திருவண்ணாமலை மகா தீபத்தின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

Maha Deepam: திருக்கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகா தீபத்தை நேரில் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள். இந்த சிறப்புமிக்க மகா தீபத்தின் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

திருவண்ணாமலை மகா தீபத்தின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

26 Nov 2024 17:14 PM

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் ஒருங்கிணையும் நாள் தான் திருக்கார்த்திகை நாள் என்று கொண்டாடப்படுகிறது. சிவனை அக்னி வடிவமாக தீபம் ஏற்றி நமது வீடுகளில் வழிபாடு செய்யப்படும். இல்லங்களில் ஏற்றப்படும் தீபங்களில் தெரியும் ஜோதியில் சிவனே தெரிகிறார் என்று நம்பப்படுகிறது. சிவபெருமான் அக்னி வடிவில் வந்து மனிதர்களிடம் நான் என்ற அகந்தையை ஒழிக்குமாறு கூறப்படும் நாள் தான் இந்த திருக்கார்த்திகை என்று சொல்லப்படுகிறது.

பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவன் என்ற போட்டியின் முடிவில் இருவரும் தோல்வியை தழுவி அவர்கள் இருவருக்கும் மேலானவன் சிவன் என்பதை இந்த உலகத்திற்கு அறிய செய்த நாள் இந்த கார்த்திகை திருநாள். எனவே இந்த நாளில் சிவனுக்கு மேலானோர் யாரும் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மலை மேல் ஏற்றப்படும் தீபத்தின் சிறப்புகள்:

இந்த மலை மேல் சுமார் ஆறு அடி உயரமும் 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் சுமார் 3500 கிலோ நெய் ஊற்றி ஆயிரம் மீட்டர் காடா துணியை திரியாக்கி கற்பூரத்துடன் சேர்த்து தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் 11 நாட்களுக்கு எரியும் மலையை சுற்றி சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவு வரை திருக்கார்த்திகை தீபத்தை தரிசிக்கலாம்.

அந்த ஊரில் உள்ள மக்கள் மலை மீது தீபம் ஏற்றிய பிறகுதான் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்று வழிபடுவார்கள். மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். சிவனடியார்களுக்கு வழியெங்கும் அன்னதானம் வழங்கப்படும்.

Also Read: Karthigai Deepam: எந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

இந்த மகா தீபத்தை ஏற்ற ஐந்து நபர்கள் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். இவர்களுக்கு அண்ணாமலை கோயிலில் பரிவட்டம் கட்டப்படுகிறது. இந்த சிவாச்சாரியார்கள் தீபச்சுடரை ஒரு மண்சட்டியில் வைத்து மலை மீது எடுத்துச் செல்கிறார்கள்.

2668 உயரம் அடி கொண்ட இந்த மலை உச்சிக்கு செல்பவர்கள் மேளதாளத்துடன் சிவபுராண பாடல்களை பாடிக்கொண்டு செல்வார்கள். மாலை 5:58 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவார். அந்நேரம் கோயில் கொடிமரம் அருகே பர்வத ராஜகுல வம்சத்தினர் தீபம் ஏற்றுவார்கள். அதன் பிறகு மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

கோயிலின் சிறப்பம்சங்கள்:

திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னித் தலம். நினைத்தாலே முத்தி கொடுக்கும் தலம். ஈசன் ஜோதியாக நின்ற தலம். ஏகன் அனேகன் ஆகி அனேகன் ஏகனான தலம்.‌பிரம்மன் மற்றும் திருமாலின் ஆணவம் அழிந்த தலம். மும்மூர்த்திகள் சேர்ந்து சிவலிங்கமாக உருவெடுத்த தலம். ஈசன் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளித்த தலம்.

சைவ குரவர்கள் நால்வராலும் பாடப்பட்ட தலம். விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படையான தலம். அருணகிரிநாதர் திருப்புகழ் பாட முருகன் அடி எடுத்துக் கொடுத்த தலம். ஆதாரத் தலங்களில் இது மணிபூரக தலம். பௌர்ணமி கிரிவளத்திற்கு பிரசித்தி பெற்ற தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.‌ மலை உச்சியில் ஏற்படும் மகா தீபத்தால் உலகப் புகழ் பெற்ற ஸ்தலம்.

தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று. 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் 9 கோபுரங்கள், ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 306 மண்டபங்கள் ஆகியவை அமைந்துள்ளது. சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் கோவிலில் உள்ளே இருக்கிறது. சோழ மன்னர்கள் முதல் நாயக்கர் மன்னர்கள் வரை இந்த கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்.

Also Read: Karthigai: கார்த்திகை அமாவாசை.. லட்சுமி தேவி அருளை பெற சொல்ல வேண்டியவை!

தீபங்களின் வகை:

பொதுவாக ஆலயங்களில் ஏற்றுப்படும் தீபம் மூன்று வகைப்படும். அவை குமாராலய தீபம், சர்வாலய தீபம் மற்றும் விஷ்ணு ஆலய தீபமாகும். குமாராலய தீபம் என்பது கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானின் ஆலயங்களில் ஏற்றப்படுவது. சர்வாலய தீபம் கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை சிவாலயங்களில் ஏற்றப்படுவது. விஷ்ணு ஆலய தீபம் கார்த்திகை மாதம் அஷ்டமி திதியில் பெருமாள் கோவில்களில் ஏற்றப்படுவது ஆகும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

 

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!