5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாடு செய்வது எப்படி? முழு விவரங்கள்!

Purattasi Month: இந்த மஹாளய பட்சத்தில் எமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் எனவும் கருட புராணம் கூறுகிறது. அந்த நேரத்தில் அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளையோ பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களின் தாகமும் பசியும் தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.

புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாடு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
கோப்பு படம் (Photo Credit: Freepik)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 25 Sep 2024 21:35 PM

நம்முடைய வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள் கஷ்டங்களுக்கு பித்ருக்களின் சாபமும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். இந்த சாபங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுபடுவதற்கு ஏற்ற காலம் மஹாளய பட்ச காலமாகும். ஒரு மாதத்தின் சரி பாதியே பட்சம் எனப்படும். அமாவாசை நோக்கி செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் எனவும் பௌர்ணமி நோக்கி நகரும் நாட்கள் சுக்ல பட்சம் எனவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதேபோல மஹாளய பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட ஒரு காலமாகும்.முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வசிக்கும் நாட்களே‌ மஹாளயம் பட்சம் எனப்படுகிறது.

இந்த மஹாளய பட்சத்தில் எமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் எனவும் கருட புராணம் கூறுகிறது. அப்படி அவர்கள் வரும்போது தனது குடும்பத்தைச் சார்ந்தவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் நம்மைப் பற்றி நினைக்கிறார்களா?

நமக்கு உணவும் நீரும் தருவார்களா? என்ற ஏக்கத்தோடு வருவார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளையோ பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களின் தாகமும் பசியும் தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.

மஹாளய பட்ச நாள்:

மஹாளயம் பட்சம் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஏற்கனவே தொடங்கிவிட்டது. வருகின்ற அக்டோபர் 2ஆம் மஹாளய அமாவாசையுடன் மஹாளய பட்சம் முடிவடைகிறது. இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலம் என்பதால் இந்த நாட்களில் சுப காரியங்கள் எதுவும் நடத்தக்கூடாது. இந்த ஆண்டு மஹாள அமாவாசை புதன்கிழமை வருகிறது. புரட்டாசியில் வரும் புதன்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள்.

அமாவாசை திதி நேரம்:

மாதம் தோறும் அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதவர்கள் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசையில் விரதம் இருந்தால் 12 மாதங்களும் விரதம் இருந்ததற்கு சமம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மஹாளய அமாவாசை திதி அக்டோபர் 1 ஆம் தேதி இரவு 9:39 மணிக்கு தொடங்குகிறது. அதேபோல் அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை 12:19 மணியளவில் அமாவாசை திதி முடிவடைகிறது.

அன்றைய தினம் செய்ய வேண்டியது:

இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். நதிக்கரையிலோ கடற்கரையிலோ முன்னோரை நினைத்து கொஞ்சம் எள்ளு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும் பசியும் அடங்கிவிடும். அவர்களின் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தானங்கள் செய்தால் நன்மை பயக்கும். நதிக்கரைக்கோ கடற்கரைக்கோ போக முடியாதவர்கள் வீட்டில் மொட்டை மாடிக்கு சென்று சூரிய பகவானை வணங்கி கிழக்கு திசையில் நின்று கொண்டு வலது கையில் எள் எடுத்துக் கொண்டு பிறகு ஒரு தூய பாத்திரத்தை எடுத்து எள்ளின் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும்.

எள்ளின் மீது ஊற்றும் தண்ணீர் கை வழியாக பாத்திரத்தின் மீது விழவேண்டும். இதை செய்யும் பொழுது இறந்த நம் முன்னோர்களின் பெயரை கூறிக் கொண்டே செய்ய வேண்டும்.

பிறகு இந்த தண்ணீரை ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் ஊற்றி விடலாம். அது முடியாதவர்கள் வீடுகளில் செடி வளர்க்கும் தொட்டிகளில் ஊற்றி விடலாம். அதுவும் வசதி இல்லை என்றால் பாத்திரம் கழுவும் சின்கில் ஊற்றிவிடலாம். இந்த வழிபாடு நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் நமது நெருங்கிய நண்பர்கள், அண்டை வீட்டார்கள் போன்றவர்களுக்கும் செய்யலாம்.‌ இந்த வழிபாடு செய்யும்பொழுது அவர்கள் காலையிலேயே குளித்திருக்க வேண்டும்.

Also Read: அக்டோபர் மாத ராசிபலன்… ஆரோக்கியத்தில் கவனம்.. முதல் 6 ராசிக்கான பலன்கள்!

யாரெல்லாம் செய்யலாம்?

ஆண்களைப் பொறுத்தவரை பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் எள்ளும் தண்ணீரும் இறைக்கலாம். பெண்களைப் பொறுத்தவரை கணவன் உயிருடன் இருக்கும் வரை பெற்றோருக்கோ உடன் பிறந்தவர்களுக்கோ எள்ளும் தண்ணீரும் இறைக்க கூடாது. அதேப்போல் திருமணம் ஆகாத பெண்களும் எள்ளும் தண்ணீரும் இறைக்க கூடாது. பெண்கள் முன்னோர்களுக்கு விருப்பமான உணவுகளை படையல் போட்டு வணங்கலாம்.

தர்ப்பணம் கொடுக்கும் நேரம்:

எள்ளும் தண்ணீரும் காலை 6:00 மணிக்கு மேல் இறைக்க வேண்டும். ராகு காலம், எமகண்டம் இந்த நேரங்களை தவிர்த்து காலை 6 மணிக்கு மேல் பகல் 1 மணிக்குள் எள்ளும் தண்ணீரும் இறைத்துக் கொள்ளலாம். தர்ப்பணம் கொடுத்த பிறகு முன்னோர்களின் புகைப்படங்களை வைத்து வழிபடலாம். ஆனால் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது. முன்னோர்களின் புகைப்படங்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்த பிறகு தான் பூஜை அறையில் வழக்கமாக செய்யக்கூடிய தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

விரதம் இருக்கும் முறை:

யார் அந்த தினத்தில் தர்ப்பணம் கொடுக்கிறார்களோ அவர்கள் ஒருவேளை உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். படையல் போட்ட பிறகு பகல் ஒரு மணிக்கு மேல் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். சமையலில் வாழைக்காய் மற்றும் பூசணிக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

முடிந்தவரை நாட்டு காய்கறிகளை சமைக்க வேண்டும். மேலும் வடை, பாயாசம், அப்பளம் ஆகியவற்றுடன் முன்னோர்களுக்கு பிடித்த சைவ உணவுகளை மட்டும் சமைக்க வேண்டும். இந்தப் படையலை பூஜை அறையில் போடக்கூடாது. முன்னோர்களின் படங்களுக்கு முன்னால் போடலாம். முன்னோர்களின் படம் இல்லையென்றால் அடுப்படியின் மேடையில் போடலாம்.

படையல் போடும் முறை:

முன்னோர்களின் படத்திற்கு இடது புறமாக நுனி வாழை இலையில் சமைத்த அனைத்து உணவுகளையும் அந்த இலையில் படைத்து விட வேண்டும். முன்னோர்களின் படத்துக்கும் படையலுக்கும் தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். வாழை இலையை சுற்றி ஒரு ஸ்பூன் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும்.

இந்தப் படையல்களுடன் பாக்கு, வெற்றிலை மற்றும் வாழைப்பழங்கள் வைக்க வேண்டும். எமகண்டம், ராகு காலம் தவிர்த்து இந்த படையல்களை போடலாம். முன்னோர்கள் படத்திற்கு முன் ஏற்றிய விளக்கை பூஜை அறையில் பயன்படுத்தக்கூடாது.

விரதம் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு:

அன்றைய தினம் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வாழைப்பழம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

Also Read: தாலிக்கயிறு மாற்றப் போறீங்களா? – இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!

Latest News