கூடாது அதேபோல எலுமிச்சை தீபமும் பூஜை அறையில் ஏற்றக்கூடாது. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு தான தர்மங்கள் செய்து விட வேண்டும். விளக்கு ஏற்றிய பின்பு செய்யக்கூடாது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)