Pillayar Viratham: பல நோய்களை தீர்க்கும் கார்த்திகை மாத “பிள்ளையார் விரதம்”!
Lord Vinayagar: எந்தவொரு செயல் எடுத்தாலும் அதில் விநாயகர் பெருமான் இல்லாமல் தொடங்கப்பட்டாது. அப்படியிருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று அருகம்புல் மீது விநாயகரை வைத்து பிள்ளையார் விரதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
விநாயகரை நாம் முழு முதற்கடவுளாக வழிபடுகிறோம். எந்தவொரு செயல் எடுத்தாலும் அதில் விநாயகர் பெருமான் இல்லாமல் தொடங்கப்பட்டாது. அப்படியிருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று அருகம்புல் மீது விநாயகரை வைத்து பிள்ளையார் விரதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த விரதமானது கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த விரதத்தை கடைப்பிடித்தால் நம்மையும் நம் குடும்பத்தினரையும் ஆட்கொண்டுள்ள நோய்கள் அனைத்தும் காணாமல் போகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த விரதத்திற்கு பின்னால் சொல்லப்படும் புராண காரணங்களில் தெரிந்து கொள்வோம்.
சினம் கொண்ட விநாயகர்
எமனின் மகனான அனலன் தவமிருந்து பிரம்மதேவனை தரிசித்து வரம் ஒன்றை பெற்றான். அதன்படி யாருக்கும் தெரியாமல் அவர்களது உடலில் புகுந்து மொத்த ஜீவ சக்தியையும் உருக்கி எடுத்து விட வேண்டும் என அலலன் வரம் வாங்கினான். அவனால் பாதிக்கப்பட்ட பலரும் நடைபிணமாக அலைய ஆரம்பித்தனர். உடம்பில் சக்தி இல்லாமல் சோர்ந்து போனார்கள். இதனால் மீதமிருந்த மக்கள் அனைவரும் பயத்தில் விநாயக பெருமானிடம் முறையிட்டனர்.
அனைவரின் குறைகளையும் தீர்க்கும் பொருட்டு சினம் கொண்ட விநாயகர் அனலனை தன் துதிக்கையால் அப்படியே எடுத்து விழுங்கினார். பெயருக்கு ஏற்றது போலவே அனலன் விநாயகர் உடலுக்கு சென்றவுடன் அவரது உடல் கொதிக்க ஆரம்பித்தது. சகலத்திலும் விநாயகர் நிறைந்திருப்பவர் என்பதால் அவர் உடல் கொதிக்க ஆரம்பித்த உடன் தேவர்கள், மாந்தர்கள் என எல்லோருடைய உடலும் கொதிக்க ஆரம்பித்தது.
Also Read: கார்த்திகை பௌர்ணமி.. சிவன் அருள் பெற வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகள்!
அருகம்புல் செய்த மாயம்
இதனால் தவித்துப்போன அவர்கள் தங்களுடைய கொதிப்பு நீங்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. அது விநாயகரை குளிர செய்வது தான் என தீர்மானித்தனர். மிகவும் குளிர்ச்சியான சந்திரனின் அமுத கிரகணங்களை விநாயகர் மீது பொழிந்தும், பாலை ஊற்றியும் எதுவும் பலனளிக்காமல் இருந்துள்ளது. அப்போது தேவர்கள் சிலர் 21 அருகம்புல்லை எடுத்து விநாயகரின் திருமேனி மீது சாற்றியதும் அவரது உடல் குளிரத் தொடங்கியது. இதனால் அனைவரது உடலும் குளிர்ந்தது.
இப்படியாக அருகம்புல்லின் மேன்மை விநாயகர் வழியாக வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதனை மையப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று இந்த பிள்ளையார் விரதமானது மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் நாம் விநாயகரின் பரிபூரண அருளை முற்றிலுமாக பெறலாம். நோய்கள் மட்டுமல்ல, வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பங்களும் இந்நாளில் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
Also Read: “பள்ளிக்கட்டு சபரிமலைக்கு” பாடல் உருவான விதம் தெரியுமா? – பிரமிக்க வைக்கும் தகவல்கள்!
வழிபடும் முறை
சுத்தமான இடங்களில் முளைத்திருக்கும் அருகம்புல்லையே இந்த விநாயகர் விரத வழிபாட்டிற்கு நாம் பயன்படுத்த வேண்டும். குறைந்தது மூன்று இன்ச் நீளமுள்ள அருகம்புல்லை தேர்வு செய்து அதன் மீது சிறிது மஞ்சள் நீரை தெளிக்க வேண்டும். வீட்டிற்கு அதனை கொண்டு வந்ததும் அதில் சிறிது பன்னீர் தெளித்து மனை பலகையில் விசிறி போல் பரப்ப வேண்டும். 21 அருகம்புல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்து மற்றவைகளின் நடுவில் சிறிய தலைவாழை இலை போட்டுக்கொள்ள வேண்டும்.
அதில் பச்சரிசி வைத்து ஸ்வஸ்திக் சின்னம் வரைய வேண்டும். பின்னர் ஒரு பித்தளை செம்பில் மஞ்சள் நிற நூலை சுற்றிக்கொள்ள வேண்டும். அதனுள் பச்சை கற்பூரம், ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு பொடி கலந்த நீரை ஊற்ற வேண்டும். அந்த கலசத்தின் நடுவில் மாவிலை கொடுத்து அதன் மேல் தேங்காய் வைத்து கலசமாக உருவாக்கி கொள்ள வேண்டும். அதில் சந்தனம், குங்குமம் மற்றும் பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். இதன்பின்னர் இரு பக்கங்களிலும் தீபங்களை ஏற்றி , கலசத்தின் முன்பு விநாயகரை வைக்க வேண்டும்.
21 அருகம்புல்லை தனியாக வைத்திருக்க சொல்லியிருந்தோம். அதனை எடுத்துக் கொண்டு பிள்ளையார் துதி பாடல்களை பாடி வணங்க வேண்டும். பின்னர் விநாயகரின் 21 நாமங்களை சொல்லி அருகம்புல் அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது 3 வகை மலர்களுடன் தேங்காய், கொழுக்கட்டை, கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி என முடிந்த அளவு அனைத்தையும் பூஜையில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் பூஜையில் வைக்கப்பட்டுள்ள கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை அக்கம் பக்கத்தினருக்கு விநியோகம் செய்ய வேண்டும்.