Sri Valeeswarar Temple: தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் “வாலீஸ்வரர் ஆலயம்”!
பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர ராஜேந்திர சோழனால் கற்கோயிலாக மாற்றி கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. பொதுவாக முருகனின் கையில் சேவல் உருவம் பதித்த கொடி தான் இருக்கும். ஆனால் இங்கு சேவலையே தன் கையில் வைத்திருந்து சிம்ம வாகனத்தில் இருப்பது கோயிலின் சிறப்பாகும். அதேபோல் பைரவரின் வாகனமான நாய் நின்ற நிலையில் பைரவரின் வலது கை பக்கம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் இடது கை பக்கம் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில்: நாம் இந்த கட்டுரையில் திருப்பூர் மாவட்டம் சேவூரில் கோவில் கொண்டிருக்கும் அறம் வளர்த்த நாயகி உடனுறை வாலீஸ்வரர் எனும் கபாலீஸ்வரர் திருக்கோயில் பற்றி காணலாம். பொதுவாக கோ என்றால் பசு என்று பொருள். அதேபோல் சே என்றால் மாடு என்று பொருள்படும். அதனால் இந்த ஊர் இறைவனை ஆன்மீக அன்பர்கள் மாட்டூர் அரவா என அன்போடு அழைக்கின்றனர். புராணங்களின்படி சேவூரின் பெயர் ரிஷபபுரி என சொல்லப்படுகிறது. அதாவது இந்த ஊரில் மாடும் புலியும் ஒன்றாக விளையாடிய புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. மேலும் சேவூர் தான் கொங்கு நாட்டின் ஒரு பிரிவின் தலைநகராக திகழ்ந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. புகழ் பெற்ற அரசனான கரிகாலன் தான் இழந்த சோழ நாட்டை சேவூர் வாழ் இறைவனை வழிபாடு செய்த பின்பே படையெடுத்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
Also Read: October Events: நவராத்திரி முதல் தீபாவளி வரை.. அக்டோபரின் முக்கிய விசேஷ தினங்கள்!
விரும்பிய பதவிகள் தேடி வரும்
அதைப்போல் கிஷ்கிந்தாவை இழந்த வாலியும் இங்குள்ள இறைவனை வழிபட்ட பின்பே மீண்டும் கிஸ்கிந்தாவை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. அதனால் ஆட்சியில் இருப்பவர்களும், ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களும் கண்டிப்பாக சேவூர் வாழ் இறைவனான கபாலீஸ்வரனை ஒரு முறை பூஜித்தால் தான் விரும்பிய பதவிகள் தேடி வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு அடிக்கடி வருகை தருவது வழக்கமாக உள்ளது. ராமாயணம் நடைபெற்ற காலகட்டத்தில் இத்திருத்தலம் இருப்பதாக கூறப்பட்டதால் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு பழைய திருத்தலம் என கருதப்படுகிறது.
கோயிலின் தல வரலாறு
கொங்கு நாட்டை விஜயநகர பேரரசு 13ஆம் நூற்றாண்டில் 24 பிரிவுகளாக பிரித்தது. அதில் தற்போதுள்ள கோவை மற்றும் அவிநாசி வட்டப் பகுதிகளை கொண்ட இடம் ஆறை நாடு என அழைக்கப்பட்டது. இந்த ஆறை நாட்டில் அமைந்த ஊர் தான் சேவூர். தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்தில் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனாக வாலீஸ்வரர் அருள்பாலிக்கிறார். மாயாவி எனும் அரக்கன் கிஷ்கிந்தா பகுதி மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை வாலி கொன்று விட்டதால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டதாக சொல்லப்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் வண்ணம் வசிஷ்ட முனிவரிடம் சென்ற வாலி பரிகாரம் அருளுமாறு வேண்டினான். ஒரு கணம் யோசித்த அவர் வாலியிடம், காட்டின் வழியாக சென்றால் கடம்ப வனத்தை அடையலாம்.
அங்கு எந்த இடத்தில் மாடும் புலியும் ஒன்றாக விளையாடுகிறதோ அந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் இந்த தோஷம் நீங்கும் என சொன்னார். அதன்படி வாலி பயணத்தை தொடங்கிய நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாட்டின் முதுகின் மீது புலி விளையாடி கொண்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை வசிஷ்ட முனிவர் சொல்படி பிரதிஷ்டை செய்து பிரம்மஹத்தி தோசத்தை நிவர்த்தி செய்து கொண்டான். வாலி பிரதிஷ்டை செய்ததால் இந்த சிவபெருமான் வாலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார் கோவிலில் சோழர் மற்றும் பாண்டிய மன்னர்கள் காலத்திய 16 கல்வெட்டுகள் உள்ளன.
Also Read: Viral Video: வழிகாட்டி பலகை மீது ஏறி உடற்பயிற்சி.. நெடுஞ்சாலையில் இளைஞர் விபரீதம்!
தொழில் முன்னேற்றம் ஏற்பட அபிஷேகம்
பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி தன் கையில் வைத்திருக்கும் சொரூபமாக கபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர ராஜேந்திர சோழனால் கற்கோயிலாக மாற்றி கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. பொதுவாக முருகனின் கையில் சேவல் உருவம் பதித்த கொடி தான் இருக்கும். ஆனால் இங்கு சேவலையே தன் கையில் வைத்திருந்து சிம்ம வாகனத்தில் இருப்பது கோயிலின் சிறப்பாகும். அதேபோல் பைரவரின் வாகனமான நாய் நின்ற நிலையில் பைரவரின் வலது கை பக்கம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் இடது கை பக்கம் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் கோயிலின் வடபகுதியில் தெற்கு திசை நோக்கி கனகசபையில் அக்னி தாண்டவகோலத்தில் நடராஜப்பெருமான் சிவகாமி அம்மையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் பால், தயிர், கோமியம்,சாணம், நெய் ஆகிய பசுவின் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பஞ்சகவ்ய அபிஷேகம் மிகவும் பிரபலம். கபாலீஸ்வரருக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கையாகும்.
பஞ்ச கவ்ய அபிஷேகம் கதை
இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. முன்பொரு காலத்தில் ஏழை தச்சர் ஒருவர் தனது தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதால் மன வருத்தத்தில் இருந்ததாகவும், அவன் வியாபார நிமித்தமாக சேவூருக்கு வருகை தந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அங்கு கோயில் கொண்டிருந்த வாலீஸ்வரனின் ஆற்றலை அறிந்து தொடர்ந்து ஐந்து வாரம் இறைவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து தனது கஷ்டத்தை நீக்க வேண்டும் என வேண்டிக் கொண்டான். சரியாக ஐந்தாவது வாரம் இறை வழிபாடு முடித்துவிட்டு கோவிலை வலம் வரும்போது ஓர் அந்தணர் ஒருவரை சந்தித்தார்.
அவர் தற்சமயம் தான் துறவறம் பூண்டு காசிக்கு செல்ல உள்ளேன். தன்னிடம் உள்ள தானியங்களை அங்குள்ள அன்ன சத்திரங்களில் தானமாக வழங்க வேண்டும் என்பதால் அதனை எடுத்து செல்ல எருமை மாடு பூட்டப்பட்ட வண்டிகள் தேவை என கூறி அதற்கான தொகையை கொடுத்துள்ளார். இறைவனை வழிபட்டவுடன் தன்னுடைய கஷ்டம் நீங்க வழி கிடைத்ததாக எண்ணி ஒரு வார காலத்தில் அதனை செய்து தருவதாக தச்சர் உறுதி அளித்தார். முழு வீச்சில் வண்டிகள் எல்லாம் முடித்துவிட்டு கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்தணரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஊர் மக்களின் விசாரித்தும் அப்படி ஒரு அந்தணர் அந்த பகுதியில் இல்லை என தெரிவித்தனர். அப்போதுதான் அந்தணர் வடிவில் வந்து தனக்கு உதவியது இறைவன் வாலீஸ்வரர் என தெரிந்தது.
அதேபோல் வேமன் என்னும் அரக்கன் இப்பகுதி மக்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளான். அவன் ஆண்களை அறநெறியில் இருந்து தவறி நடக்க உத்தரவிட்டான். இதனால் கவலையடைந்த பெண்கள் அனைவரும் இக்கோயிலில் எழுந்தருளிய அம்மனிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த அம்மன் கையில் இருந்து அஸ்திரத்தை ஏவி அரக்கனை தாமரை மலராக்கி தன் கையில் ஏந்தி கொண்டாள்.
இதன் காரணமாக அறம் வளர்த்த நாயகி என பெயரினை அவள் பெற்றாள். சிதம்பரம் சென்று நடராஜரை வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதற்கு இணையான பலன் இக்கோயிலில் கிடைக்கிறது. அதனால் இக்கோயில் மத்திய சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் காலை 6 மணி முதல் 12 வரை வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். இந்த கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பஞ்ச கவ்ய அபிஷேகம் நடைபெறும். மேலும் வருடத்தில் ஆறு முறை நடராஜர் அபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)