5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Navratri: நவராத்திரி பூஜை முறை… 1ம் நாள் முதல் 9ம் நாள் வரை முழு விவரம்!

Navrathri: புரட்டாசி மாதம் என்றாலே நவராத்திரி பண்டிகை களை‌கட்டும். இந்த வருடம் அக்டோபர் 17ஆம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அற்புதமான 9 நாட்கள் தான் இந்த நவராத்திரி. நாம் என்னென்ன செய்தால் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்?

Navratri: நவராத்திரி பூஜை முறை… 1ம் நாள் முதல் 9ம் நாள் வரை முழு விவரம்!
லட்சுமி, சரஸ்வதி, துர்கா (Photo Credit: Getty Images)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 23 Sep 2024 21:30 PM

புரட்டாசி மாதம் என்றாலே நவராத்திரி பண்டிகை களை‌கட்டும். இந்த வருடம் அக்டோபர் 17ஆம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அற்புதமான 9 நாட்கள் தான் இந்த நவராத்திரி. இந்த நவராத்திரி நாட்களை மூன்று மூன்றாக பிரித்துக் கொள்ள வேண்டும். முதல் மூன்று நாள் துர்கா பரமேஸ்வரி வழிபாடு, அடுத்த மூன்று நாள் மகாலட்சுமி வழிபாடு, கடைசி மூன்று நாள் மகா சரஸ்வதி வழிபாடு.

துர்கா பரமேஸ்வரி வழிபாடு:

முதல் மூன்று நாள் துர்கா பரமேஸ்வரியை வணங்க வேண்டும். எல்லோர் வாழ்விலும் வெற்றி அவசியம். முதல் மூன்று நாளில் துர்கா பரமேஸ்வரியை வணங்கினால் உங்கள் வாழ்வில் வெற்றி உண்டாகும். துர்கா ஜெயத்தை கொடுக்கக் கூடியவள். நாம் எண்ணுகின்றவற்றையெல்லாம் செயலாகக் கூடியவள். இந்த மூன்று நாட்களில் அம்பாளுக்கு பிடித்த நைய்வேத்தியங்களை செய்ய வேண்டும்.

இல்லங்களுக்கு சுமங்கலியை அழையுங்கள். வீடு முழுவதும் மஞ்சளால் தெளித்து சந்தனம் பன்னீர் போன்ற வாசனை பொருட்களால் வீட்டை மணம் கமழச் செய்ய வேண்டும். மா இலை தோரணம் கட்டி மாக்கோலம் இடவேண்டும். அம்பாளை கலசத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும்.

துர்க்கையை மூன்று நாட்களும் மனதால் வழிபடும் பொழுது துர்கா பரமேஸ்வரி பரிபூரண அனுக்கிரகத்தை கொடுக்கிறாள். முதல் நாள் நைய்வேத்தியமாக வெண்பொங்கல், வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் வைக்க வேண்டும். இரண்டாவது நாளாக புளியோதரை, பயத்தம் பருப்பு சுண்டல் ஆகியவற்றை வைக்க வேண்டும். மூன்றாவது நாள் சர்க்கரை பொங்கல், மொச்சை சுண்டல் வைக்க வேண்டும்.

மகாலட்சுமி வழிபாடு:

இரண்டாவது மூன்று நாள் மகாலட்சுமி வழிபாடு. லட்சுமி தேவி வருமானத்தை அதிகப்படுத்துபவர். வீட்டுப் பெண்கள் அனைவருக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்க இந்த மூன்று நாட்களும் லட்சுமி தேவியை வழிபட வேண்டும். லட்சுமிதேவி வழிபடும் பொழுது காரியங்கள் எல்லாம் சீக்கிரம் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு விரைவில் குழந்தை உண்டாகும்.

மகாலட்சுமிக்கு பிடித்த நைய்வைத்தியங்களை படைக்க வேண்டும். நான்காவது நாள் அதாவது மகாலட்சுமி வழிபாட்டில் முதல் நாள் நைய்வைத்தியமாக கதம்ப சாதம் மற்றும் பச்சை பட்டாணி சுண்டல் வைக்க வேண்டும்.

ஐந்தாவது நாள் தயிர் சாதம் மற்றும் வேர்க்கடலை வைக்க வேண்டும். ஆறாவது நாள் தேங்காய் சாதம் மற்றும் கடலைப்பருப்பு சுண்டல் நைய்வைத்தியமாக வைக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது இரண்டாவது மூன்று நாட்கள் மகாலட்சுமி நம் இல்லங்களில் அனுகிரகம் செய்வாள்.

மகா சரஸ்வதி வழிபாடு:

இறுதி மூன்று நாள் மகா சரஸ்வதி வழிபாடு. நமக்கு வெற்றி வேண்டுமென்றால் அதற்கு ஞானம் வேண்டும். அத்தகைய ஞானத்தை கொடுக்கக் கூடியவர்களாக சரஸ்வதி இருக்கிறாள். சரஸ்வதி தேவியை வழிபடும் போது நல்ல அறிவு, ஞானம் ஏற்படுகிறது. அதனால் காரியங்களில் வெற்றி நிச்சயம் ஏற்படும். இதனால் நம்முடைய செயல் திறன் வெளிப்படும். சரஸ்வதியின் அனுக்கிரகத்தைப் பெற கடைசி மூன்று நாட்கள் மகா சரஸ்வதி வழிபாடு செய்ய வேண்டும்.

சரஸ்வதிக்கு பிடித்த நைய்வேத்தியமாக ஏழாவது நாள் எலுமிச்சை பழ சாதமும் வெள்ளை பட்டாணி சுண்டலும் படைக்க வேண்டும். எட்டாவது நாள் பச்சரிசி அல்லது பயித்தம் பருப்பு பாயாசம் மற்றும் காராமணி சுண்டல் ஆகியவற்றை படைக்க வேண்டும். கடைசி நாளான ஒன்பதாவது நாளில் அக்காரவடிசல் மற்றும் கொண்டக்கடலை சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

Also Read: Navarathri : நவராத்திரியின் போது அம்மனுக்கு எந்த நிற ஆடையை அணிந்து வழிபட வேண்டும்?

வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டியது:

மறுநாள் விஜயதசமி அன்று புட்டு, சிவப்பு காராமணி ஆகியவட்டி நைவேத்தியமாக படைத்து அனைவருக்கும் கொடுக்கலாம். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு ஜாக்கெட் பிட், சுமங்கலி செட், மருதாணி, தட்சனை ஆகியவற்றை கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும் பெண்களில் யாராவது ஒருவர் அம்பாளாக இருப்பதால் அவரை குளிர்விக்க வேண்டி இதையெல்லாம் கொடுக்க வேண்டும்.

அதைப்போல் வீட்டுக்கு வருபவர்களுக்கு முதல் நாள் வாழைப்பழம் கொடுக்க வேண்டும். இரண்டாவது நாள் மாம்பழமும் மூன்றாவது நாள் பலாப்பழம் அல்லது பலாச்சுளை கொடுக்க வேண்டும். நான்காவது நாள் பொய்யா பழமும் ஐந்தாவது நாள் மாதுளை பழமும் ஆறாவது நாள் ஆரஞ்சு பழமும் கொடுக்க வேண்டும். அதைப்போல் ஏழாவது நாள் பேரிச்சம் பழமும் எட்டாவது நாள் திராட்சை பழமும் ஒன்பதாவது நாள் நாவல் பழமும் கொடுக்க வேண்டும்.

வந்தவர்களை திருப்திப்படுத்தி அனுப்பினாலே இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தி என்ற மூன்று தேவிகளும் செய்து நம் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். எனவே நவராத்திரி கொண்டாடுவோம். நம் வாழ்க்கை வசந்தமாக இருக்கும் நாள்தோறும் நல்ல மாற்றங்களோடு இருக்கும். நவராத்திரி நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

Also Read: பண வரவு அதிகரிக்கணுமா? லட்சுமியின் அருள் பெருக இதை செய்யுங்கள்!

Latest News