Lord Murugan: வாழ்வை மாற்றும் முருகனின் 48 நாள் விரதம்.. எப்படி இருக்க வேண்டும்?
48 Days Fasting for Lord Murugan: கேட்ட வரம் கிடைக்கும் 48 நாட்கள் சக்தி வாய்ந்த முருகப்பெருமான் விரதம். முருகப் பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு விரதம் இருக்கும் முறை பல உண்டு. முருகப்பெருமானுக்கு இருக்கப்படும் மிக நீண்ட விரதம் என்றால் அது ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதம் தான். இது 7 நாட்கள் கடைபிடிக்கப்படும் விரரமாகும். இது தவிர முருகப் பெருமானிடம் கேட்ட வரம் கிடைக்க வேண்டும் என்கிறவர்கள் இருக்கும் விரதம் ஒன்று உள்ளது. அது சக்தி வாய்ந்த 48 நாட்கள் விரதம். விரதம் தொடங்கும் முறை, விரதம் இருக்கும் முறை, வழிபடும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
முருகப்பெருமான் நமக்கு தந்தையாகவும் தாயாகவும் இருந்து காப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நம்பினார் கெடுவதில்லை என்பார்கள். அது போல முருகப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து சில குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி விரதம் இருந்து வழிபட்டால் நாம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டாலும் முருகப்பெருமான் நிச்சயம் தருவார் என பக்தர்கள் உறுதியாக கூறுகின்றனர். இந்த விரதத்தை அனுஷ்டிப்பது அவ்வளவு சுலபமில்லை. தன்னுடைய அருளுக்கு நீங்கள் தகுதியானவராய் என்பதை சோதிக்க முருகப்பெருமான் சில சோதனைகளை தருவார். இந்த சோதனைகளில் வெல்பவர்கள் மட்டுமே முருகப்பெருமானின் முழு அருளையும் பெற்று விரதத்தை முடிக்க முடியும்.
மூன்று விதமான விரதங்கள்:
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மூன்று விதமான விரதங்கள் இருப்பது வழக்கம். சஷ்டி திதியில் விரதம் இருப்பது திதி விரதம் எனப்படும். விசாகம், கிருத்திகை, பூரம், பூசம் நட்சத்திரங்களில் இருப்பது நட்சத்திர விரதம் எனப்படும். செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருப்பது கிழமை விரதம் எனப்படும். மாதத்திற்கு இரண்டு என்று வளர்பிறையில் ஒரு சஷ்டியும் தேய்பிறையில் ஒரு சஷ்டியும் இரண்டு சஷ்டி திதிகள் வரும். இவற்றில் பிரச்சனைகள் தீர வேண்டும், நோய்கள் தீரவேண்டும் என்கின்றவர்கள் தேய்பிறை சஷ்டியிலும், வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும் என்பவர்கள் வளர்பிறை சஷ்டியிலும் விரதம் இருக்கலாம். இந்த விரதம் இருப்பதற்கு பல சோதனைகள் வரும். அவையெல்லாம் தாண்டி இந்த விரதத்தை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள்.
ஏன் 48 நாட்கள் விரதம்?
பொதுவாக சபரிமலை ஐயப்பனுக்கு தான் 48 நாட்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த 48 நாட்கள். அனைத்து கிரகங்களும் அனைத்து நட்சத்திரங்களும் ராசிகளும் முருகப் பெருமானுக்குள் அடக்கம் என்பார்கள்.
விரத முறை:
48 நாட்களும் உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு நீங்கள் உணவு எடுத்துக்கொண்டு விரோதத்தை மேற்கொள்ளலாம். தினமும் ஏதாவது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம. பால் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் மூன்று வேளையும் சைவமாக சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மற்றபடி உங்களின் அன்றாட பணிகளை செய்யலாம். முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் இருக்க துவங்கும் போது முருகப்பெருமானுக்கு உகந்த ஏதாவது ஒரு நாட்களில் இருந்து தொடங்கலாம். உதாரணமாக செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை நட்சத்திரம், விசாக நட்சத்திரம் ஆகியவற்றில் இருந்து துவங்கலாம்.
Also Read: Surasamharam: சூரனை வதம் செய்த முருகன்.. சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு!
பெண்கள் மாதவிடாய் வரும் நாட்களில் மட்டும் விரதம் இருப்பதை தவிர்த்து மற்ற நாட்களில் இருக்கலாம் மாதவிடாய் முடிந்த அடுத்த நாளில் இருந்து விரதத்தை துவங்கினால் தொடர்ந்து 27 அல்லது 28 நாட்கள் விரதம் இருக்கலாம். அதற்கு பிறகு மீண்டும் மாதவிடாய் முடிந்ததற்கு அடுத்த நாளை 29 ஆவது நாளாக கணக்கில் எடுத்துக்கொண்டு விரதத்தை தொடர்ந்து இருக்கலாம். குழந்தை வரம் வேண்டி இந்த விரதத்தை இருப்பவர்கள் விரதம் இருக்கும் 48 நாட்களும் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது முருகன் அருளோடு கூடிய ஒரு குழந்தை பிறப்பதற்கு உங்களின் மனமும் உடலும் தயாராவதற்கு இந்த 48 நாட்கள் விரதம் உங்களுக்கு அவசியம்.
வழிபாட்டு முறை:
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீர் அணிந்து, விரதம் துவங்கும் நாளில் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு வீட்டிற்கு வந்து முருகப்பெருமானின் விக்ரகம், சக்கரம் அல்லது வேல் வைத்து பூஜை செய்பவர்கள் என்றால் அவற்றிற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யலாம். படம் வைத்து பூஜை செய்பவர்கள் என்றால் படத்தை துடைத்து பொட்டு வைத்து முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வரளி, செம்பருத்தி, வில்வம் மற்றும் வேறு வாசனை மலர்களை சாத்தலாம். நெய்வேத்தியமாக கல்கண்டு கலந்த பால், தேன், திணை மாவு, பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல், பாயசம் என்று உங்களால் எது முடியுமோ அதனை செய்து தினமும் நெய்வேதியமாக சமர்ப்பிக்கலாம்.
தினமும் காலை மாலையில் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். ஓம் சரவணபவ எனும் மந்திரத்தை 108 முறை சொல்லி பூஜை செய்யலாம் பாராயணம் செய்துவிட்டு தேங்காய் பழம் சமர்ப்பித்து தீப தூப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்
Also Read: கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை… வழிபாடு செய்வது எப்படி?
நீங்கள் விரதம் முடிக்கும் 48வது நாள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று இரண்டு நெய் தீபம் போட்டுவிட்டு முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவருக்கு உங்கள் நன்றியை செலுத்தி விட்டு வீட்டிற்கு வந்து வழிபாடெல்லாம் முடித்துவிட்டு உங்கள் விரதத்தை நீங்கள் முடித்துக் கொள்ளலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)