Sabarimala: லட்சக்கணக்கில் பக்தர்கள்.. கோடியில் கொட்டும் சபரிமலை வருவாய்!
சபரிமலை வருவாய்: கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தொடங்கினர். பக்தர்களால் அளிக்கப்படும் காணிக்கை மற்றும் பிரசாதம் ஆகியவற்றின் வருவாய் சென்றாண்டை விட இந்த ஆண்டு ரூ.22.76 கோடி உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை சபரிமலையின் வருவாய் ரூ.150 கோடியை தாண்டி உள்ளது.
சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியதிலிருந்து வருவாய் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் பிஎஸ். பிரசாந்த் கூறுகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சன்னிதானத்தில் ரூ.22.76 கோடி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். டிசம்பர் 16 வரை 29 நாட்களில் 22 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர். இதனால் 163.89 கோடிகள் மொத்த வருவாய் கிடைத்துள்ளது.
பிரசாதம் விற்பனை மூலமாக ரூ.82.67 கோடியும் காணிக்கையாக ரூ.52.27 கோடியும் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு பிரசாத விற்பனை ரூ.65.26 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்பொழுது ரூ.17.41 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. இதுவரை சபரிமலைக்கு 22,67,956 பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டதாக விவரங்கள் தெரிவிக்கின்றது. இந்த காலகட்டத்தில் மொத்த வருவாய் ரூ.163.89 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Sabarimala Visit: சபரிமலையில் இருந்து திரும்பும்போது பக்தர்கள் செய்யக்கூடாதவை!
பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் சுமூகமாக தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் போர்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தேவஸ்தான போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்
வானிலை மற்றும் பேருந்து சேவை:
சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல வானிலை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் பக்தர்கள் அவசரம் இன்றி தரிசனம் செய்தனர். காலநிலை மாற்றம் பின்னடைவை ஏற்படுத்திய போதிலும் 18 வது படியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு KRSTC கோயம்புத்தூர் மற்றும் குமுளிக்கு தலா இரண்டு பேருந்து சேவைகளையும் தென்காசி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு பேருந்து சேவையையும் புதிதாக தொடங்கியுள்ளது. பம்பை பேருந்து நிலையத்திலிருந்து KSRTC நீண்ட தூரத்திற்கான சேவைகளை வழங்குகிறது. பக்தர்கள் இணையத்தின் மூலமாகவோ அல்லது நேரிலோ டிக்கெட் கொள்ளலாம்.
Also Read: Sabarimala Booking: சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்யவில்லையா? ஸ்பாட் புக்கிங் விவரம்!
ஸ்பாட் புக்கிங்:
சபரிமலைக்கு விர்ச்சுவல் வரிசை மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கான நுழைவு மற்றும் இணையதள முன்பதிவு கிட்டதட்ட முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் ஜனவரி வரை முன்பதிவுக்கு வேறு இடங்கள் இல்லை. இதற்கு தீர்வாக பம்பை மற்றும் எரிமேலியில் இருந்து ஸ்பாட் புக்கிங் செய்யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சரியான அடையாள அட்டையை எடுத்துச் சென்று ஸ்பாட் புக்கிங் செய்து கொள்ளலாம். வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் டேக் கொண்ட வாகனங்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஃபாஸ்ட் டேக் இல்லாதவர்களுக்கு பார்க்கிங் வழங்கப்படவில்லை. எனவே KSRTC சட்டில் சர்வீஸ் மூலமாக பம்பையை அடைந்து அங்கிருந்து செல்லலாம்.