5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chakrapani Swami Temple: திருமண தடையால் அவதியா? – தீர்வு வழங்கும் சக்கரபாணி பெருமாள்!

பரிகார வழிபாட்டு தலங்களுக்கு இக்கோயில் சிறந்து விளங்குகிறது. திருமண தடையால் அவதிப்படும் நபர்கள் தங்களுடைய ஜென்ம நட்சத்திர நாளில் இக்கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். பெருமாளை நெய் தீபம் ஏற்றி வணங்குவதால் விரைவில் திருமண யோகம் கைகூடும் என நம்பப்படுகிறது. அதேபோல் குழந்தை பேறு வேண்டுவர்கள் சக்கரபாணி பெருமாள் கோயிலுக்கு தம்பதியினர் சகிதமாக வந்து வழிபடலாம்.

Chakrapani Swami Temple: திருமண தடையால் அவதியா? – தீர்வு வழங்கும் சக்கரபாணி பெருமாள்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Oct 2024 14:00 PM

தூத்துக்குடி: திருமணம் பற்றி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய கனவுகள் என்பது இருக்கும். நமக்கு வரப்போகிற துணைவன்/ துணைவி பற்றி பல்வேறு விதமான எண்ணங்கள் இருக்கும். ஆனால் அந்த திருமணத்தை நடத்துவதற்குள் நாம் ஒவ்வொருவரும் படாதபாடு பட்டுவிடுவோம். குறிப்பாக கிரகங்களின் பலன்களால் திருமணத்தடை ஏற்படும். அதனை நிவர்த்தி செய்ய பல்வேறு விதமான வழிபாட்டு தலங்களும், பரிகாரங்களும் உள்ளது. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்று தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சக்கரபாணி திருக்கோயில். இந்த கோயில் திருநெல்வேலி – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வல்லநாடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இந்த கோயிலுக்கு பேருந்து மற்றும் தனியார் வாகனம் மூலம் சென்றடையலாம். பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் சக்கரபாணி பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்பு

சக்கர ஆயுதம் தாங்கி காட்சியளிப்பதால் இப்பெருமாள் சக்கரபாணி என அழைக்கப்படுகிறார். அவர் ஸ்ரீதேவி – பூதேவி சமேதமாக காட்சி தருகிறார். இவருக்கு ஆழி விளங்கும் பெருமாள் என்ற பெயரும் உண்டு. தமிழகத்தில் கும்பகோணம் மற்றும் வல்லநாட்டில் மட்டும் தான் பெருமாள் சக்கரபாணி தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். ஆழி என்றால் பழம், சர்க்கரை, சுண்ணம் கலந்த கலவையாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் இக்கலவை மற்றும் மூலிகை பூச்சுகளால் ஆன திருமேனியராக திகழ்கிறார். தென்மாவட்ட கோயில்களில் இந்த கோயிலில் மட்டும் தான் இப்படியான தோற்றத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

இந்த சக்கரபாணி கோயிலில் மூலவர் சக்கரபாணி பெருமாளுக்கு அபிஷேகம் எல்லாம் கிடையாது. உற்சவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு தான் அபிஷேகம் நடைபெறுகிறது. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகமானது நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு பெருமாளுக்கு துளசி சாற்றி நெய்தீபம் ஏற்றி வணங்கலாம். அவ்வாறு செய்வதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்குவதோடு, வாழ்க்கை மற்றும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் நீங்கி அனைத்தும் வெற்றிப் படிகட்டாய் அமையும் என சொல்லப்படுகிறது.

Also Read: Sri Valeeswarar Temple: தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் “வாலீஸ்வரர் ஆலயம்”!

மேலும் இங்கு தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது. பரிகார வழிபாட்டு தலங்களுக்கு இக்கோயில் சிறந்து விளங்குகிறது. திருமண தடையால் அவதிப்படும் நபர்கள் தங்களுடைய ஜென்ம நட்சத்திர நாளில் இக்கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். பெருமாளை நெய் தீபம் ஏற்றி வணங்குவதால் விரைவில் திருமண யோகம் கைகூடும் என நம்பப்படுகிறது. அதேபோல் குழந்தை பேறு வேண்டுவர்கள் சக்கரபாணி பெருமாள் கோயிலுக்கு தம்பதியினர் சகிதமாக வந்து நெய் தீபம் ஏற்றி வைத்து வணங்குவதோடு  மட்டுமல்லாமல் பால் பாயாசம் செய்து வழிபட்டால் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும் என்பது ஐதீகமாகும்.

சக்கரபாணி கோயிலின் முன் மண்டபத்தில் லட்சுமி ஹயக்ரீவர் மகாலட்சுமி தாயாரை தன் மடியில் அமர்த்தியபடி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி பச்சை பாசிப்பயிறு பரப்பி அதன் மீது நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதோடு தேன் நெய் வைத்தியம் செய்வதால் குழந்தைகள் கல்வி விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த சன்னதிக்கு அருகிலேயே தன்வந்திரி பகவான் காட்சியளிக்கிறார். நம்மையும் குடும்பத்தினரையும் பிடித்துள்ள நோய்கள் நீங்கவும், ஆயுள் கூடவும் இந்த பகவானுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

Also Read: Travel Tips: அக்டோபரில் சுற்றுலா செல்ல திட்டமா..? மலையேற்றம் செய்ய சிறந்த இடங்கள் இதோ!

மேலும் பெரியாழ்வார், ராமானுஜர், ஆஞ்சநேயர், நவநீதகிருஷ்ணன், விஸ்வசேனர், ஆகியோர்வும் இக்கோவிலில் தனித்தனியாக சந்நிதி உள்ளது. மேலும் பிரகார மண்டபத்தில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மற்றும் இந்த சிலையின் பின்புறம் ஸ்ரீயோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்கள். இதில் நரசிம்ம நரசிம்மருக்கு பானகம் நெய்வேத்தியம் செய்து வழிபாட்டால் நம்மை நெருங்கும் தீய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது.

சுற்றுவட்டாரத்தை சேர்ந்த தென் மாவட்ட மக்கள் அனைவரும் இக்கோயிலுக்கு வருகை தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எப்போதும் பக்தர்கள் கூட்டத்தால் சக்கரபாணி பெருமாள் கோயில் நிரம்பி வழியும். இந்த சக்கரபாணி ஆலயத்தில் காலை 7:30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5:30 மணி முதல் 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம். வாய்ப்பு உள்ளவர்கள் இக்கோயிலுக்கு ஒரு முறை சென்று தரிசனம் செய்து அதற்கான பலனை பெறுங்கள் என ஆன்மீக அன்பர்கள் தெரிவித்துள்ளனர்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News